இரட்டை இலை சின்னத்தை இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் வழங்கிய தீர்ப்பில் மத்திய அரசின் ‘கை’ இருக்கிறது என டிடிவி தினகரன் கூறினார்.
இரட்டை இலை வழக்கில் இன்று (நவம்பர் 23) இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ உத்தரவை பிறப்பித்தது. அதன்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமி-துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிக்கு இரட்டை இலை ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இரட்டை இலை சின்னத்தையும், அதிமுக கட்சி பெயரையும் இனி இபிஎஸ்-ஓபிஎஸ் அணியினரே பயன்படுத்தலாம் என தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது. இந்த உத்தரவு குறித்து இன்று மாலை 3.30 மணிக்கு சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் டிடிவி தினகரன். அப்போது அவர் கூறியதாவது:
இந்திய தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவில்லை. கடந்த மார்ச் மாதம் ஓபிஎஸ் அணியில் 12 எம்.எல்.ஏ.க்களும், 12 எம்.பி.க்களும் இருந்தார்கள். அவர்கள் கொடுத்த மனு அடிப்படையில் அன்று கட்சியையும் சின்னத்தையும் முடக்கினார்கள்.
இன்று வழங்கிய உத்தரவில் தேர்தல் ஆணையம், சாதில் அலி ஜட்ஜ்மெண்ட்-டை உதாரணமாக கூறியிருக்கிறது. அதாவது 111 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் அவர்கள் பக்கம் இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.
கடந்த மார்ச்சில் நாங்கள் 122 எம்.எல்.ஏ.க்கள், 39 எம்.பி.க்கள் இணைந்து மனு கொடுத்தபோது அன்று சாதிக் அலி ஜட்ஜ்மெண்டை வசதியாக தேர்தல் ஆணையம் மறந்துவிட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கு முதல் நாள் சின்னத்தை முடக்கினார்கள். இதனால்தான் தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவில்லை என கூறுகிறோம். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகுவோம்.
அவங்க கொடுத்த 1200 அபிடவிட்களில் 300-க்கும் மேல் மோசடியானவை. அவற்றை குறுக்கு விசாரணை செய்ய எங்களுக்கு அனுமதி தரப்படவில்லை. எனவே இதில் நேர்மையாக தேர்தல் ஆணையம் இல்லை.
தற்போது இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருப்பவர், குஜராத்தில் தலைமை செயலாளராக இருந்தவர். அதிமுக.வை பொறுத்தவரை அடிப்படை உறுப்பினர்கள் யார் பக்கம் இருக்கிறார்களோ, அதை வைத்துதான் முடிவை எடுக்கவெண்டும். தேர்தல் ஆணையம் மத்திய அரசின் விருப்பபடி செயல்படுகிறது என்பது இதில் ஊர்ஜிதமாகிறது.
மத்திய அரசின் கை இதில் இருக்கிறது. மத்திய அரசின் தலையீடு இருக்கிறது. 99 சதவிகித உறுப்பினர்களும் மக்களும் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். கட்சியும் சின்னமும் குரங்கு கையில் பூமாலையாக சிக்கியிருக்கிறது. அவற்றை மீட்போம்.
தேர்தல் ஆணைய உத்தரவு அடிப்படையில் எடப்பாடிக்கு111 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு மட்டுமே இருப்பது ஊர்ஜிதமாகியிருக்கிறது. அதாவது, மெஜாரிட்டிக்கு தேவையான 117 எம்.எல்.ஏ.க்கள் இல்லை என தேர்தல் ஆணைய அறிவிப்பு மூலமே தெரிகிறது. இதை கவர்னர் கவனத்திற்கு கொண்டு சென்றாலும், அவரும் மத்திய அரசின் பிரதிநிதிதான். நீதிமன்றத்தை நாடி நியாயம் பெறுவோம்.
ஆர்.கே.நகரில் ஏற்கனவே போட்டியிட்டேன். கட்சியும், பொதுச்செயலாளரும் அனுமதித்தால் மீண்டும் நிச்சயம் போட்டியிடுவேன். மைத்ரேயன் புகார் பற்றி கேட்கிறீர்கள். பன்னீருக்கு ஆதரவாக இருந்த மத்திய அரசு இப்போது எடப்பாடிக்கு ஆதரவாக மாறியிருக்கிறது. அதனால்தான் மைத்ரேயன் அப்படி பேசுகிறார். பன்னீரின் நிலைமையை பொறுத்திருந்து பாருங்கள்!’ என்றார் டிடிவி தினகரன்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.