/tamil-ie/media/media_files/uploads/2017/08/unnamed-file-1.jpg)
டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் ஆதரவை வாபஸ் பெற்றிருப்பதால், எடப்பாடி பழனிசாமி அரசு கவிழுமா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
அதிமுக அணிகள் இணைப்பு, கட்சி வட்டாரத்திலும் ஆட்சி வட்டாரத்திலும் புயலைக் கிளப்பியிருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கையாக சசிகலாவை நீக்கும் திட்டத்தை வைத்திருக்கிறார்கள். அதற்காக விரைவில் கட்சி பொதுக்குழுவை கூட்டவும் முடிவு செய்திருக்கிறார்கள்.
அதிமுக மோதலின் க்ளைமாக்ஸாக அது அமையும். எனவே டிடிவி.தினகரன் தரப்பினரும் தங்களின் இறுதிகட்ட யுத்தத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். ஆகஸ்ட் 21-ம் தேதி மாலையில் டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் அமர்ந்து, தியானம் செய்தனர். மறுநாள் ஆகஸ்ட் 22-ம் தேதி (இன்று) அவர்கள் சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையான ராஜ்பவனில் ஒரு கடிதம் கொடுத்தனர்.
/tamil-ie/media/media_files/uploads/2017/08/ttv-team-at-marina-300x202.jpg)
முந்தைய நாளில் திரண்ட 18 எம்.எல்.ஏ.க்களுடன் விளாத்திகுளம் எம்.எல்.ஏ. உமா மகேஸ்வரியும் இவர்களுடன் கலந்துகொண்டார். எனவே கவர்னர் மாளிகைக்கு சென்ற டிடிவி. ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 19 ஆனது. இவர்கள் அனைவரும் தனித்தனியாக கவர்னர் மாளிகையில் கொடுத்த கடிதத்தில், ‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நாங்கள் வைத்த நம்பிக்கையை இழந்துவிட்டோம். கடந்த முறை எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் எங்களது ஆதரவுடன் தான் அவர் ஜெயித்தார்.
இப்போது அவரது நடவடிக்கையில் எங்களுக்கு திருப்தி இல்லை. எனவே அரசியல் சட்ட ரீதியாக எடுக்கவேண்டிய நடவடிக்கையை தாங்கள் எடுக்க வேண்டும்’ என கூறியிருக்கிறார்கள்.
டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்களின் மனுவில், ‘இந்த அரசு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை.’ என எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. எடப்பாடி பழனிசாமி மீது மட்டுமே தங்களுக்கு நம்பிக்கை இல்லாததாக கூறியிருக்கிறார்கள். இது தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒன்றையும் அதில் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். அதாவது, ‘அதிமுக அரசை கவிழ்ப்பது தங்கள் நோக்கம் இல்லை. முதல்வரை மாற்றுவது மட்டுமே தங்கள் நோக்கம்’ என்பதாக அவர்களது கடிதம் கூறுகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2017/08/ttv-team-palani...-300x191.jpg)
தவிர, இவர்களின் கடிதத்தில், எடப்பாடி அரசை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடும்படியும் கேட்கவில்லை. எனவே இந்தக் கடிதத்தின் அடிப்படையில் கவர்னர் வித்யாசாகர்ராவ் என்ன முடிவு எடுப்பார்? அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடிக்கு உத்தரவிடுவாரா? 19 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு வாபஸ் ஆகிவிட்ட நிலையில் எடப்பாடிக்கு உள்ள எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு 117-ஐ விட குறைந்துவிட்டதால் ஆட்சி கவிழுமா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் கருத்து தெரிவிக்கையில், “முதல்வருக்கு ஆதரவை வாபஸ் பெற்றார்களா, அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற்றார்களா? என்பது முக்கியமல்ல. இந்த அரசுக்கு மெஜாரிட்டி இருக்கிறதா, இல்லையா? என்பதுதான் முக்கியம். எனவே இந்தக் கடிதத்தின் அடிப்படையில் மெஜாரிட்டியை நிரூபிக்க ஆளுனர் உத்தரவிட வேண்டிய சூழல் ஏற்படும் என்றே கருதுகிறேன். எனினும் அடுத்தடுத்த குதிரை பேரங்கள் இதில் என்ன மாற்றங்களை உருவாக்கும் என சொல்ல முடியாது’ என்றார் விஜயன்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.