இரட்டை இலை சின்னம் வழக்கு இறுதி விசாரணைக்கு முன்பு பிரதமர் மோடியை சந்தித்து பேச இபிஎஸ்-ஓபிஎஸ் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
அதிமுக ஆட்சியை நிலைநிறுத்துவதுடன், அதிமுக.வையும் தங்கள் பக்கம் முழுமையாக தக்கவைக்க எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இணைந்த அணி மும்முரமாக இருக்கிறது. ஆட்சியை தக்கவைக்க எம்.எல்.ஏ.க்கள் எந்த அளவுக்கு முக்கியமோ, அதைப் போலவே கட்சியை தக்கவைக்க இரட்டை இலை சின்னம் அவசியம்!
2016 மார்ச்சில் இருந்து முடக்கி வைக்கப்பட்டிருக்கும் இரட்டை இலையை மீட்க இபிஎஸ்-ஓபிஎஸ் இணைந்த அணி தேர்தல் ஆணையத்தை நாடியிருக்கிறது. அதற்கு முன்னதாக கடந்த 12-ம் தேதி சென்னை வானகரத்தில் பொதுக்குழுவை இவர்கள் கூட்டினர். அதில் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அதிமுக சட்டவிதிகளில் சில மாற்றங்களை செய்தனர்.
இந்த மாற்றங்கள் குறித்து கடந்த 22-ம் தேதி இபிஎஸ்-ஓபிஎஸ் இணைந்த அணி சார்பில் டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் சில ஆவணங்களை தாக்கல் செய்தனர். இரண்டு அணிகள் இணைந்ததற்கான ஆதாரம், இரண்டு அணிகளும் சேர்ந்து நடத்திய பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள் மற்றும் பொதுக்குழுவில் அதிமுக சட்டவிதிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ள விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தனர்.
மேலும் ஆவணங்களை கூடுதலாக தாக்கல் செய்வதாக இருந்தால் வருகிற 29-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி நிலவரப்படியான அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் பட்டியலையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்தது. அதைத்தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையரை சந்திப்பதற்காக அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார் மற்றும் ஓபிஎஸ் அணியை சேர்ந்த கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் மீண்டும் நாளை (26-ம் தேதி) டெல்லி செல்ல இருக்கிறார்கள்.
இரட்டை இலை விவகாரத்தில் அக்டோபர் 6ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் விதித்துள்ள கெடு முடிய இன்னும் 3 நாட்களே (29-ம் தேதி) உள்ள நிலையில், மேலும் சில ஆவணங்களை வழங்க இபிஎஸ்-ஓபிஎஸ் அணியினர் முடிவு செய்துள்ளனர்.
முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் டெல்லியில் 28-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இரட்டை இலை சின்ன வழக்கு தேர்தல் ஆணையத்தில் இறுதி கட்டத்தை நெருங்கும் சூழலில், இவர்கள் பிரதமர் மோடியை சந்திக்க இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.