இரட்டை இலை விவகாரம்: சசிகலா அணி தாக்கல் செய்த பிரமாணப்பத்திரங்கள் போலியானது: ஓபிஎஸ் அணி

இந்த விவகாரத்தில், தேர்தல் ஆணையம் உண்மை நிலையை கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அனுமதி வழங்கக் கூடாது.

சசிகலா தரப்பில் இருந்து தேர்தல் ஆணைத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரங்களில் சில லட்சங்கள் போலியானது என ஓபிஎஸ் தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக-வில் பிளவு ஏற்பட்டது. முதலமைச்சர் பதவியில் இருந்த பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். சசிகலா தரப்பின் அழுத்தம் காரணமாகவே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக பன்னீர் செல்வம் பகீரென பேட்டி அளித்தார்.

இதன் பின்னர், பன்னீர் செல்வம் தனியாக செல்லவே, அவரைத் தொடர்ந்து எம்.எல்.ஏ-க்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பின்தொடர்ந்து சென்றனர். இதன் காரணமாக சசிகலா, ஓ.பி.எஸ் என இரு அணிகளாக அதிமுக உடைந்தது. முதலமைச்சராகும் எண்ணத்தில் இருந்த சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறைக்கு சென்றார். இதனால், முதலமைச்சராகும் சசிகலாவின் கனவு பலிக்கவில்லை.

இதனிடையே, ஆர்.கே நகரில் இடைத்தேர்தல் நடைபெற இருந்த நிலையில், சசிகலா தரப்பும், ஓ.பி.எஸ் தரப்பும் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கொண்டாடின. இதனை கருத்தில் கொண்ட தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்தது, இதனால், இரு அணிகளாக பிரிந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆர்.கே நகரில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் ஆணைத்திற்கு புகார்கள் சென்றன. இதனால், ஆர்.கே நகரில் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக அறிவித்தது தேர்தல் ஆணையம்.

கட்சியில் யாருக்கு உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்பதை நிரூபிக்க வேண்டும் எனவும், அதற்கான அறிக்கையை தாக்கல் செய்ய கடந்த மாதம் 16ம் தேதி வரையும் கால அவகாசம் அளிக்கப்பட்டது.  சசிகலா அணி சார்பில் சுமார் 6.80 லட்சம் பிரமாண பத்திரங்களும், ஓபிஎஸ் அணி சார்பில் சுமார் 5.70 லட்சம் பிரமாண பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட்டன. சசிகலா தரப்பிலேயே அதிகப்படியான பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

கடந்த வாரம் சசிகலா தரப்பில் இருந்து, பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய மேலும் 2 வார காலம் அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று ஓபிஎஸ் அணியை சேர்ந்த மனோஜ் பாண்டியன், மைத்ரேயன் ஆகியோர் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறும்போது: சசிகலா தரப்பில் இருந்து தேர்தல் ஆணைத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரங்களில் சில லட்சங்கள் போலியானது. இந்த விவகாரத்தில், தேர்தல் ஆணையம் உண்மை நிலையை கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அனுமதி வழங்கக் கூடாது.

சசிகலா சிறைக்கு சென்றவுடன் விதிகளைமீறி அதிகப்படியான ஆட்கள் அவரை பார்க்க அனுமதிக்கப்பட்டது என்ற புகார் அப்போதே எழுந்த நிலையில், சிறைத்துறை அதிகாரிகள் அதனை மூடி மறைத்து விட்டனர். இந்த நிலையில், சொகுசாக இருப்பதற்கு சிறைத்துறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி சசிகலா கொடுத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரத்திர்ல கர்நாடக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

×Close
×Close