Advertisment

சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் ஆணையிட வேண்டும்: அன்புமணி

சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆணையிட வேண்டும்

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Anbumani Ramadoss, DMK, Tamilnadu Government, Dengue fever, AIADMK,

சட்டமன்றத்தை அடுத்த 3 நாட்களில் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆணையிட வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் தினகரன் தலைமையிலான அணியைச் சேர்ந்த 19 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாக கடிதம் அளித்துள்ளனர். இதனால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அதன் பெரும்பான்மையை இழந்துவிட்டது.

தமிழக சட்டமன்றத்தில் அதிமுகவுக்கு மொத்தம் 134 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 19 உறுப்பினர்கள் ஆதரவைத் திரும்பப் பெற்றிருப்பதன் மூலம் ஆளுங்கட்சியின் வலிமை 115 உறுப்பினர்கள் ஆக குறைந்துவிட்டது. இவர்கள் மட்டுமின்றி, அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாற்றுக்கட்சி உறுப்பினர்களான உ.தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோரும் தங்களின் ஆதரவை தினகரன் அணிக்கு தெரிவித்துள்ளனர்.

இவர்களையும் கணக்கில் கொண்டால் அரசுக்கு எதிரான ஆளுங்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. எடப்பாடி தலைமையிலான அரசுக்கு 112 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே உள்ளது.

இது சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்குத் தேவையான 118 உறுப்பினர்களின் ஆதரவைவிட குறைவாகும். சட்டப்பேரவையில் பெரும்பான்மை இல்லாத நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பதவி நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டது.

அதுமட்டுமின்றி, எடப்பாடி பழனிச்சாமி அரசு கடந்த பிப்ரவரி மாதம் பதவியேற்றது முதல் இப்போது வரை தமிழகத்தில் ஏராளமான அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பழனிச்சாமி தலைமையிலான அரசை ஊழல் அரசு என்று விமர்சித்த பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர், பழனிசாமி தலைமையிலான அணியில் இணைந்துள்ளனர்.

எனினும், பன்னீர்செல்வம் அணியில் அங்கம் வகித்த 11 சட்டப்பேரவை உறுப்பினர்களில் எத்தனை பேர் பழனிசாமி அணியில் இணைந்துள்ளனர் என்பது தெரியவில்லை. பன்னீர்செல்வம் தலைமையிலான அணியிலிருந்த முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, சண்முகநாதன், மதுரை சரவணன் உள்ளிட்ட பல சட்டப்பேரவை உறுப்பினர்கள் அதிருப்தியில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்கள் தங்களின் ஆதரவை வெளிப்படையாக திரும்பப்பெற முடியாத அளவுக்கு நெருக்கடிகள் இருக்கலாம்.

19 உறுப்பினர்கள் வெளிப்படையாக ஆதரவை திரும்பப் பெற்றிருப்பதாலும், மேலும் பல உறுப்பினர்கள் அரசு மீது கடுமையான மனவருத்தத்தில் இருப்பதாலும், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு ஆளுநர் ஆணையிடுவதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி சரியான செயலாக அமையும்.

அவ்வாறு செய்யாவிட்டாலோ அல்லது சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்குக் கோர கூடுதல் அவகாசம் வழங்கினாலோ அது தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க வழிவகுக்கும். கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஆட்சி மாற்றத்திற்கு முன்பாக நடைபெற்ற குதிரை பேரங்களும், கூவத்தூர் கூத்துகளும் உலகம் அறிந்த ஒன்றுதான்.

இந்த நிகழ்வுகள் தமிழகம் மீது களங்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் அரங்கேறாமல் தடுக்கவேண்டுமானால், சட்டமன்றத்தை உடனடியாகக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க ஆணையிடுவதுதான் ஒரே வழியாகும்.

பிப்ரவரி மாதம் பன்னீர்செல்வம் தலைமையிலான அரசு பதவி விலகிய பிறகு, அடுத்து மேற்கொள்ள வேண்டிய அரசியல் நடவடிக்கை குறித்து முடிவு எடுக்க ஆளுநர் தேவையற்ற காலதாமதம் செய்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது ஆளுநர் மீதான நம்பகத்தன்மையை பெருமளவில் குலைத்துள்ளது.

அதுபோன்றதொரு அவப்பெயர் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு மீண்டும் ஏற்பட்டுவிடக் கூடாது.

எனவே, சட்டமன்றத்தை அடுத்த 3 நாட்களில் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆணையிட வேண்டும்.

இதுவொருபுறம் இருக்க, தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யா ஓய்வுபெற்று இம்மாதத்துடன் ஓராண்டு நிறைவடைகிறது. அப்போதிலிருந்து இன்று வரை மராட்டிய மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழக ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார்.

ஒரு மாநிலத்தின் ஆளுநர் பதவி ஓராண்டுகாலமாக காலியாக இருப்பது ஜனநாயகத்திற்கு எந்த வகையிலும் நன்மை செய்யாது. எனவே, தமிழ்நாட்டிற்கு இம்மாத இறுதிக்குள் நிரந்தர ஆளுநரை மத்திய அரசு நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Anbumani Ramadoss Pmk Sasikala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment