இரட்டை இலை வழக்கு விசாரணையை இந்திய தேர்தல் ஆணையம் இன்று நடத்துகிறது. இதற்காக டி.டி.வி.தினகரன் அணியினர் ஜரூராக கிளம்பிச் சென்றார்கள்.
இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது தொடர்பாக அதிமுக அணிகள் இடையிலான பிரச்னையை இந்திய தேர்தல் ஆணையம் விசாரித்து வருகிறது. இதில் இறுதி தீர்ப்பை அக்டோபர் 31-ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து இரு அணிகளும் தங்கள் பிரமாண பத்திரங்கள் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஆதரவு எல்எல்ஏ, எம்பிக்கள் தங்களுக்கு ஆதரவாக இருக்கும் அனைத்து விவரங்களையும் ஆணைய அதிகாரிகள் முன்னிலையில் தாக்கல் செய்தனர்.
இரட்டை இலை வழக்கை அக்டோபர் 6-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தின் 3 ஆணையர்களும் அமர்ந்து விசாரித்தனர். அன்று இபிஎஸ்-ஓபிஎஸ் அணி சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. டி.டி.வி.தினகரன் தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அக்டோபர் 13-ம் தேதிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. அந்த அவகாசமும் போதாது என மீண்டும் டி.டி.வி.தினகரன் தரப்பில் வற்புறுத்தினர்.
இரட்டை இலை வழக்கில் இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பு போலியான ஆவணங்களை தாக்கல் செய்திருப்பதாகவும், அது தொடர்பாக குறுக்கு விசாரணை செய்யும் வாய்ப்பு வேண்டும் என்றும் டி.டி.வி.தினகரன் தரப்பில் கோரிக்கை வைத்தனர். ஆனால் இதை ஏற்காத தேர்தல் ஆணையம், வேறு காரணம் எதுவும் கூறாமல் அக்டோபர் 16-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
அக்டோபர் 16-ம் தேதி விசாரணையில் இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பிலும், டிடிவி தரப்பிலும் வாதங்களை முன்வைத்தனர். அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 23-ம் தேதிக்கு தேர்தல் ஆணையம் தள்ளி வைத்தது. அதன்படி 3-வது கட்ட விசாரணை இன்று (அக்டோபர் 23) நடக்கிறது.
இதில் கலந்துகொள்ள ஓபிஎஸ் ஆதரவாளர்களான கே.பி.முனுசாமி, மைத்ரேயன், மனோஜ்பாண்டியன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நேற்று (22-ம் தேதி) காலையில் டெல்லிக்கு கிளம்பினர். நேற்று மாலையில் மைத்ரேயன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த கே.பி.முனுசாமி, ‘டி.டி.வி.தினகரன் தரப்பு தாக்கல் செய்த ஆவணங்கள்தான் போலியானவை’ என்றார். இபிஎஸ் ஆதரவாளரான அமைச்சர் ஜெயகுமாரும் டெல்லி சென்றார். இவர்கள் தங்கள் வழக்கறிஞர் மூலமாக இன்று தேர்தல் ஆணையத்தில் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்கிறார்கள்.
இரட்டை இலை வழக்கில் இதுவரை கால அவகாசம் மட்டுமே கேட்டுவந்த டி.டி.வி.தினகரன் தரப்பு, முதல்முறையாக விசாரணையை எதிர்கொள்ள ஜரூராக டெல்லிக்கு கிளம்பிச் சென்றிருக்கிறது. டிடிவி அணி சார்பில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களான செந்தில்பாலாஜி, பழனியப்பன் உள்ளிட்ட பலர் டெல்லிக்கு சென்றிருக்கிறார்கள். டிடிவி அணி சார்பில் இன்று காங்கிரஸ் எம்.பி.யும், உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் விசாரணையை 4.30 மணிக்கு தள்ளி வைக்கும்படி டிடிவி அணி சார்பில் இரு தினங்களுக்கு முன்பே தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. அபிஷேக் மனு சிங்வி ஆஜராவதற்கு வசதியாகவே அந்த ஒன்றரை மணி நேர தள்ளிவைப்பை டிடிவி அணி கோரியது. ஆனால் அதை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. எனவே திட்டமிட்டபடி பிற்பகல் 3 மணிக்கு விசாரணை தொடங்கும்.
இரு தரப்பிலும் காரசாரமான விவாதங்கள் இன்று எதிர்பார்க்கப்படுகிறது.