கொடுங்கையூரில் இரு சிறுமிகள் பலியானது குறித்து முழு அறிக்கை அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கொடுங்கையூரில் உள்ள ஆர்.ஆர்.நகரில், மழைநீரில் கிடந்த மின்வயர்களிலிருந்து மின்கசிவு ஏற்பட்டதால், அந்த தண்ணீரை மிதித்த இரண்டு சிறுமிகள் உயிரிழந்தனர். 'ஜங்க்ஷன் பாக்ஸ்' எனப்படும் பெட்டியில் இருந்த வயர்கள் சரியான பராமரிப்பின்றி வெளியே கிடந்திருக்கிறது. கனமழை காரணமாக அங்கு தண்ணீர் தேங்கியதால், மின்வயரில் இருந்து மின் கசிவு ஏற்பட்டது. இது எதுவும் தெரியாத அந்த இளம் பிஞ்சுகள் மழை நீரில் கால்களை வைக்க, அலறியடித்தபடி சரிந்து விழுந்தனர். எவ்வளவோ முயன்றும், மருத்துவர்களால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை.
கொடுங்கையூரில் பலியான இரு சிறுமிகள்
இதைத் தொடர்ந்து, கவனக்குறைவாக இருந்த மின்துறை அதிகாரிகள் 3 பேர் உட்பட எட்டு மின்துறை ஊழியர்களை மின்துறை வாரியம் உடனடியாக சஸ்பென்ட் செய்தது. உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு அறிவித்துள்ளது.
ஆனால், சிறுமிகளின் பெற்றோர், 'எங்களுக்கு உங்களுடைய காசு, பணம் வேண்டாம். எங்கள் மகளின் உயிர் தான் வேண்டுமென' கதறுவதை பார்க்கையில் வேதனையின் உச்சமாக இருக்கிறது.
மேலும் படிக்க - அரசுத் துறையில் கவனக்குறைவு என்பதை ஏற்க முடியாது: அமைச்சர் ஜெயக்குமார்
தற்போது, சிறுமிகள் பலியாக காரணமாக இருந்த ஜங்க்ஷன் பாக்ஸ் சசரி செய்யப்பட்டு வருகிறது. அங்கு சாலையில் கிடந்த மின்வயர்களும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. இப்பணியில் ஈடுபட்டுள்ள மின்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த இடத்தில் கேபிள் பதிக்க எங்களுக்கு கார்ப்பரேஷன் அனுமதி கொடுக்கவில்லை. பில்லர் கட்டும் வேலையை நாங்கள் முன்பே தொடங்கிவிட்டோம். கார்ப்பரேஷனில் அனுமதி வாங்குவது என்பது மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது. அதையும் மீறி தான் நாங்கள் வயர்கள் பதிக்கும் வேளைகளில் ஈடுபட்டோம். இதனால் எங்கள் மீது புகார்கள் சென்றது. நுகர்வோருக்கு உடனடியாக மின்சாரம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் தான் நாங்கள் வயர்களை சாலையில் போட்டு இருந்தோம். ஆனால், அதற்குள் மழை வந்து இங்கு வெள்ளம் சூழ்ந்துவிட்டது. இப்படி நடக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. வேறு எந்த காரணத்திற்காகவும், சாலையில் மின் வயர்களை நாங்கள் போடவில்லை" என்றார்.
இந்த நிலையில், கொடுங்கையூரில் இரு சிறுமிகள் பலியானது குறித்து முழு அறிக்கை அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், சென்னையில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுபோன்று மின் விபத்துகள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். மேலும், மின்சாரம் தாக்கி இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உயிரிழந்த சிறுமிகளின் குடும்பங்களுக்கு நிவாரணத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக மின்வாரியத் துறையைச் சேர்ந்த 8 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.