திருச்சி விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை கத்தியால் தாக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா காலமானதும் அதிமுக அம்மா அணி, அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி என்றும் இரண்டு பிரிவுகளாக அக்கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர். அதிமுக அம்மா அணி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலும் செயல்பட்டு வருகிறது.
தங்களது அணிக்கு வலு சேர்க்கும் வகையில், மாநிலம் முழுவதும் இரு அணியை சேர்ந்தவர்களும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இரு அணிகளையும் இணைக்கும் முயற்சி நடைபெற்று வருவதாக கூறப்பட்டாலும், இதுவரை அதில் எந்த முன்னேற்றமும் இல்லை.
இந்நிலையில், சென்னையில் இருந்து திருச்சிக்கு முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் விமானம் மூலம் சென்றார். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், செந்தில்பாலாஜி ஆகியோர்
பன்னீர்செல்வத்தை சுமார் 10 நிமிடங்கள் சந்தித்து பேசினர். இவர்கள் மூவரும் ஒரே விமானத்தில் திருச்சி சென்றதாக தெரிகிறது.
திருச்சி சென்ற பன்னீர்செல்வத்துக்கு சால்வைகள் அணிவித்தும், பொன்னாடைகள் போர்த்தியும் அவரது ஆதரவாளர்கள் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பன்னீர்செல்வம் பேசிக் கொண்டிருந்த போது, அங்கிருந்த நபர் ஒருவர் பன்னீர்செல்வத்தை கத்தியால் தாக்க முயற்சி செய்தார். அதனை உடனடியாக தடுத்த பன்னீர்செல்வத்தின் பாதுகாவலர்கள் மற்றும் ஆதரவாளர்கள், அவரை காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
அதனையடுத்து அந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட நபர், டிவிஎஸ் டோல்கேட் பகுதியை சேர்ந்த சோலைராஜா (55) என விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும், கைது செய்யப்பட்ட நபர் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
முன்னதாக, பன்னீர்செல்வத்துக்கு மத்தியப்படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அவருக்கு மத்தியப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.