இரட்டை இலை சின்னம் வழக்கில் ஆவணங்களை தாக்கல் செய்ய இன்றுடன் அவகாசம் முடிகிறது. இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பில் அதிக ஆவணங்களை தாக்கல் செய்தனர்.
இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது தொடர்பாக இறுதிகட்ட விசாரணையை இந்திய தேர்தல் ஆணையம் நடத்துகிறது. இதற்காக அக்டோபர் 6-ம் தேதி மாலை 3 மணிக்கு தேர்தல் ஆணையத்தில் ஆஜராகும்படி சசிகலா-டிடிவி தினகரன் தரப்புக்கும், ஓபிஎஸ்-மதுசூதனன் தரப்புக்கும் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியிருக்கிறது. செப்டம்பர் 29-ம் தேதிக்குள் இரு தரப்பும் உரிய ஆவணங்களை தாக்கல் செய்யவேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
சசிகலா-டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மெஜாரிட்டி நிர்வாகிகள் இப்போது, ஓபிஎஸ் தரப்புடன் கைகுலுக்கி இணைந்திருக்கிறார்கள். ஒபிஎஸ்-ஸை கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், இபிஎஸ்-ஸை இணை ஒருங்கிணைப்பாளராகவும் தேர்வு செய்து கடந்த 12-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினர். இதற்கு அங்கீகாரம் கோரி, பொதுக்குழு தீர்மானங்களுடன் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்தனர்.
இதற்கிடையே டிடிவி தினகரன் தரப்பில் தங்களுக்கு ஆவணங்களை தாக்கல் செய்ய கூடுதலாக 3 வாரங்கள் அவகாசம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்தனர். அந்தக் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. அக்டோபர் 31-க்குள் இறுதி உத்தரவை பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேட்டுக்கொண்டிருப்பதால், கூடுதல் அவகாசம் வழங்க தேர்தல் ஆணையம் மறுத்திருக்கிறது.
எனவே தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்தபடி, அக்டோபர் 6-ம் தேதி இறுதிகட்ட விசாரணை நடக்கும். அதேபோல ஆவணங்களை தாக்கல் செய்ய இன்றே (29-ம் தேதி) கடைசி நாள்! இதையொட்டி இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பு சார்பில் இன்று அமைச்சர்கள் ஜெயகுமார், சி.வி.சண்முகம், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் டெல்லியில் முகாமிட்டு பெட்டி பெட்டியாக புதிய ஆவணங்களை தாக்கல் செய்தனர்.
கடந்த 12-ம் தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் பொதுக்குழு கூடியபோது நிர்வாகிகளிடம் பெற்ற அபிடவிட்கள் அவை! அதாவது, ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையில் கட்சி ஒன்றுபட்டுவிட்டதாகவும், மெஜாரிட்டி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகியோரின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாகவும், அதனால் தங்களுக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கும்படியும் இவர்கள் தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
இதற்கான அபிடவிட்களை 1800-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், 115 எம்.எல்.ஏ.க்கள், 44 எம்.பி.க்கள், 50 மாவட்டச் செயலாளர்கள், 30 தலைமைக்கழக நிர்வாகிகள் ஆகியோரிடம் பெற்று இவர்கள் சமர்ப்பித்துள்ளனர். டிடிவி தரப்பு எதிர்பார்த்ததுபோல கூடுதல் அவகாசம் கிடைக்காததால், அவர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். தவிர, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் மட்டுமே புதிதாக அபிடவிட் தாக்கல் செய்ய முடியும் என தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாலும் செய்வதறியாது திகைத்து நிற்கிறது டிடிவி அணி.
‘அதிமுக.வைப் பொறுத்தவரை நிர்வாகிகளுக்கு அதிகாரம் கிடையாது. பொது உறுப்பினர்கள் (அடிப்படை உறுப்பினர்கள்) மூலமாக பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படுவதால், அந்த எண்ணிக்கை அடிப்படையிலேயே சின்னத்தை வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும்’ என முன்பு ஓபிஎஸ் தரப்பு வைத்த வாதத்தை வருகிற 6-ம் தேதி டிடிவி தரப்பு முன்வைக்கும் எனத் தெரிகிறது.
ஆனால் ஓபிஎஸ் வைத்த அந்த வாதத்தை நம்பி இரட்டை இலை சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையம், டிடிவி தரப்பு அதே வாதத்தை முன்வைத்தால் காது கொடுத்தாவது கேட்குமா என்பது சந்தேகம்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.