Advertisment

சதவீத புள்ளிவிவரம்: 10 ஆண்டுகளில் வளர்ந்த, தேய்ந்த கட்சிகள் எவை?

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் எத்தனை இடங்களில் வெற்றி பெற்றுள்ளன, முந்தைய 2011ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் எத்தனை இடங்களில் வெற்றி பெற்றுள்ளன, 10 ஆண்டுகளில் எந்த கட்சிகள் வளர்ந்துள்ளன, தேய்ந்துள்ளன என்று பார்ப்போம்.

author-image
Balaji E
புதுப்பிக்கப்பட்டது
New Update
சதவீத புள்ளிவிவரம்: 10 ஆண்டுகளில் வளர்ந்த, தேய்ந்த கட்சிகள் எவை?

தமிழகத்தில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு, நடந்துள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மாநிலத்தில் பெரிய கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் எத்தனை இடங்களில் வெற்றி பெற்றுள்ளன, இதற்கு முந்தைய 2011 உள்ளாட்சித் தேர்தலில் எத்தனை இடங்களில் வெற்றி பெற்றுள்ளன, 10 ஆண்டுகளில் எந்த கட்சிகள் வளர்ந்துள்ளன, தேய்ந்துள்ளன என்று பார்ப்போம்.

Advertisment

தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த 10 ஆண்டுகளில் தமிழக அரசியலில் என்னென்னவோ எல்லாம நடந்து முடிந்துவிட்டன. குறிப்பாக, தமிழகத்தின் இருபெரும் அரசியல் ஆளுமைகளா கருணாநிதி, ஜெயலலிதா மறைந்தனர். திமுகவின் தலைமையை ஸ்டாலின் ஏற்றார். அதிமுகவில் ஓபிஎஸ் இபிஎஸ் இரட்டை தலைமையாக உள்ளனர். அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பம் வெளியேற்றப்பட்டனர். டிடிவி தினகரன் அமமுக என்ற தனிக்கட்சி தொடங்கினார். 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் ஆட்சியைப் பிடித்தது என்று பல விஷயம் நடந்துவிட்டன. குறிப்பாக, 2019ம் ஆண்டு முதல் தமிழகம் 4 ஆண்டுகளில் 5 தேர்தல்களை சந்தித்து இருக்கிறது.

இந்த சூழ்நிலையில்தான், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்துள்ளது. இதற்கு முன்பு 2011ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. முந்தைய 2011ம் அண்டு நடந்த தேர்தலில் மேயர், நகராட்சி சேர்மன், பேரூராட்சி தலைவர்கள் வாக்காளர்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால், தற்போது நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மேயர், நகராட்சி சேர்மன், பேரூராட்சி தலைவர்கள் பதவியை கவுன்சிலர்கள் மறைமுகமாக தேர்ந்தெடுக்கின்றனர்.

2011ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் 10 மாநகராட்சிகள் 125 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள் இருந்தன. தற்போது நடந்துள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் (2022), 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. முந்தைய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது அதிமுக ஆளும் கட்சியாக இருந்தது. தற்போதைய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக ஆளும் கட்சியாக உள்ளது.

2011 உள்ளாட்சித் தேர்தலில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் திமுக பெற்ற இடங்களின் எண்ணிக்கை

2011 உள்ளாட்சித் தேர்தலில் அன்றைக்கு மாநிலத்தில் இருந்த மொத்தம் 820 மாநகராட்சி வார்டுகளில் திமுக 130 இடங்களையும் அதே போல, மொத்தம் 3,697 நகராட்சி வார்டுகளில் திமுக 964 இடங்களையும் 8299 பேருராட்சி வார்டுகளில் திமுக 1,833 இடங்களையும் வென்றது. 2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மட்டும் திமுக மொத்தம் 2,927 இடங்களைக் கைப்பற்றி இரண்டாம் இடத்தைப் பிடித்தது. ஆனால், ஒரு மாநகராட்சி மேயர் இடங்களில்கூட வெற்றி பெறவில்லை.

ஆனால், 2022ம் ஆண்டு நகர்ப்பு உள்ளாடித் தேர்தலில் திமுக மொத்தம் 7,701 இடங்களில் வெற்றி பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதுமட்டுமில்லாமல், 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியுள்ளது.

2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கை

இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. திமுக 21 மாநகாட்சிகளையும் கைப்பற்றியுள்ளது. மாநிலத்தில் மொத்தம் உள்ள 1374 மாநகராட்சி வார்டுகளில் திமுக 952 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதே போல, மொத்தம் உள்ள 3,843 நகராட்சி வார்டுகளில் திமுக 2,360 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 7,621 பேரூராட்சி வார்டுகளில் திமுக 4,389 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

publive-image

அதிமுக 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக பெற்ற இடங்கள்

அதே போல, 2022ம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், அதிமுக பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. 21 மாநகாட்சிகளில் அதிமுக ஒரு மாநகராட்சியைக்கூட கைப்பற்ற முடியவில்லை. மாநிலத்தில் மொத்தம் உள்ள 1374 மாநகராட்சி வார்டுகளில் அதிமுக 164 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதே போல, மொத்தம் உள்ள 3,843 நகராட்சி வார்டுகளில் அதிமுக 638 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 7,621 பேரூராட்சி வார்டுகளில் திமுக 1,206 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

அதிமுக 2011 உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக பெற்ற இடங்கள்

இதற்கு மாறாக, 2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அன்றைக்கு ஆளும் கட்சியாக இருந்த அதிமுக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அனைத்து மாநகராட்சி இடங்களையும் கைப்பற்றியது. மாநகராட்சி வார்டுகளில் 585 இடங்களையும் நகராட்சி வார்டுகளில் 1,688 இடங்களையும் பேரூராட்சி வார்டுகளில் 2,928 இடங்களையும் அதிமுக வென்றது.

தேமுதிக: 2011 - 2022

2011ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலை தேமுதிக சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக சந்தித்தது. அதில், மாநகராட்சிகளில் 8 இடங்களையும் நகராட்சிகளில் 119 இடங்களையும் பேரூராட்சிகளில் 395 இடங்களையும் வென்றிருந்தது. மொத்தம் 522 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.

2022ம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக மாநகராட்சி வார்டுகளில் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. நகராட்சி வார்டுகளில் 12 இடங்களிலும் பேரூராட்சி வார்டுகளில் 23 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

2011ம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தேமுதிக மொத்தம் 522 இடங்களில் வெற்றி பெற்றிருந்த நிலையில், அதே தேமுதிக இந்த 2022ம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மொத்தம் 35 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று கடந்த 10 ஆண்டுகளில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

காங்கிரஸ் கட்சி: - 2011 - 2022

காங்கிரஸ் கட்சி 2011ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், மாநகராட்சி வார்டுகளில் 17 இடங்களையும் நகராட்சிகளில் 165 இடங்களையும் பேரூராட்சிகளில் 386 இடங்களையும் வென்று மொத்தம் 568 இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக தன்னை நிறுத்தியிருந்தது.

2022ம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சி மாநகராட்சி வார்டுகளில் 73 இடங்களையும் நகராட்சி வார்டுகளில் 151 இடங்களையும் பேருராட்சி வார்டுகளில் 368 இடங்களையும் வென்றுள்ளது. இந்த தேர்தலிலும் காங்கிரஸ் திமுக, அதிமுக கட்சிகளுக்கு அடுத்து பெரிய கட்சியாக தன்னை நிரூபித்துள்ளது.

பாமக: 2011 - 2022

பாமக 2011ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், மாநகராட்சி வார்டுகளில் 2 இடங்களையும் நகராட்சிகளில் 60 இடங்களையும் பேரூராட்சிகளில் 109 இடங்களையும் வென்று மொத்தம் 171 இடங்களில் வெற்றி பெற்றது.

அதே பாமக 2022ம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மாநகராட்சி வார்டுகளில் 5 இடங்களிலும் நகராட்சிகளில் 48 இடங்களிலும் பேரூராட்சிகளில் 73 இடங்களிலும் வென்று மொத்தம் 126 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதை ஒப்பிட்டு பார்க்கும்போது பாமக, கடந்த 10 ஆண்டுகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் சரிவை சந்தித்துள்ளது தெரிகிறது.

பாஜக: 2011 - 2022

மத்தியில் ஆளும் பாஜக தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மாறி மாறி ஆட்சி செய்துவரும் திமுக, அதிமுக அகிய இரண்டு கட்சிகளையும் விமர்சித்து வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை பாஜக அதிமுக கூட்டணியில் இருந்து விலை தனித்து சந்தித்தது.

பாஜக 2011ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில், மாநகராட்சிகளில் 4 இடங்களையும் நகராட்சிகளில் 37 இடங்களையும் பேரூராட்சிகளில் 185 இடங்களையும் வென்று மொத்தம் 226 இடங்களில் வெற்றி பெற்றது.

ஆனால், அதே பாஜக, 2022ம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மாநகராட்சிகளில் 22 இடங்களையும் நகராட்சிகளில் 56 இடங்களையும் பேருராட்சிகளில் 230 இடங்களையும் கைப்பற்றி மொத்தம் 308 இடங்களில் வென்றுள்ளது. இதை ஒப்பிட்டு பார்க்கும்போது, பாஜகவுக்கு இந்த தேர்தல் முடிவுகள் வளர்ச்சியைத்தான் காட்டுகிறது.

publive-image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ): 2011 - 2022

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), 2011ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், மாநகராட்சிகளில் 4 இடங்களையும் நகராட்சிகளில் 10 இடங்களையும் பேரூராட்சிகளில் 32 இடங்களையும் என மொத்தம் 46 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.

2022ம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , மாநகராட்சிகளில் 13 இடங்களையும் நகராட்சிகளில் 19 இடங்களையும் பேரூராட்சிகளில் 26 இடங்களையும் கைப்பற்றி மொத்தம் 56 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதை ஒப்பிடும்போது இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிறிது வளர்ச்சியைக் காட்டுகிறது.

சிபிஎம்: 2011 - 2022

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (சிபிஎம்), 2011ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், மாநகராட்சிகளில் 3 இடங்களையும் நகராட்சிகளில் 20 இடங்களையும் பேரூராட்சிகளில் 103 இடங்களையும் கைப்பற்றி மொத்தம் 126 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.

2022ம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திமுக கூட்டணியில் போட்டியிட்ட சிபிஎம், மாநகராட்சிகளில் 24 இடங்களையும் நகராட்சிகளில் 41 இடங்களையும் பேரூராட்சிகளில் 101 இடங்களையும் கைப்பற்றி மொத்தம் 166 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதை ஒப்பிடும்போது இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஓரளவு வளர்ச்சிதான்.

விசிக: 2011 - 2022

2011ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட விசிக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், மாநகராட்சிகளில் 1 இடத்தையும் நகராட்சிகளில் 13 இடங்களையும் பேரூராட்சிகளில் 11 இடங்களையும் வென்று மொத்தம் 25 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.

அதே விசிக, 10 ஆண்டுகளுக்கு பிறகு, 2022ம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு, மாநகராட்சிகளில் 20 இடங்களையும் நகராட்சிகளில் 39 இடங்களையும் பேரூராட்சிகளில் 82 இடங்களையும் கைப்பற்றி மொத்தம் 141 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதை ஒப்பிடும்போது விசிகவுக்கு பெரும் வளர்ச்சிதான்.

publive-image

மதிமுக: 2011

2011 ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட மதிமுக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், மாநகராட்சிகளில் 11 இடங்களையும் நகராட்சிகளில் 49 இடங்களையும் பேரூராட்சிகளில் 82 இடங்களையும் வென்று மொத்தம் 142 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.

ஆனால், 2022ம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்த மதிமுக, மாநகராட்சிகளில் 20 இடங்களையும் நகராட்சிகளில் 39 இடங்களையும் பேரூராட்சிகளில் 82 இடங்களையும் கைப்பற்றி மொத்தம் 141 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதை ஒப்பிடும்போது விசிகவுக்கு பெரும் வளர்ச்சிதான்.

அரசியல் கட்சிகள் 2011ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பெற்ற இடங்களையும் 2022ம் ஆண்டு நகப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் பெற்ற இடங்களின் எண்ணிக்கையையும் பார்தோம். வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையை மட்டுமல்லாமல், அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதத்தை பார்ப்போம்.

publive-image

2011ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற இடங்களின் சதவீதம்

2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் திமுக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் குறிப்பாக, மாநகராட்சிகளில் திமுக 15.85% இடங்களைப் பெற்றிருந்தது. ஆனால், அப்போது ஆளும் கட்சியாக இருந்த அதிமுக 71.34% இடங்களைப் பெற்றிருந்தது.

காங்கிரஸ் கட்சி 2.07% இடங்களையும் மதிமுக 1.34% இடங்களையும் தேமுதிக 0.98% இடங்களையும் சிபிஐ 0.49% இடங்களையும் பாமக 0.24% வாக்குகளையும் பெற்றன.

2011ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் நகராட்சிகளில் அப்போது ஆளும் கட்சியாக இருந்த அதிமுக 45.66% இடங்களையும் அப்பொது எதிர்க்கட்சியாக இருந்த திமுக 26.08% இடங்களையும், காங்கிரஸ் - 4.46%, தேமுதிக - 3.22%, பாமக - 1.62%, மதிமுக - 1.33%, பாஜக - 1%, சிபிஐ - 0.27%, சிபிஎம் - 0.54% இடங்களையும் பிடித்தன.

2011ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் பேரூராட்சிகளில் அதிமுக - 35.28% இடங்களையும் திமுக - 22.09%, தேமுதிக - 4.76%, காங்கிரஸ் - 4.65%, பாஜக - 2.23%, பாமக - 1.31%, சிபிஎம் - 1.24%, மதிமுக - 0.99%, சிபிஐ - 0.39 சதவீத இடங்களையும் கைப்பற்றி இருந்தன.

********

2022ம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் ஆளும் திமுக ஸ்வீப் செய்து வெற்றி பெற்றுள்ளது. 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியதோடு மாநகராட்சிகளில் மட்டும் திமுக - 69.29% இடங்களை கைப்பற்றியுள்ளது. அதிமுக - 11.94% இடங்களையும், காங்கிரஸ் - 5.31%, பாஜக - 1.60%, சிபிஐ - 0.95%, சிபிஎம் - 1.75%, தேமுதிக 0.00%, மற்றவை 9.10% இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

2022ம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சித்ட் தேர்தல் முடிவுகளில், நகராட்சிகளில் திமுக - 61.44%, அதிமுக- 16.60%, காங்கிரஸ் - 3.93%, பாஜக - 1.46%, சிபிஐ 0.49%, சிபிஎம் - 1.07%, தேமுதிக - 0.31%, பி.எஸ்.பி 0.08%, மற்றவை - 14.62% இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

2022ம் ஆண்டு பேரூராட்சிகளில் திமுக 57.59%, அதிமுக - 15.82%, காங்கிரஸ் - 4.83%, பாஜக - 3.02, சிபிஐ - 0.34%, சிபிஎம் - 1.33%, மற்றவை 16.51 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. இதில், அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகள் வெற்றி பெற்றுள்ள இடங்களின் சதவீதம் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Dmk Aiadmk Local Body Polls Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment