பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு விதியை மீறி எவ்வித சலுகைகளும் வழங்கப்படவில்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்யப்பட்டதாக சிறைத்துறை டிஐஜி-யாக இருந்த ரூபா புகார் தெரிவித்தார். மேலும், சிறப்பு சலுகை பெறுவதற்காக சசிகலா தரப்பினர், சிறைத்துறை டிஜிபி-யாக இருந்த சத்யநாராயணராவ் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக குற்றம்சாட்டியிருந்தார்.
ஆனால், இதனை சத்யநாராயணராவ் மறுத்தார். இது குறித்து கர்நாடக முதலமைச்சர் விசாரணை நடத்த உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இதைத்தொடர்ந்து, சசிகலா சிறையில் ஷாப்பிங் சென்று வருவது போல விடியோ வெளியானது தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், டி.டி.வி.தினகரன் அடையாறில் உள்ள தனது வீட்டில் வைத்து செய்தியார்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: சிறை அதிகாரிகளுக்கு இடையே உள்ள பிரச்சனையின் காரணமாக சசிகலா மீது புகார் தெரிவித்துள்ளனர்.
சிறை விதிகளின் படியே சசிகலாவிற்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. சாதாரண தண்டனை கைதிகள் போலவே சசிகலாவும் சிறையில் இருந்து வருகிறார். சாதாரண தண்டைனைக் கைதியாக, வழக்கமான ஆடைகளே சசிகலாவிற்கும் வழங்கப்பட்டுள்ளது. .
சிறையில் சசிகலாவுக்கு சலுகை வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ள புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சிறையில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை, சசிகலாவிற்கு எந்த வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை.
சசிகலா சிறையில் இருந்து ஷாப்பிங் சென்று வருவது போல் புகைப்படம் வெளியிடப்படுகிறது. இதன் மூலம் சிறையில் இருப்பவர்களை தேவையில்லாமல் வம்புக்கு இழுக்கிறார்கள். என்று கூறினார்.