முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அச்சுறுத்தலினால் தான் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் சசிகலாவை சந்திக்கவில்லை என டிடிவி தினகரனின் ஆதரவாளரும்,தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-வுமான தங்கதமிழ் செல்வன் தெரிவித்துள்ளார். சென்னை அ உள்ள டிடிவி தினகரன் இல்லத்தில், அவரது ஆதரவு எம்.பி-க்கள் மற்றும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த கூட்டத்தின் போது, கட்சி தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டதாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ தங்கதமிழ் செல்வன் செய்தியாளர்களிடம் கூறினார். அவர் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசும்போது: மக்களையும், தொண்டர்களையும் சந்திக்க வேண்டும் என்ற சசிகலாவின் எண்ணத்தை, இந்த துரோக அரசு தடுத்து நிறுத்திவிட்டது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அச்சுறுத்தலின் காரணமாகவே, அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் சசிகலாவை சந்திக்கவில்லை. பதவிக்காக சசிகலா காலில் விழுந்து கெஞ்சியவர் தான் அமைச்சர் ஜெயக்குமார். கர்நாடக அரசு எந்த நிபந்தனைகளையும், விதிக்கவில்லை என்றும் சசிகலாவால் பதவிக்கு வந்த எடப்பாடி தலைமையிலான அரசு தான் பல நிபந்தனைகளை விதித்துள்ளது. சசிகலாவிற்கு வீட்டு சிறை போன்று ஒரு பரோல் வழங்கப்பட்டுள்ளது. அரசியல் தொடர்பான எந்த சந்திப்பையும் அவர் மேற்கொள்ளக்கூடாது என்பது வருத்தமளிப்பதாக உள்ளது.
இந்த ஆட்சியில் தான் டெங்கு காய்யலால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த ஆட்சி டெங்கு காய்ச்சலுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கவில்லை. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் தங்களது பதவிகளை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் தான் குறிக்ககோளாக இருக்கின்றனரே தவிர, மக்களைப் பற்றி கவலைப் பட்டதாக தெரியவில்லை. தற்போதைய நிலையில், சரியான முடிவு எடுத்து அரசு அதிகாரிகளிடம் வேலை வாங்குவதற்கு ஆள் இல்லை.
தற்போதைய நிலையில், தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 25,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 150-பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, தமிழகத்தில் டெங்கு ஆட்சி தான் நடைபெறுகிறது என்று திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் உறியது உண்மை தான். எங்களை தகுதி நீக்கம் செய்தது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அதில் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு தான் வரும். அதன் பின்னர், தமிழகத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு ஏற்படும் என்றார்.