இரட்டை இலைச்சின்னம் வழக்கில் இன்று தீர்ப்பு கூறிய தேர்தல் ஆணையம், 'ஜெ.தீபா அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர்கூட இல்லை' என்று கூறி அவர் தரப்பு வாதங்களை நிராகரித்துள்ளது.
இரட்டை இலைச் சின்னத்தை இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். அணிக்கு ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் இன்று தீர்ப்பு வழங்கியது. ஜெயலலிதா மறைவுக்குப்பின் அ.தி.மு.கவில் பிளவு ஏற்பட்டபோது, அதில் ஒரு தரப்பினர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவுக்கு ஆதரவு அளித்தனர். அவருடைய வீட்டின் முன்பு கூட்டம் திரண்டது. இதையடுத்து, அரசியலில் ஈடுபடப்போவதாக ஜெ.தீபா அறிவித்தார். எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற அரசியல் இயக்கத்தைத் தொடங்கினார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டு, தேர்தல் ஆணையத்துக்கு வழக்கு போனபோது, இரட்டை இலைச் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஜெ.தீபா தரப்பில் தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டது. சுமார் 20,000 ஆயிரம் பிரமாணப் பத்திரங்கள் அந்த அணி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் தாக்கல்செய்யப்பட்டன.
இந்தநிலையில், தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள 83 பக்க தீர்ப்பு அறிக்கையில், ஜெ.தீபா தரப்பு கோரிக்கையை தேர்தல் ஆணையம் அடியோடு நிராகரித்துள்ளது. ஜெ. தீபா அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர்கூட இல்லை என்பதால் அவர் தரப்பு வாதங்களை கணக்கில் கொள்ளவில்லை என்று தனது தீர்ப்பில் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
தினகரனை போல, இரட்டை இலை சின்னம் தங்களுக்கே கிடைக்கும் என தீபா கூறி வந்த நிலையில், அவர் தரப்பு வாதங்களையே கணக்கில் கொள்ளவில்லை என தேர்தல் ஆணையம் கூறியிருப்பதால் கப்-சிப் மோடில் இருக்கிறாராம் தீபா. இருப்பினும், தனது அடுத்தக்கட்ட மூவ் குறித்து வழக்கறிஞர்களுடன் தீபா ஆலோசித்து வருகிறாராம்.