உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் டிசம்பர் 12-ம் தேதி தீர்ப்பு - Udumalpet Sankar 'honour' killing: court announced that Judgment on Dec-12, | Indian Express Tamil

உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் டிசம்பர் 12-ம் தேதி தீர்ப்பு

சாதி மறுப்பு திருமணம் செய்த உடுமலை சங்கர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் வரும் டிசம்பர் 12-ம் தேதி தீர்ப்பு

Udumalpet Sankar 'honour' killing case,

சாதி மறுப்பு திருமணம் செய்த உடுமலை சங்கர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் வரும் டிசம்பர் 12-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என திருப்பூர் வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் குமரலிங்கத்தை சேர்ந்த சங்கர் (22), கவுசல்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட சங்கர் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி, பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதில் கௌசல்யாக படுகாயம் அடைந்தார். இது தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி, தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை, மற்றும் எம்.மணிகண்டன், எம்.மைக்கெல், பி.செல்வக்குமார், பி.ஜெகதீசன், தன்ராஜ், தமிழ் கலைவாணன், கல்லூரி மாணவர் பிரசன்னா, மற்றொரு மணிகண்டன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில், 9 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை, திருப்பூர் வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

சிறப்பு நீதிபதி அலமேலு நடராஜன் முன்னிலையில் இன்று ( 14.11.2017) விசாரணைக்கு வந்த வழக்கில், சம்பந்தப்பட்ட 11 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். படுகொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கௌசல்யாவும் நீதிமன்றத்தில் ஆஜரானார். இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து, வரும் டிசம்பர் 12-ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Udumalpet sankar honour killing court announced that judgment on dec