இரட்டை இலை சின்னம் வழக்கு நவம்பர் 6-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் வழங்கிய நவ.10 அவகாசத்திற்குள் இதில் முடிவு வராது என தெரிகிறது.
இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்கிற விவகாரம், டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருக்கிறது. இதில் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஒரு தரப்பாகவும், மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்னொரு தரப்பாகவும் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் சசிகலா தரப்புக்காக அபிடவிட்களை வாங்கிக்குவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு, இப்போது ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் இணைந்து நிற்கிறார்கள்.
இரட்டை இலை யாருக்கு? என்பதை அக்டோபர் 31-க்குள் முடிவு செய்யும்படி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒரு வழக்கில் உத்தரவிட்டது. பிறகு உச்சநீதிமன்றம் இந்த அவகாசத்தை நவம்பர் 10 வரை நீட்டித்தது. ஆனால் சசிகலா, டி.டி.வி.தினகரன் அணி தரப்பினர் இந்த வழக்கில் கூடுதல் அவகாசம் கேட்டு வருவதால் விசாரணை தள்ளிச் செல்கிறது.
இரட்டை இலை சின்னம் தொடர்பான 5–ம் கட்ட விசாரணை டெல்லியில் இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நேற்று (நவம்பர் 1) பிறபகல் 3 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இதில் இபிஎஸ்-ஓபிஎஸ் அணி சார்பில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், காமராஜ் மற்றும் டாக்டர் மைத்ரேயன் எம்.பி., டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வி.கே.சசிகலா-டி.டி.வி.தினகரன் அணி தரப்பில் தங்க தமிழ்செல்வன் உள்பட தகுதிநீக்கம் செய்யப்பட்ட 8 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இரு அணிகள் சார்பிலும் மூத்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.
வி,கே.சசிகலா தரப்பு வக்கீல் விஜய் ஹன்சாரியா வாதம் 2 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. தொடர்ந்து அதே அணியின் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதம் செய்தார். மொத்தமாக இந்த வாதங்கள் 3 மணிநேரத்துக்கும் மேல் நீடித்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு டிசம்பர் 26–ந் தேதி சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்வு செய்த பொதுக்குழு கூட்டத்தின் குறிப்புக்கள் வாசிக்கப்பட்டன. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எந்தச் சூழலில் சசிகலா பொதுச்செயலாளராக நியக்கப்பட்டார் என்பது குறித்தும் விளக்கப்பட்டது. தற்போது இபிஎஸ்-ஓபிஎஸ் அணிகள் நடத்திய பொதுக்குழுவும், இணைப்பும் சட்டரீதியானவை அல்ல என கூறப்பட்டது. அடிப்படை உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லாது என வாதிடப்பட்டது.
இபிஎஸ்-ஓபிஎஸ் அணி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி வாதாடுகையில், ‘சசிகலா தரப்பில் வேண்டுமென்றே விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கில் எங்களுக்கு வாய்ப்பு அளிக்காமல் அவர்களே அதிக நேரத்தை எடுத்துக் கொள்கிறார்கள். இந்த வழக்கு தொடர்பாக சில சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளை வாசிக்கும் போது தங்களுக்கு சாதகமான பகுதிகளை மட்டுமே வாசிக்கின்றனர். அதற்கு அடுத்த பத்தியிலேயே அவர்களுக்கு பாதகமாக இருக்கும் விஷயங்களை வேண்டுமென்றே வாசிக்காமல் தவிர்க்கின்றனர்’ என குற்றம் சாட்டினார்.
இதற்கிடையே சசிகலா தரப்பில் தங்கள் வாதங்களை முன்வைக்க சசிகலா மேலும் அவகாசம் கோரப்பட்டது. அதைத் தொடர்ந்து வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை நவம்பர் 6–ந் தேதிக்கு (திங்கட்கிழமை) ஒத்திவைத்து தலைமை தேர்தல் கமிஷனர் ஏ.கே.ஜோதி உத்தரவிட்டார்.
5 கட்ட விசாரணை நடந்தும், சசிகலா தரப்பே தங்கள் வாதத்தை இன்னும் முழுமையாக முடிக்கவில்லை. எதிர்தரப்பு சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்ய அனுமதி வேண்டும் என்றும் சசிகலா தரப்பில் கோரி வருகிறார்கள். இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பிலும் இன்னும் வாதிட வேண்டியிருக்கிறது. எனவே உச்சநீதிமன்றம் கொடுத்த அவகாசமாக நவம்பர் 10-க்குள் இதில் முடிவு ஏற்பட வாய்ப்பில்லை என்றே தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பதை விரைந்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் தொடர்ந்த வழக்கிலேயே மதுரை உயர்நீதிமன்றக் கிளை அக்டோபர் 31 வரை அவகாசம் கொடுத்தது. பிறகு உச்சநீதிமன்றம் நவம்பர் 10-ம் தேதி வரை நீட்டித்தது.
இந்தப் பிரச்னையில் மூல வழக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இருப்பதால், கூடுதல் அவகாசம் கேட்டு தேர்தல் ஆணையம் சார்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.