அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர அழைப்பு விடுத்திருக்கிறார்கள். மெஜாரிட்டியை நிரூபிக்கும் வகையில் அவர்கள் முதல்வரை சந்தித்து பேசுகிறார்கள்.
அதிமுக.வில் அரங்கேறும் குழப்பங்கள், அடுத்தடுத்து தமிழக அரசியலை சூடாக்கி வருகின்றன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனக் கூறி டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கவர்னரிடம் மனு கொடுத்தனர். கவர்னர் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடுவார் என எதிர்பார்த்து, அவர்கள் அனைவரும் பாண்டிச்சேரியில் முகாமிட்டனர்.
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும் என திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. ஆனால் இன்று (ஆக. 30) இடதுசாரி தலைவர்களான ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மமக தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் சந்தித்தபோது, ‘இப்போதைய சூழலில், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட தேவையில்லை’ என கவர்னர் வித்யாசாகர் ராவ் தெரிவித்தார். இந்தத் தகவலை திருமாவளவன் நிருபர்களிடம் தெரிவித்தார்.
பாண்டிச்சேரியில் முகாமிட்ட டிடிவி.தினகரன் அணிக்கும், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த காத்திருந்த எதிர்க்கட்சிகளுக்கும் இது பின்னடைவாக கருதப்படுகிறது. அதேசமயம், எடப்பாடி பழனிசாமி தரப்பு இதனால் உற்சாகம் அடைந்திருக்கிறது. இனி டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து பாண்டிச்சேரியில் முகாமிட வாய்ப்பில்லை. எனவே அவர்களை எடப்பாடி பழனிசாமி அணியினர் சமரசம் செய்து, இணைத்துக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.
இதற்கிடையே ஆகஸ்ட் 31-ம் தேதி (நாளை) அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னைக்கு வரும்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர அழைப்பு விடுத்திருக்கிறார். கோட்டையில் அவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பார்கள் என தெரிகிறது. அந்தந்த மாவட்ட ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்களை அழைத்து வரும் பொறுப்பு, அந்தந்த மாவட்ட அமைச்சர்களிடம் எடப்பாடி பழனிசாமி ஒப்படைத்திருப்பதாக தெரிகிறது.
இந்தக் கூட்டம் குறித்து ஆளும்கட்சி நிர்வாகிகளிடம் பேசியபோது, “சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்கும்படி கவர்னர் உத்தரவிடவில்லை என்றாலும், மெஜாரிட்டி எம்.எல்.ஏ.க்கள் தனக்கு ஆதரவாக இருப்பதை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமி விரும்புகிறார். குறிப்பாக, ஆகஸ்ட் 28-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு சுமார் 70 எம்.எல்.ஏ.க்களே வந்ததாக செய்திகள் வெளிவந்தன. அதை பொய்யாக்கும் வகையில் இந்த அவசர அழைப்பை முதல்வர் விடுத்திருக்கிறார்’ என்கிறார்கள்.
மெஜாரிட்டி எம்.எல்.ஏ.க்கள் வந்துவிடும் பட்சத்தில் அனைவரையும் மொத்தமாக மீடியா முன்பு நிறுத்தி பேட்டியளிக்க வாய்ப்பு இருப்பதாக அதிமுக தலைமை அலுவலக வட்டாரங்களில் கூறினார்கள். இதற்கிடையே டிடிவி.தினகரன் தரப்பினர் தங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது, அதிமுக.வில் பரபரப்பான சூழலை உருவாக்கியிருக்கிறது.