இரட்டை இலை யாருக்கு? இந்திய தேர்தல் ஆணையம் விசாரணை அக்.13-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

இரட்டை இலை யாருக்கு? என்பது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் இறுதி விசாரணை நாடு முழுவதும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

By: Updated: October 6, 2017, 06:17:46 PM

இரட்டை இலை யாருக்கு? என்பது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் இறுதி விசாரணை நாடு முழுவதும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

இரட்டை இலை, தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு சின்னம்! 1972-ல் அதிமுக.வை உருவாக்கிய எம்.ஜி.ஆர்., அதுவரை எந்த உதயசூரியனை ஆதரித்து பிரசாரம் செய்தாரோ அந்த உதயசூரியனை வீழ்த்த உபயோகித்த சின்னம்! அரசியலில் தனது குருவான அண்ணாவின் சின்னத்தை அவரது இதயக் கனியின் இரட்டை இலை வீழ்த்தியது.

எம்.ஜி.ஆருக்கு எப்படி அடித்தட்டு மக்களிடம் செல்வாக்கு இருந்ததோ அதேபோல, இரட்டை இலை சின்னமும் ஒரு வகையில் அடித்தட்டு மக்களின் சென்டிமென்ட் சின்னம்தான். அதனால்தான் அதிமுக.வின் சகல அணிகளும் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற துடியாய் துடிக்கின்றன.

கடந்த மார்ச் மாதம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது சசிகலா-டிடிவி தினகரன் ஒரு தரப்பாகவும், மதுசூதனன் – ஓபிஎஸ் இன்னொரு தரப்பாகவும் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரினார்கள். அப்போது அதில் முடிவெடுக்க உரிய அவகாசம் இல்லை எனக் கூறி இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.

அதன்பிறகு இரு தரப்பும் போட்டி போட்டு, தேர்தல் ஆணையத்தில் தங்கள் தரப்பு ஆவணங்களை தாக்கல் செய்தனர். சசிகலா தரப்பு 7 லட்சம் அபிடவிட்களையும், ஓபிஎஸ் தரப்பு 2 லட்சம் அபிடவிட்களையும் தாக்கல் செய்து முடித்த நிலையில்தான் அடுத்த திருப்பம்! சசிகலா அணியில் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துடன் கைகோர்த்தார்.

இதைத் தொடர்ந்து, சசிகலா -ஓபிஎஸ் இடையே இருந்த மோதல் சசிகலா-இபிஎஸ் இடையிலான மோதலாக உருவெடுத்திருக்கிறது. ஆனாலும் தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னம் வழக்கைப் பொறுத்தவரை சசிகலா-டிடிவி ஒரு தரப்பாகவும், மதுசூதனன் -ஓபிஎஸ் இன்னொரு தரப்பாகவும் இருக்கிறார்கள்.

இரு தரப்பும் ஆவணங்களை கடந்த 29-ம் தேதியுடன் தாக்கல் செய்து முடித்த நிலையில், இறுதி விசாரணை இன்று பிற்பகல் 3 மணிக்கு நடப்பதாக இருந்தது. ஆனால் இந்த விசாரணையை தள்ளி வைக்க டிடிவி தரப்பு உச்சநீதிமன்றத்தை இன்று மதியம் நாடியது. அதனால் ஏற்பட்ட தாமதம் காரணமாக, மாலை 4 மணி முதல் இரு தரப்பிடமும் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தில் நடைபெறும் விசாரணையின் live updates

மாலை 6 மணி : இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பின் வாதங்களுக்கு பிறகு விசாரணையை அக்டோபர் 13-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது தேர்தல் ஆணையம். டிடிவி தரப்பு கேட்டபடி அவர்களுக்கு வழங்கப்பட்ட அவகாசமாக இது பார்க்கப்படுகிறது.

மாலை 5.30 மணி : இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பில் முகுல் ரோஹத்கியும் அதே கருத்துகளை முன்வைத்து வாதிட்டார்.

மாலை 5.15 மணி : சசிகலா 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக கட்சி உறுப்பினராக இல்லை. எனவே அவரை பொதுச்செயலாளராக செய்த நியமனம் செல்லாது. அவரால் நியமிக்கப்பட்ட டிடிவி தினகரனும் பதவியில் தொடர முடியாது என இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் வாதிட்டார்.

மாலை 5 மணி : கட்சிக்குள் குடும்ப ஆதிக்கத்தை நுழைக்க சசிகலா-டிடிவி தரப்பு முயற்சிப்பதாகவும், அதற்கு எதிராக மொத்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டிருப்பதாகவும் இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

மாலை 4.45 : அதிமுகவின் 44 எம்.பி.க்கள், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேர் தவிர எஞ்சிய எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் 95 முதல் 98 சதவிகிதம் வரையிலான நிர்வாகிகள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால் கட்சியின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும், இந்த வழக்கை தாமதப்படுத்தவே டிடிவி தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்படுவதாகவும் சி.எஸ்.வைத்தியநாதன் குற்றம்சாட்டினார்.

மாலை 4.30: இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா சார்பில் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் அபிடவிட்களை தாக்கல் செய்தார். ஆனால் தீபாவுக்கும் பசும்பொன் பாண்டியனுக்கும் கருத்து வேறுபாடுகள் முளைத்த நிலையில், பசும்பொன் பாண்டியன் நேரில் வந்து அந்த அபிடவிட்களை வாபஸ் பெற்றார்.

மாலை 4.20 : இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பில் அமைச்சர்கள் ஜெயகுமார், சி.வி.சண்முகம், டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் மற்றும் எம்.பி.க்கள் என ஒரு படையே தேர்தல் ஆணைய அலுவலகத்தை சுற்றி வந்தனர். அதேபோல இவர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர் படையும் வந்திருந்தது. ஆனால் டிடிவி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியாவுடன் தமிழகத்தை சேர்ந்தவரான வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் மட்டுமே தென்பட்டார். அவகாசம் கேட்பது மட்டுமே இவர்களின் இலக்காக இருந்தது.

மாலை 4.15: இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான சி.எஸ்.வைத்தியநாதன் வாதிடுகையில், ‘ஜெயலலிதா இறந்த தினத்தில் டிடிவி தினகரன் கட்சியில் உறுப்பினராகவே இல்லை. முக்கிய நிர்வாகிகளான இபிஎஸ்-ஓபிஎஸ் இணைந்துவிட்டதால் அவர்களுக்கு சின்னத்தை வழங்க வேண்டும். சசிகலா குற்றவாளியாகவும், டிடிவி வழக்குகளை எதிர்கொள்கிறவராகவும் இருக்கிறார்கள். அவர்களுக்கு கட்சியில் மெஜாரிட்டி இல்லை’ என வாதிட்டார்.

மாலை 4.05: டிடிவி தரப்பு வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா தங்கள் தரப்பில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய வேண்டியிருப்பதால், கூடுதலாக ஒரு வாரம் அவகாசம் வேண்டும் எனக் கேட்டார். அதற்கு தேர்தல் ஆணையம் சாதகமான பதில் கூறவில்லை.

மாலை 4 மணி : சசிகலா-டிடிவி தினகரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு வந்தார். இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி,  சி.எஸ். வைத்தியநாதன் உள்ளிட்டவர்கள் ஆவணங்களுடன் வந்தனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் முழு பெஞ்சான 3 தேர்தல் ஆணையர்கள் முன்பு இவர்கள் வாதங்களை முன்வைக்க தயாரானார்கள்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Two leaves symbol case election commission of india final inquiry live updates

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X