/indian-express-tamil/media/media_files/2025/10/18/trichy-2025-10-18-17-41-06.jpeg)
Trichy
கரூர் பொதுக்கூட்ட நெரிசல் வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேசன், நிபந்தனை ஜாமீனில் இன்று (அக்டோபர் 18) திருச்சி மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
விடுதலையான பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கரூர் பெருந்துயர சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில், அதிலிருந்து மீண்டு வர முடியாமல் இருக்கிறேன்" என்று வேதனையுடன் தெரிவித்தார். மற்ற விவரங்கள் குறித்து கட்சித் தலைமை பேசும் என்றும் அவர் கூறினார்.
வழக்கின் பின்னணி:
கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி, கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு பயணத்தின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தின்போது, ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு இடையூறு ஏற்படுத்தி, ஓட்டுநரைத் தாக்கியதாகக் கூறப்பட்ட வழக்கில், சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
நிபந்தனை ஜாமீன்:
வெங்கடேசனின் ஜாமீன் மனு கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் தள்ளுபடியான நிலையில், அவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் இன்று விடுவிக்கப்பட்டார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/10/18/trichy-2025-10-18-17-43-14.jpeg)
அப்போது பேசிய தவெக வழக்கறிஞர் அணி மாநில இணை ஒருங்கிணைப்பாளர் செல்வபாரதி, "தவெக நிர்வாகிகளை அடக்குவதற்காக வெங்கடேசன் மீது பொய்யாக வழக்கு புனையப்பட்டுள்ளது. வழக்கில் இழப்பீட்டுத் தொகைகூட குறிப்பிடப்படவில்லை. ஒரு சம்பவத்திற்கு இரண்டு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் நியாயத்தை எடுத்துரைத்தோம். எங்கள் பக்கம் நியாயம் இருப்பதை உணர்ந்த நீதிபதி ஜாமீன் வழங்கினார்." என்று தெரிவித்தார்.
வெங்கடேசனுக்கு, ஒரு வார காலத்திற்கு காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது என்றும் வழக்கறிஞர் செல்வபாரதி கூறினார். சட்ட ரீதியாக நீதிமன்றத்தில் இவர் மீதான தவறு இல்லை என்பதை நிரூபிப்போம் என்றும் அவர் உறுதியளித்தார்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us