சென்னை மக்கள் புதிய அனுபவத்துக்கு தயாராகி வருகின்றனர். இதுவரையில் உயர்மட்ட ரயிலில் பயணம் செய்து வந்த மக்கள் முதல் முறையாக சுரங்க பாதையில் பயணம் செய்ய தயாராகி வருகின்றனர்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பாக வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையிலும், செண்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரவும் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக கோயம்பேடு முதல் பரங்கிமலை வரையிலும், இரண்டாம் கட்டமாக சின்னமலையில் இருந்து விமான நிலையம் வரையிலும் உயர் மட்ட ரெயில் பாதையில் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
மூன்றாவது கட்டமாக திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரையிலான சுரங்கப்பாதை ரெயில் போக்குவரத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டன. நாளை முதல் இந்த பாதையில் ரெயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவித்துள்ளது. திருமங்கலம் ரெயில் நிலையத்தில் நடைபெறும் விழாவில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயூடு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
கட்டணம் எவ்வளவு
திருமங்கலம் - நேரு பூங்கா ஏழு ரெயில் நிலையங்கள் உள்ளன. திருமங்கலம், அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, செனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்பாக்கம், நேரு பூங்கா என ஏழு நிலையங்கள் உள்ளன. அனைத்து ரெயில் நிலையங்களும் குளுகுளு வசதி செய்யப்பட்டுள்ளது. திருமங்கலத்தில் இருந்து அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு வரை செல்ல ரூ. 10 வசூலிக்கப்படும். திருமங்கலத்தில் இருந்து செனாய்நகர், பச்சையப்பன் கல்லூரி செல்ல ரூ. 20க்கு டிக்கெட் எடுக்க வேண்டும். திருமங்கலத்தில் இருந்து கீழ்பாக்கத்துக்கு ரூ. 30ம், நேருபூங்காவிற்கு ரூ.40 என டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இருந்து நேரு பூங்காவிற்கு செல்ல ரூ. 70 கட்டணம் செலுத்த வேண்டும்.
பார்க்கிங் வசதி
சுரங்க பாதையில் உள்ள ரெயில் நிலையங்களில் தரைத்தளத்தில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. முதல் மூன்று மணி நேரத்துக்கு கார்களுக்கு ரூ.10 எனவும், டூவிலருக்கு ரூ.5 எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுரங்க பாதையில் தீ விபத்து நடந்தால் எப்படி கட்டுப்படுத்துவது என்பது போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் ஒத்திகை பார்த்தனர். சுரங்க பாதையில் ரெயில் செல்லும் போது செல்போன் இணைப்புகள் செயல்படாது.
மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் திட்ட இயக்குநர் ராஜீவ் ப்ரீவீதி இன்று பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, ‘சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயிலை இயக்க அதிக செலவாகும். எனவே கட்டணத்தை குறைக்க வாய்ப்பு இல்லை. இந்த ஆண்டு இறுதிக்குள் மெட்ரோ ரயில் சேவை முழுமையாக பயன்பாட்டுக்கு வரும்' என்றார்.
எது எப்படியோ சென்னை மக்களுக்கு சுரங்க ரெயில் பயணம் புதிய அனுபவத்தை தரும் என்பதில் சந்தேகம் இல்லை.