எடப்பாடி பழனிசாமி யார் என்பதை இன்று மாலை தெரிவிப்பேன்: டிடிவி தினகரன்

ஜெயலலிதா இருந்ததால் வாய்ப் பொத்தி, நவ துவாரங்களையும் பொத்தி மிக அமைதியாக இருந்தவர்கள், இப்போது தறிக்கெட்டு இருக்கிறார்கள்.

மதுரை மாவட்டம் மேலூரில் அ.தி.மு.க. அம்மா அணியின் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு முன், செய்தியாளர்களின் பல கேள்விகளுக்கு டிடிவி தினகரன் இன்று பதிலளித்தார். அதன் விவரம் பின்வருமாறு:

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக தொடர்வாரா என்பது மதுரையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் (இன்று) தெரிந்துவிடும் என கர்நாடக மாநில அ.தி.மு.க. அம்மா அணி செயலாளர் புகழேந்தி கூறியிருக்கிறாரே?

இது புகழேந்தியின் தனிப்பட்ட கருத்து. இது என்னுடைய சொந்த கருத்து இல்லை. மீடியாக்காரர்களாகிய நீங்கள் தான் இது உண்மையா என்பதை கணிக்க வேண்டும்.

அதிமுகவின் இரு அணிகளும் இணைவதை உங்கள் அணியில் இருக்கும் அமைச்சர்கள் தான் தடுக்கிறார்கள் என குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதே?

அந்த குற்றச்சாட்டெல்லாம் பொய்.

உங்களை நீக்க வேண்டும் என்ற எடப்பாடி பழனிசாமியின் அணியின் தீர்மானத்தை ஓ.பி.எஸ். அணியினர் டெல்லி சென்று தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கிறார்கள். இதை நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்?

எடப்பாடி பழனிசாமி அணி எப்படி என்னை நீக்க முடியும்? அந்த தீர்மானத்தில் எனது நியமனம் செல்லாது என குறிப்பிட்டுள்ளார்கள். அதற்கு அன்றே நான் தஞ்சையில் சிறப்பான விளக்கம் கொடுத்தேன். கழகப் பொதுச் செயலாளரின் நியமனத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறோம் என்று கூறியுள்ளார்கள். அதுபோல், தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்திலேயே, டிடிவி தினகரன் தான் எங்களது துணைப் பொதுச் செயலாளர் என்று சொல்லிவிட்டு, இங்கே நிர்வாகிகள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள் என நான் ஏற்கனவே கூறியுள்ளேன். அதுதான் இந்தக் கேள்விக்கும் பதில்.

நீங்கள் கொடுத்த பதவியை சில எம்.எல்.ஏ.க்கள் முதலில் ஏற்காமல், பின் ஏற்பது போல் தெரிவித்தனர். அவர்கள் இந்த பொதுக் கூட்டத்திற்கு வருவார்களா? அமைச்சர்கள் யாரேனும் வருவார்களா?

நாங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். யார் வந்துள்ளார்கள், வரவில்லை நீங்களே இன்று பார்க்கத்தான் போகிறீர்கள்.

தமிழக அரசை பாஜக தற்போது கையில் வைத்திருப்பதாக கூறப்படுவது குறித்து உங்கள் பதில் என்ன?

நான் அப்படி நினைக்கவில்லை. இவர்கள் தங்களது சுயநலத்திற்காக, விருப்பம் போல் செயல்பட வேண்டும் என்பதற்காக, மற்றவர்களை காரணம் காட்டி, சட்டமன்ற உறுப்பினர்களையும், இயக்க தொண்டர்களையும், கழக நிர்வாகிகளையும் ஏமாற்றி வருகிறார்கள். விரைவில், அவர்களது பொய் வெளிப்பட்டுவிடும்.

இன்றைய மேலூர் பொதுக் கூட்டத்தில் ஏதேனும் முக்கிய அறிவிப்புகள் இருக்குமா? உங்களை எதிர்க்கும் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது ஏதும் நடவடிக்கை எடுக்கப்படுமா?

மாலையில் தானே நான் பொதுக் கூட்டத்தில் பேசப் போகிறேன். நீங்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் எந்த பேச்சில் பதில் கிடைக்கும்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ‘420’ என்பது உங்களுக்கு தான் பொருந்தும் என கூறியிருக்கிறாரே?

தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தில் ஒரு விஷயத்தை குறிப்பிட்டுவிட்டு, அதற்கு மாறாக தீர்மானத்தில் வேறு ஒன்றை குறிப்பிட்டால், யாராக இருந்தாலும் ‘420’ தான் என்று கூறினேன். அதை நான் செய்தால் கூட ‘420’ தான் என பெருந்தன்மையுடன் கூறினேன். இப்படி மாற்றி குறிப்பிட்டு அந்த தீர்மானத்தில் கையெழுத்திட்ட முதல்வர் உட்பட 27 பேரும் மோசடி செய்ததாக தான் அர்த்தம். அது யாராக இருந்தாலும் ‘செக்ஷன் 420’ பிரிவில் தான் நடவடிக்கை எடுக்கப்படும். அதை கூட புரிந்து கொள்ளாமல் எடப்பாடி பதில் அளித்திருக்கிறார்.

பத்திரிக்கையாளர்கள் ‘முதல்வரைத் தான் 420 என சொல்கிறீர்களா?’ என கேட்டதற்கு ‘ஆம்’ என்று சொன்னேன். அப்படி சொல்ல எனக்கு பயம் கிடையாது. கழக பொதுச் செயலாளர் சசிகலாவால் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் எடப்பாடி பழனிசாமி. எங்களால் தான் அவர் முதல்வரானார். ஆகையால், அவரைப் பார்த்தெல்லாம் எங்களுக்கு பயம் இல்லை. யாரைப் பார்த்தும் எங்களுக்கு பயம் கிடையாது.

புரட்சித் தலைவர் மறைவிற்கு பிறகு நாங்கள் பல எதிர்ப்புகளை சந்தித்து வந்திருக்கிறோம். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், அண்ணா, காமராஜர் அவர்கள் எல்லாம் அமர்ந்திருந்த பதவியில், இன்று விபத்தின் காரணமாகவும், சந்தர்ப்ப சூழ்நிலையாலும் எடப்பாடி பழனிசாமி அமர்ந்துள்ளார். அந்த பதவியின் கண்ணியம் கருதி நான் வெளிப்படையாக சொல்லாமல், மறைமுகமாக சொன்னேன். அதைகூட அவர் புரிந்து கொள்ளாமல், இன்று மீண்டும் என்னை உங்கள் முன்னே அப்படி சொல்ல வைத்திருக்கிறார்.

எங்கள் இயக்கத்திலே திருப்பூர் மாவட்டத்திலே ‘விசைத்தறி’ பழனிசாமி என்று ஒருவர் உள்ளார். ’28’ பழனிசாமி என்று ஒருவர் இருந்தார். அதுபோல் இப்போது ஒரு பழனிசாமி உருவாகியிருக்கிறார். அவர் யார் என்பதை, இன்று மாலை பொதுக் கூட்டத்திலே கூறுகிறேன்.

உங்களது ‘அறுவை சிகிச்சை’ எப்போது தொடங்கும்?

நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். பேஷண்ட்டுக்கு எப்போது சர்ஜரி தேவையோ, அப்போது அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்து அவர்களை காப்பாற்றிவிடுவோம்.

பொதுக் கூட்டத்திற்கு உங்களுடைய தொண்டர்களை அழைத்து வரும் பேருந்துகளின் பெர்மிட்டுகள் ரத்து செய்யப்படும் என்பது குறித்த உங்கள் கருத்து என்ன?

இன்று இவர்கள் முதல்வராக, அமைச்சர்காளாக மீண்டும் தொடர்வதற்கு காரணமாக இருந்த பொதுச் செயலாளரின் படங்களையும், பேனர்களையும் தலைமைக் கழகத்தில் இருந்து அகற்றும் அளவிற்கு சென்றுவிட்ட இந்த மனிதர்களின் செயல்பாடுகள் எல்லாவற்றையும் நான் நன்றாக அறிவேன். பதவி இருக்கும் காரணத்தனால் இவர்கள் இன்றைக்கு இவ்வளவு ஆட்டம் போடுகிறார்கள். நிச்சயம் அவர்கள் திருந்துவார்கள் அல்லது திருத்தப்படுவார்கள்.

‘நமது எம்.ஜி.ஆர்’-ல் மத்திய அரசுக்கு எதிராக தலையங்கம் போடுகிறார்கள். அது யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது?

‘நமது எம்.ஜி.ஆர்’ சசிகலாவின் மேற்பார்வையில் இருந்தது. இப்போது அருமை உறவினர் ‘விவேக்’ அவர்களின் மேற்பார்வையில் உள்ளது. அதில் நிர்வாகத்திற்கு எதிராக செயல்பட்ட ‘கருப்பு ஆடுகளை’ அவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டார். நிர்வாகத்தின் ஒப்புதல் இல்லாமல் வெளியிடப்பட்ட கட்டுரைகளுக்கவும், கவிதைகளுக்கவும் அவர்கள் கண்டிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் ஜெயலலிதா காலத்தில் இருந்தே பல ஆண்டுகளாக பணி புரிந்து வருவதால், அவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. அநேகமாக, இன்று அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் என நம்புகிறேன்.

இந்த அரசு மக்கள் நலனில் அக்கறை கொள்வது போலவே தெரியவில்லையே?

எங்களுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் இல்லை. இந்த அரசு தான் நீங்கள் இப்படி கேள்விக் கேட்க காரணமாக அமைந்துவிட்டது. நாங்கள் இப்போது கட்சியை வலுப்படுத்தும் பணியில் இருக்கிறோம். ஜெயலலிதாவின் வழியை பின்பற்றி ஆட்சி செய்யும் இவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.  நம்ம ஊரில் ஒரு பழமொழி உண்டு. ‘அற்பனுக்கு வாழ்வு வந்தால், அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்’ என்று. அதுபோல், சிலரின் செயல்பாடு உள்ளது.
அப்போது ஜெயலலிதா இருந்ததால் வாய்ப் பொத்தி, நவ துவாரங்களையும் பொத்தி மிக அமைதியாக இருந்தவர்கள், இப்போது தறிக்கெட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு மூக்கணாங்கயிறு போடப்பட்டு, தறிக்கெட்டு செல்பவர்கள் சரி செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close