இரட்டை இலை சின்னம் வழக்கு தொடர்பாக இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பில் புதிய ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் அமைச்சர்கள் தாக்கல் செய்தனர்.
இரட்டை இலை சின்னத்தை கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்திய தேர்தல் ஆணையம் முடக்கியது. அதைத் தொடர்ந்து அதை மீட்க சசிகலா, டிடிவி.தினகரன் ஆகியோர் ஒரு தரப்பாகவும், மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மற்றொரு தரப்பாகவும் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர்.
சசிகலா தரப்புக்கு ஆதரவாக அடிப்படை உறுப்பினர்கள் முதல் தலைமைக்கழக நிர்வாகிகள் வரை சுமார் 7 லட்சம் அபிடவிட்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதேபோல ஓபிஎஸ் தரப்பிலும் லட்சக்கணக்கில் அபிடவிட்களை தாக்கல் செய்தார்கள். இதில் எந்த முடிவையும் எடுக்காமல் தேர்தல் ஆணையம் காலம் கடத்தியது.
இந்தச் சூழலில் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தொடர்ந்த வழக்கில், அக்டோபர் 31-க்குள் இரட்டை இலை சின்ன வழக்கை முடிவுக்கு கொண்டு வரும்படி தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது அந்த உத்தரவின் அடிப்படையில் வழக்கில் சம்பந்தப்பட்ட சசிகலா, டிடிவி.தினகரன், மதுசூதனன், ஒபிஎஸ் ஆகிய நால்வருக்கும் செப்டம்பர் 21-ம் தேதி தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியிருக்கிறது.
அதில், கூடுதலாக தாக்கல் செய்ய விரும்பும் ஆவணங்களை செப்டம்பர் 29-ம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி கூறியிருக்கிறது. இதற்கிடையே இபிஎஸ்-ஓபிஎஸ் அணிகள் இணைந்துகொண்டு, சசிகலா தரப்பை தனிமைப்படுத்தியிருக்கின்றன. செப்டம்பர் 12-ம் தேதி இந்த இரு தரப்பும் இணைந்து நடத்திய பொதுக்குழுவில், கட்சியில் பொதுச்செயலாளர் பதவியை ஒழித்தனர்.
கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்.ஸும், இணை ஒருங்கிணைப்பாளராக இபிஎஸ்.ஸும் இயங்குவது என்றும், பொதுச்செயலாளரின் அதிகாரங்களை இவர்கள் ஏற்றுக்கொள்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றினர். இந்த தீர்மான விவரங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்து, இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு கோர, இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பு முடிவு செய்தது.
இதற்காக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் ஆகியோர் பொதுக்குழு தீர்மானம் உள்ளிட்ட ஆவணங்களுடன் டெல்லி சென்றனர். ஏற்கனவே மின் துறை அமைச்சர் தங்கமணியும் மத்திய அமைச்சர்களை சந்திக்கும் பணி நிமித்தமாக டெல்லியில் முகாமிட்டிருந்தார்.
அமைச்சர்களுடன் முன்பு ஓபிஎஸ் அணியின் தளகர்த்தர்களாக இருந்த கே.பி.முனுசாமி, மைத்ரேயன், மனோஜ்பாண்டியன் ஆகியோரும் டெல்லி சென்றனர். இவர்கள் இணைந்து சென்று இந்திய தேர்தல் ஆணையத்தில் நேற்று ஆவணங்களை தாக்கல் செய்தனர். அப்போது ஒரு மனுவையும் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தனர்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது பெயர்களில் அளிக்கப்பட்ட அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் இரு அணிகளாக முன்பு செயல்பட்ட நேரத்தில் தேர்தல் கமிஷனில் தனித்தனியாக தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை திரும்ப பெற பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. எனவே, நாங்கள் தனித்தனியாக தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை திரும்ப பெற்றுக்கொள்கிறோம்.
பொதுக்குழு தீர்மானத்தால் பெருவாரியான எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் ஒன்றாக இணைந்துவிட்டனர். இதனால் கட்சியின் அ.தி.மு.க. என்ற பெயரும், இரட்டை இலை சின்னமும் ஒன்றிணைந்த அணிகளுக்கே சொந்தம் ஆகும். எனவே, அ.தி.மு.க. என்ற பெயரை நாங்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கே வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
அக்டோபர் 5-ம் தேதி பிற்பகலில் விசாரணைக்காக தேர்தல் ஆணையத்தில் ஆஜராகும்படி சசிகலா தரப்பையும், ஓபிஎஸ் தரப்பையும் கேட்டுக்கொண்டிருந்தது. அந்தத் தேதியை அக்டோபர் 6-ம் தேதிக்கு மாற்றி நேற்று அறிவிப்பு வெளியிட்டது. அதற்கு முன்பாக டிடிவி தரப்பும் புதிய ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் புதிய ஆவணங்களை தாக்கல் செய்துவிட்டு சென்னை திரும்பிய அமைச்சர் ஜெயகுமார், ‘இரட்டை இலை சின்னம் நூறு சதவிகிதம் எங்களுக்கே கிடைக்கும்’ என்றார்.