தமிழக விளையாட்டுத் துறை அமைச்சரும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலினுக்கு ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக, தமிழக பா.ஜ.க. தலைவர் கு. அண்ணாமலை ஏப்.14ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து கூறினார்.
திமுக (டி.எம்.கே.) ஃபைல்ஸ் என்ற பெயரில் அவர் வெளியிட்ட சொத்து அறிக்கையில் உதயநிதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கே.என். நேரு, கனிமொழி, மு.க. ஸ்டாலின் மருமகன் சபரீசன், ஜெகத்ரட்சன், டி.ஆர். பாலு, பொன்முடி உள்ளிட்ட பலரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன.
இந்த நிலையில் உதயநிதி, கட்சியின் மூத்த வழக்குரைஞர் வில்சன் வாயிலாக வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அண்ணாமலைக்கு அனுப்பியுள்ளார். அந்த வக்கீல் நோட்டீஸில், அண்ணாமலை 48 மணி நேரத்தில் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.
இது தொடர்பாக செய்திகள் சமூக வலைதளங்கள் உள்பட அச்சு, காட்சி ஊடகங்களில் வெளியாக வேண்டும். தவறும்பட்சத்தில் அவர் மீது ரூ.50 கோடி மானநஷ்ட வழக்கு, சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் பதியப்படும்” என எச்சரித்துள்ளார்.
மேலும் இந்த ரூ.50 கோடி முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அனுப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, அண்ணாமலை வெளியிட்ட தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை எனவும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்த விவகாரத்தில் அண்ணாமலை மன்னிப்பு கேட்காவிட்டால் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
அண்ணாமலைக்கு ஏற்கனவே தி.மு.க. சார்பிலும் கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில் ரூ.500 கோடி நஷ்ட ஈடு கோரியுள்ளார். இந்த நோட்டீஸிற்கு அண்ணாமலை தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“