திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞரணி செயலாளர் மற்றும் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின், தற்போது அமைச்சராக பதவி ஏற்றுள்ளார்.
தமிழக முதலமைச்சர் மற்றும் தி.மு.க.,வின் தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக இன்று பதவியேற்றுள்ளார்.
2019ஆம் ஆண்டு தி.மு.க., இளைஞரணி செயலாளராக நியமனம் செய்யப்பட்ட உதயநிதி, தீவிரமான பிரச்சாரங்கள், மேடைப்பேச்சுக்கள் மற்றும் இளைஞரணியை சீராக நிர்வகித்தல் போன்ற செயல்களின் மூலம் தன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
மேலும் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு 93,285 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.
இதைத்தொடர்ந்து, தொண்டர்கள் மற்றும் அமைச்சர்களின் கோரிக்கைக்கு பிறகு, இன்று (டிசம்பர் 14ஆம் தேதி) கிண்டி ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் பதவியேற்றார். அமைச்சர் மெய்யநாதன் கூடுதலாக நிர்வகித்து வந்த விளையாட்டு மேம்பாட்டுத் துறை உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 9.30 மணியளவில் கிண்டி ஆளுநர் மாளிகையில் பதவி பிரமாணத்தில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின், 10.50 மணியளவில் தி.மு.க., முன்னாள் தலைவர் மற்றும் தமிழக முன்னாள் முதலமைச்சரான கலைஞர் கருணாநிதி நினைவிடத்திற்கு வருகைதந்தார்.
அவரின் வருகையை எதிர்பார்த்து தி.மு.க., உறுப்பினர்கள், தொண்டர்கள், பிற மாவட்ட செயலாளர்கள் மற்றும் இளைஞரணி அமைப்பாளர்கள் என பலர் காலை 9 மணியளவில் இருந்து காத்திருந்தனர்.
மேலும், இந்து சமய அறநிலையத் துறையின் அமைச்சர் சேகர் பாபு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா மற்றும் பலர் கலைஞர் நினைவிடத்திற்கு வருகைதந்தனர்.

முன்னாள் திமுக தலைவர்களான அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் நினைவிடத்திற்கு உதயநிதி ஸ்டாலின் பாண்ட் அணிந்து வருகைதந்திருந்தார்.
11 மணியளவில் வருகைதந்த உதயநிதி ஸ்டாலின் முதலில் முன்னாள் தலைவர் மற்றும் முதலமைச்சரான அறிஞர் அண்ணா நினைவிடத்திற்கு சென்று வருகைதந்த அமைச்சர்களுடன் ரோஜா மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்பு கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்ற அவர், இரண்டு நிமிடத்திற்கு தனது மரியாதையை ரோஜா மலர் தூவி செலுத்தினார்.
உதயநிதி ஸ்டாலின் மற்றும் பிற அமைச்சர்களுக்காக காத்திருந்த தொண்டர் கூட்டம், உதயநிதியின் வருகைக்கு பிறகு இரண்டு மடங்காக அதிகரித்தது. மேலும், நினைவிடத்திற்கு மரியாதை செலுத்திய உதயநிதி கிளம்பிய பின்பு மணிக்கணக்காக காத்திருந்த தொண்டர்கூட்டம் நொடிகளில் கலைந்தது.
மறைந்த தி.மு.க., தலைவர்களுக்கு மரியாதை செலுத்த வருகைதந்த உதயநிதி ஸ்டாலினை, தொண்டர்கள் வளைத்து வளைத்து புகைப்படங்களும் வீடியோக்களும் எடுத்தனர். இதனால் கூட்டநெரிசல் அதிகரித்ததை கவனித்த காவல்துறையினர், தடுப்பணைகள் கொண்டு கட்டுப்படுத்த முயற்சித்தனர்.
இதையடுத்து, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றதற்கு தி.மு.க., தொண்டர்கள் கூறியதாவது, “இந்த தருணத்திற்காக தான் நாங்கள் காத்துக்கொண்டிருந்தோம். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்கவேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்து கோரிக்கை வைத்து வருகிறோம். தற்போது இம்முடிவை எடுத்ததற்கு பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
அவர் அமைச்சராக பதவி ஏற்றவுடன் அவருடைய பொறுப்பினை சிறப்பாக செய்வார் என்பதில் எங்களுக்கு எந்த ஐயமும் இல்லை, தமிழக முதல்வரிடம் கலந்து ஆலோசனை செய்து நல்ல திட்டங்களை தமிழக மக்களுக்கு வழங்குவார் என்று நம்புகிறோம்”, என்றனர்.
கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு உதயநிதி ஸ்டாலின் வருகைத்தர இருந்ததால், இன்று காலை 8 மணியளவில் இருந்து தொண்டர்கள் காத்திருந்தனர். இதனால் கூட்டம் அதிகரிக்கும் என்று காவல்துறையினர் பலர் பணியில் ஈடுபட்டு கூட்டநெரிசலை கட்டுப்படுத்தி வந்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil