'இரட்டை இலை' சின்னத்தை மீட்க தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக, டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்ட டிடிவி தினகரன், நிபந்தனை ஜாமீனில் கடந்த 3-ஆம் தேதி விடுவிக்கப்பட்டார்.
முன்னதாக, சிறைக்குச் செல்லும் முன், 'நான் கட்சிப் பணிகளில் இருந்து விலகிவிட்டேன்' என்று கூறியவர், சிறையில் இருந்து வெளியே வந்த போது, 'பொதுச் செயலாளரைத் தவிர என்னை யாரும் கட்சியில் இருந்து நீக்க முடியாது. எனது கட்சிப் பணிகள் தொடரும். சின்னம்மாவை சந்தித்த பிறகு, எனது அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்' என்றார்.
இந்நிலையில், பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க, தினகரன் தற்போது பெங்களூரு வந்தடைந்துள்ளார். அப்போது பத்திரிக்கையாளர்களிடம் பேசிய தினகரன், "சில அமைச்சர்கள் பயத்தின் காரணமாக என்னை கட்சியில் இருந்து விலகியிருக்கச் சொன்னார்கள். நானும் கட்சி இணைந்தால் சரி என விலகியிருந்தேன். ஆனால், 40 நாட்கள் ஆகியும் இதுவரை கட்சி இணைவதாக தெரியவில்லை. எனவே கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற நான் அதிகாரத்திற்கு வர வேண்டும் என கட்சித் தொண்டர்கள் வற்புறுத்துகின்றனர்.
இதுகுறித்து சின்னம்மாவிடம் ஆலோசனை பெறவே நான் இங்கு வந்துள்ளேன். கட்சியில் மூன்றாவது அணியெல்லாம் உருவாக நான் விடமாட்டேன். கட்சியை ஒற்றுமைப்படுத்துவதற்காக நான் போராடுவேன்" என்றார்.