இரட்டை இலை சின்னம் யாருக்கு? இந்திய தேர்தல் ஆணையம் இன்று விசாரணை

இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது தொடர்பாக இன்று மாலை 3 மணிக்கு இரு தரப்பினரிடமும் இந்திய தேர்தல் ஆணையம் விசாரணை நடத்துகிறது.

By: October 6, 2017, 9:40:28 AM

இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது தொடர்பாக இன்று மாலை 3 மணிக்கு இரு தரப்பினரிடமும் இந்திய தேர்தல் ஆணையம் விசாரணை நடத்துகிறது.

இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பதை அக்டோபர் 31-க்குள் முடிவு செய்யும்படி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதைத் தொடர்ந்து அக்டோபர் 6-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நேரில் ஆஜராகும்படி இரு தரப்புக்கும் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியிருக்கிறது.

அதற்கு முன்பாக உரிய ஆவணங்களை தாக்கல் செய்ய செப்டம்பர் 29-ம் தேதியை கடைசி நாளாக தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்தது. இந்த அவகாசத்தை மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என டிடிவி தினகரன் முன்வைத்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை.

இரட்டை இலை சின்னம் வழக்கில் ஆவணங்கள் தாக்கல் செய்ய கடைசி நாளான 29-ம் தேதி இபிஎஸ்-ஓபிஎஸ் இணைந்த அணி சார்பில் அமைச்சர்கள் ஜெயகுமார், சி.வி.சண்முகம், உதயகுமார், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் டெல்லியில் முகாமிட்டு பக்கம் பக்கமாக அபிடவிட்களை தாக்கல் செய்தனர்.

115 எம்.எல்.ஏ.க்கள், 44 எம்.பி.க்கள், 50 மாவட்டச் செயலாளர்கள், 1800-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களின் அபிடவிட்களை இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்தது. இதற்கு பதிலடியாக டிடிவி தினகரன் அணி சார்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் சுமார் 1000 அபிடவிட்களை புதிதாக தாக்கல் செய்தார்.

மேலும் ஆவணங்களை தாக்கல் செய்ய தங்களுக்கு 3 நாட்கள் அவகாசம் வேண்டும் என கடிதம் கொடுத்தார் அவர். அதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது. அதன்படி மீண்டும் 4 நாட்கள் அவகாசம் எடுத்துக்கொண்டு மீண்டும் சில ஆவணங்களை டிடிவி தரப்பு தாக்கல் செய்தது.

இப்படி இரு தரப்பும் ஆவணங்களை தாக்கல் செய்து முடித்துவிட்ட நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டபடி இன்று (அக்டோபர் 6) மாலை 3 மணிக்கு இந்த விவகாரத்தில் இறுதிகட்ட விசாரணை நடத்துகிறது. ஏற்கனவே தேர்தல் ஆணையம் உத்தரவிட்டபடி சசிகலா மற்றும் டிடிவி தினகரன் தரப்பும், மதுசூதனன் மற்றும் ஓபிஎஸ் தரப்பும் இன்றும் தேர்தல் ஆணையம் முன்பும் நேரில் ஆஜராக வேண்டும்.

இரு தரப்பு சார்பில் வழக்கறிஞர்களே ஆஜராகி, தேர்தல் ஆணையத்தில் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைப்பார்கள். அதன்படி மதுசூதனன் – ஓபிஎஸ் தரப்பில் மத்திய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. டிடிவி அணியின் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தமிழக சபாநாயகர் தனபால் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர்தான் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிடிவி.தினகரன் தரப்பிலும் அதே வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரான அபிஷேக் மனு சிங்விதான் இன்று தேர்தல் ஆணையத்தில் ஆஜராகி வாதங்களை முன்வைப்பார் என தெரிகிறது. தேவைப்படும் பட்சத்தில் மற்றொரு காங்கிரஸ் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான சல்மான் குர்ஷித்தும் டிடிவி அணிக்காக தேர்தல் ஆணையத்தில் வாதிட வாய்ப்பு இருக்கிறது.

இரு தரப்பும் உச்சநீதிமன்ற சீனியர் வழக்கறிஞர்களை களத்தில் இறக்கியிருப்பதால் தேர்தல் ஆணையத்தில் இன்றைய விவாதத்தில் அனல் பறக்கும் என தெரிகிறது. இன்றே தேர்தல் ஆணையம் தனது முடிவை அறிவிக்க வாய்ப்பில்லை. தேவைப்பட்டால் இறுதி விசாரணைக்காக இன்னொரு நாளையும் ஒதுக்கீடு செய்யும் வாய்ப்பு இருப்பதாக டெல்லி வட்டாரங்களில் கூறுகிறார்கள். மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவுப்படி அக்டோபர் 31-க்குள் தேர்தல் ஆணையம் தனது முடிவை அறிவிக்கும்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Two leaves symbol case election commission of india inquires today

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X