ஆட்சி, அதிகாரம் ஆகியவற்றைக் கொண்டு எதுவும் செய்ய முடியாது. தொண்டர்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கு தான் கட்சியும் இருக்கும் என டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் கூறியுள்ளார்.
டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் திடீரென வெள்ளிக்கிழமை மாலை ஆலோசனை நடத்தினர். இதன் பின்னர் எம்.எல்.ஏ குழுவுன் இணைந்து, வெற்றிவேல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது: எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா வடசென்னையில் வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. அது தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். அந்த கூட்டத்தில் டிடிவி தினகரன் உரையாற்றவுள்ளார் என்று கையில் வைத்திருந்த பிட்நோட்டீஸை எடுத்துக் காட்டியபடி கூறினார்.
எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ பன்னீர் செல்வம் அணியும் இணைவது குறித்து நீண்ட நாட்களாக முயற்சி மேற்கொண்டு வந்தனர். தற்போது என்ன நிலை என தெரியவில்லை, அவர்களின் முடிவு தெரிந்த பின்னர் தான் கருத்து கூற முடியும்.
இரண்டு அணிகளும் ஒன்றிணைந்தால் அவர்களுடன் டிடிவி தினகரன் அணி ஒன்றிணையுமா?
அவர்கள் எங்களுடன் ஒன்றிணைந்தால், நாங்களும் அவர்களுடன் ஒன்றிணைந்து செயல்படுவோம். கட்சி எங்களிடம் தான் இருக்கிறது. தொண்டர்களின் பலம் எங்களுடன் இருக்கிறது என்பதற்கு மதுரை மேலூர் கூட்டம் தான் சாட்சி.
பெரும்பலான சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களிடம் இருக்கும் நிலையில், ஆட்சி அதிகாரம் அவர்களிடம் உள்ளது. தற்போது மக்கள் செல்வாக்கு ஓபிஎஸ் வைத்திருக்கிறார் என்று சொல்லப்படும் நிலையில், அவர்கள் ஒன்றிணைந்தால், டிடிவி தினகரன் தரப்பு பலவீனமாகுமா?
வெள்ளையர்கள் இந்தியாவை ஆண்டபோது, வீரபாண்டிய கட்டபொம்மனை கேட்பாரற்று தூக்கில் போட்டனர். அதுபோல, எங்களை தூக்கில் போட்டு விடுவார்களா என்ன? ஆட்சி, அதிகாரம் ஆகியவற்றைக் கொண்டு செய்ய முடியாது. தொண்டர்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கு தான் கட்சியும் இருக்கும் என்று கூறினார்.