திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று கோட்டைக்கு சென்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனைச் சந்தித்து, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால் தள்ளிவைக்கப்பட்ட 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1-ம் தேதி முதல் ஜூன் 12-ம் தேதி வரை நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்து தேர்வு அட்டவணையை வெளியிட்டது. அதே போல, தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்ட பிளஸ் 1 தேர்வு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுத முடியாமல் விடுப்பட்டவர்கள் தேர்வு எழுதுவதற்கான தேர்வு தேதிகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தினால், கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ளது. அதனால், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் முழுமையாக இல்லை என்ற நிலை வரும் வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். கல்வியாளர்களும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஜூன் 1-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 15-ம் தேதி முதல் ஜூன் 25-ம் தேதி வரை நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். மேலும், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 16-ம் தேதியும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடுபட்டவர்களுக்கான மறுதேர்வு ஜூன் 18-ம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
தமிழக அரசு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியை தள்ளிவைத்த பிறகும், எதிர்க்கட்சிகள், கல்வியாளர்கள் என பலரும் 10-ம் வகுப்பு தேர்வை கொரோனா பரவல் முற்றிலும் இல்லை என்ற நிலை வரும் வரை தள்ளிவைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில்தான், திமுக இளைஞரணி செயலாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் இன்று திடீரென கோட்டைக்கு சென்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க கோரி மனு அளித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்தபோது, சட்டமன்ற உறுப்பினர்கள் எழிலரசன், தாயகம் கவி ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த சந்திப்புக்குப் பிறகு, ஊடகங்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றா நிலை வந்து, இயல்புநிலை திரும்பும்போது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த வேண்டும். மாணவர்களுக்கு கல்வி முக்கியம். அதைப்போல மாணவர்களின் உயிரும் முக்கியம். 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு பற்றி அமைச்சர் செங்கோட்டையன் இன்னும் 2, 3 நாட்களில் நல்ல முடிவை அறிவிப்பதாகத் தெரிவித்தார்” என்று கூறினார்.
20, 2020வரவேற்று கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் அவர்களுக்கு நன்றி. 10-ஆம் வகுப்பு மாணவர்களின் மனநிலையை தேர்வுக்குத் தயார்ப்படுத்திடவும், தேர்வெழுத வருபவர்களை நோய்த்தொற்றிலிருந்து காத்திடவும் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.@EzhilarasanCvmp pic.twitter.com/G4TbDUe3d1
— Udhay (@Udhaystalin)
வரவேற்று கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் அவர்களுக்கு நன்றி. 10-ஆம் வகுப்பு மாணவர்களின் மனநிலையை தேர்வுக்குத் தயார்ப்படுத்திடவும், தேர்வெழுத வருபவர்களை நோய்த்தொற்றிலிருந்து காத்திடவும் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.@EzhilarasanCvmp pic.twitter.com/G4TbDUe3d1
— Udhay (@Udhaystalin) May 20, 2020
உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் செங்கோட்டையனுடனான சந்திப்பு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “எங்களை வரவேற்று கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் அவர்களுக்கு நன்றி. 10-ஆம் வகுப்பு மாணவர்களின் மனநிலையை தேர்வுக்குத் தயார்ப்படுத்திடவும், தேர்வெழுத வருபவர்களை நோய்த்தொற்றிலிருந்து காத்திடவும் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக, உதயநிதி ஸ்டாலின், தலைமையில் நேற்று முன்தினம் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்தி வைக்க வேண்டியதின் அவசியம் குறித்து திமுக இளைஞரணி மற்றும் மாணவரணியின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் கூட்டம் காணொளிக் காட்சி மூலமாக நடைபெற்றது. அப்போது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உதயநிதி ஸ்டாலின் கோட்டைக்கு சென்று அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து, 10-வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க கோரியது, அரசியல் நாகரிகம் மிக்க சந்திப்பு என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.