இரட்டை இலை சின்னம் வழக்கில் ஆவணங்கள் தாக்கல் முடிந்தது. டிடிவி தினகரன் மேலும் 3 நாட்கள் அவகாசம் கேட்டு மனு கொடுத்துள்ளார்.
இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பதை அக்டோபர் 31-க்குள் முடிவு செய்யும்படி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதைத் தொடர்ந்து அக்டோபர் 6-ம் தேதி பிற்பகலில் நேரில் ஆஜராகும்படி இரு தரப்புக்கும் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியிருக்கிறது.
அதற்கு முன்பாக உரிய ஆவணங்களை தாக்கல் செய்ய செப்டம்பர் 29-ம் தேதியை கடைசி நாளாக தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்தது. இந்த அவகாசத்தை மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என டிடிவி தினகரன் முன்வைத்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை.
இரட்டை இலை சின்னம் வழக்கில் ஆவணங்கள் தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று (29-ம் தேதி) இபிஎஸ்-ஓபிஎஸ் இணைந்த அணி சார்பில் அமைச்சர்கள் ஜெயகுமார், சி.வி.சண்முகம், உதயகுமார், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் டெல்லியில் முகாமிட்டு பக்கம் பக்கமாக அபிடவிட்களை தாக்கல் செய்தனர்.
115 எம்.எல்.ஏ.க்கள், 44 எம்.பி.க்கள், 50 மாவட்டச் செயலாளர்கள், 1800-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களின் அபிடவிட்களை இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பு நேற்று தாக்கல் செய்தது. இதற்கு பதிலடியாக டிடிவி தினகரன் அணி சார்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் சுமார் 1000 அபிடவிட்களை புதிதாக தாக்கல் செய்தார்.
மேலும் ஆவணங்களை தாக்கல் செய்ய தங்களுக்கு 3 நாட்கள் அவகாசம் வேண்டும் என நேற்று கடிதம் கொடுத்தார் அவர். ஆனால் தேர்தல் ஆணையம் அதை ஏற்றுக்கொண்டதாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இது குறித்து டெல்லியில் நிருபர்களிடம் பேசிய வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், தங்களுக்கு போதிய அவகாசத்தை தேர்தல் ஆணையம் தரவில்லை என குற்றம் சாட்டினார்.
இபிஎஸ்-ஓபிஎஸ் ஒருங்கிணைந்த அணி சார்பில் நிருபர்களிடம் பேசிய மைத்ரேயன் எம்.பி., ‘இரட்டை இலை சின்னம் இருநூறு சதவீதம் எங்களுக்குத்தான் கிடைக்கும் என நம்புவதாக’ கூறினார். தேர்தல் ஆணையத்தின் முடிவு இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக இருந்தால், தங்களுக்கு உரிய அவகாசம் வழங்கவில்லை என சுட்டிக்காட்டி நீதிமன்றத்தை நாட, டிடிவி தினகரன் அணி முடிவு செய்திருக்கிறது.