தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் கடந்த பிப்ரவரி மாதம் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அப்போது தான் நடிப்பில் இருந்து விலக உள்ளதாகவும், கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்தார்.
இதனிடையே அரசியல் கட்சி தொடங்கிய விஜய் அடுத்த சில மாதங்களில் தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். இந்த கொடியில் யானை சின்னம் பயன்படுத்தியது குறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இது ஒரு பக்கம் இருக்க அரசியலில் தனது அடுத்த அடியாக கட்சியின் முதல் மாநாடு குறித்த அறிவிப்பை வெளியிட்டார் விஜய். விக்கிரவாண்டி அருகே வி.சாலை கிராமத்தில் மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு காவல்துறை அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது.
அதன்படி தீபாவளிக்கு முன்னதாக அக்டோபர் 27ஆம் தேதி மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. மாநாடு பூமி பூஜைக்கு விஜய் வராத நிலையில், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த தலைமையில் பூஜை நடைபெற்றது.
இதனையடுத்து தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி அருகே வி.சாலை கிராமத்தில் இன்று நடைபெறுகிறது. மாலையில் நடைபெறும் இந்த மாநாட்டுக்காக அதிகாலை முதலே தொண்டர்கள் திடலில் குவிய தொடங்கினார்.
காலை நேரத்தில் ஒன்றும் தெரியாத நிலையில் நேரம் ஆக ஆக வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியதால் தொண்டர்கள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகினர். இதில் 10-க்கு மேற்பட்டோர் திடலில் மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதேசமயம் திடலில் உள்ள தொண்டர்கள் வெயில் தாக்கம் காரணமாக ஒரு சேரில் அமர்ந்து கொண்டு மற்றொரு சேரை தலையில் வைத்துக் கொண்டு அமைந்துள்ளனர்.
மேலும் திடலுக்கு உள்ளே வரும் தொண்டர்கள் வெயில் தாக்கம் காரணமாக தலையில் வேப்பிலை வைத்துக் கொண்டு வருகின்றனர். திடலில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் மற்றும் கட்அவுட்களுக்கு அருகில் பல தொண்டர்கள் தஞ்சமடைந்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“