டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருப்பது குறித்து முன்கூட்டியே ஏன் தகவல் தெரிவிக்கவில்லை என, குடகில் அவர்கள் தங்கியுள்ள சொகுசு விடுதியின் உரிமையாளருக்கு கர்நாடக காவல் துறை நோட்டீஸ் அனுப்பியது.
அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கடந்த மாதம் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றனர். இதையடுத்து, எம்.எல்.ஏ.க்கள் 19 பேரும் புதுச்சேரியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில், அரசின் ஆதரவை திரும்ப பெற்ற எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என, அதிமுக கொறடா ராஜேந்திரன், சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலுக்கு கடிதம் எழுதினார்.
இந்த கடிதம் குறித்து விளக்கம் அளிக்குமாறு 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் தனபால் தனித்தனியே நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்குவதற்காக கர்நாடக மாநிலம் தனியார் சொகுசு விடுதியில் 20 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டன.
இதையடுத்து, குடகு மாவட்டம் மடிகேரியில், காவிரி கரையோரம் உள்ள தனியார் சொகுசு விடுதிக்கு சனிக்கிழமை சென்றனர். இவர்களுக்கு ஆதரவாக, பெங்களூருவை சேர்ந்த அதிமுக அம்மா அணி ஆதரவாளர்களும் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கோவை பதிவெண் கொண்ட வாகனங்களில் தமிழக போலீசார் செவ்வாய் கிழமை திடீரென அந்த விடுதிக்கு சென்றனர்.
இதைத்தொடர்ந்து, காவல்துறை உயர் அதிகாரிகள் தற்போது அந்த விடுதிக்குள் சென்று டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்களிடம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், அவர்கள் தங்கியிருக்கும் விடுதியின் உரிமையாளருக்கு கர்நாடக காவல் துறை நோட்டீஸ் அனுப்பினர். எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் தங்கியிருப்பது குறித்து முன்கூட்டியே ஏன் தகவல் தெரிவிக்கவில்லை என, சந்திக்குப்பா காவல் நிலையம் நோட்டீஸ் அனுப்பியது, அங்கு தங்கியிருக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.