மோடி ஆதரவால் இரட்டை இலை எங்களுக்கே! அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சர்ச்சை பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி ஆதரவு இருப்பதால் இரட்டை இலை கிடைக்கும் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

By: Updated: October 21, 2017, 12:06:07 PM

பிரதமர் நரேந்திர மோடி ஆதரவு இருப்பதால் இரட்டை இலை கிடைக்கும் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் ஆசியால்தான் சட்டமன்றத்தில் மெஜாரிட்டி இல்லாத சூழலிலும் எடப்பாடி பழனிசாமி அரசு தொடர்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்தச் சூழலில் தேனி மாவட்டம், பெரியகுளத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. 46-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சு சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அந்தக் கூட்டத்தில் பேசியிருப்பதாவது : அதிமுக-வில் 98 சதவிகித நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எங்களிடம் உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி எங்களுக்கு ஆதரவாக உள்ளார். எனவே எங்களுக்குதான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும். அந்த சின்னத்துடன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலை சந்தித்து வெற்றி பெறுவோம்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியபடி தமிழகத்தில் 100 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சியை நடத்துவர். ஜெயலலிதா இருந்த போது, அமைச்சர்கள் ஜெயலலிதாவை பார்க்க செல்லும் போது, அப்போதைய நிதி அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் ஆலோசனை கேட்டு விட்டு செல்லுங்கள் என்பார். அந்த அளவுக்கு அவர் மீது ஜெயலலிதா நம்பிக்கை வைத்திருந்தார்.

அ.தி.மு.க. 46 வயது இளைஞர், தி.மு.க. 70 வயது முதியவர். எங்களுடன் தி.முக. மோதினால் தவிடு பொடியாகி விடும். தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் ஜாதகத்தில் முதல்வராகும் யோகம் கிடையாது. ஏன் அவரது கட்சிக்கு தலைவராக முடியாமல் திணறுகிறார்? நமக்கு நாமே திட்டத்தால் டீக்கடை, வடைக்கடையில் கூட்டம் சேரும். கடைக்காரருக்கு பணம் சேருமா? என்பது சந்தேகம்.

ஸ்டாலின் சட்டசபையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் விரும்பவில்லை. மீறி ஓட்டெடுப்பு நடத்தினால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 40 பேர் எங்களுக்கு ஸ்லீப்பர் செல்லாக இருப்பார்கள். நடிகர் கமல்ஹாசனுக்கு அரசியல் முதிர்ச்சி கிடையாது. வழிகாட்டுதல் திறனும் இல்லை. டுவிட்டர் மூலம் பேசினால் மக்கள் பிரச்சினையை தீர்க்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

ஏற்கனவே தனியார் பால் நிறுவனங்களுக்கு எதிராக பேசிய விவகாரத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிக்கலை எதிர்கொண்டு வருகிறார். இந்தச் சூழலில் இரட்டை இலையை மோடி பெற்றுத் தருவார் என பொருள் படுகிற தொனியில் அவர் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை உருவாக்கியிருக்கிறது.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Two leaves will come to us because of pm narendra modis support aiadmk ministers controversy speech

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X