வி.கே.சசிகலாவை 17 தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் வழியனுப்பினர் : டிடிவி தினகரன் ஒதுங்கியது ஏன்?

வி.கே.சசிகலா 5 நாள் பரோல் முடிந்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் சென்றார். 17 தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் அவரை வழியனுப்பி வைத்தனர்.

வி.கே.சசிகலா 5 நாள் பரோல் முடிந்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் சென்றார். 17 தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் அவரை வழியனுப்பி வைத்தனர்.

வி.கே.சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று கடந்த பிப்ரவரி 15-ம் தேதி முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வருகிறார். அவருக்கு, சிகிச்சை பெற்று வரும் கணவர் நடராஜனை அருகில் இருந்து கவனிப்பதற்காக சிறை நிர்வாகம் 5 நாட்கள் பரோல் கொடுத்தது.

வி.கே.சசிகலா கடந்த 6-ம் தேதி பெங்களூருவில் இருந்து கார் மூலம் சென்னை வந்தார். சென்னை தி. நகரில் உள்ள தனது அண்ணன் மகள் கிருஷ்ணபிரியா (இளவரசியின் மகள்) வீட்டில் தங்கியிருந்தார் அவர். 7-ந்தேதி முதல் நேற்று 11-ந் தேதி வரை அவர் தினமும் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனைக்கு சென்று கணவர் நடராஜனை பார்த்து வந்தார்.

சசிகலா பரோலில் இருக்கும் 5 நாட்களும் எந்தவித அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது, ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கக் கூடாது என்பன உள்ளிட்ட 4 நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. இதனால் அ.தி.மு.க. அமைச்சர்கள், எம்.எல். ஏ.க்கள், நிர்வாகிகள் யாரும் அவரை சந்திக்கவில்லை. 5 நாட்களும் அவர் தனது குடும்ப உறுப்பினர்களை மட்டுமே சந்தித்து பேசினார்.

சசிகலாவுக்கு பெங்களூர் சிறை நிர்வாகம் வழங்கிய 5 நாள் பரோல் அக்டோபர் 11-ம் தேதி 12 மணியுடன் முடிந்தது. இதையடுத்து அவர் மீண்டும் சிறை செல்லும் நடவடிக்கைகள் தொடங்கின. இன்று(12-ம் தேதி) காலை 9 மணிக்கு சசிகலா தி.நகர் வீட்டில் இருந்து பெங்களூருவுக்கு புறப்பட்டார். அவருக்கு அவரது உறவினர்கள் கண்ணீர் ததும்ப விடை கொடுத்தனர்.

சசிகலாவின் அண்ணன் திவாகரனின் மகன் ஜெய்ஆனந்த் தனி காரில் சசிகலா காருக்கு முன்னதாக சென்றார். சசிகலா காரில் உறவினர்கள் டாக்டர் வெங்கடேஷ், விவேக் இருந்தனர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் ஏழுமலை தவிர செந்தில்பாலாஜி, வெற்றிவேல், தங்கத்தமிழ்ச்செல்வன் உள்பட 17 பேரும் இன்று காலையே தி.நகர் வீட்டுக்கு வந்திருந்தனர். அவர்கள் கை கூப்பி வணங்கி சசிகலாவை வழி அனுப்பினார்கள்.

சசிகலா கார் வீட்டை விட்டு வெளியில் வந்ததும், அ.தி.மு.க. தொண்டர்கள் வாழ்த்து கோ‌ஷம் எழுப்பினார்கள். சசிகலா கார் சென்றபோது சென்னையில் பல இடங்களில் அ.தி.மு.க. தொண்டர்கள் நின்று வாழ்த்து கோ‌ஷமிட்டனர். அவர்களுக்கு சசிகலா கை கூப்பி வணக்கம் தெரிவித்தார். தி.நகர் உஸ்மான் சாலையில் தொண்டர் ஒருவர் தன் பெண் குழந்தைக்கு பெயர் சூட்டும்படி கூறினார். அந்த குழந்தைக்கு ‘ஜெயஸ்ரீ’ என்று சசிகலா பெயர் சூட்டினார்.

சசிகலாவின் கார் பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம் கூட்டு ரோடு, வாலாஜா டோல்கேட், வேலூர் சத்துவாச்சாரி ஆவின் பாலகம், பள்ளிகொண்டா டோல்கேட், ஆம்பூர் பை-பாஸ் வழியாக சென்றது. இங்கும் சில இடங்களில் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

சசிகலா மாலை 5 மணி அளவில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்திற்கு அவர் வந்தடைந்தார். இதனையடுத்து, ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். சசிகலாவுக்கு வழங்கப்பட்ட 4 ஆண்டுகள் தண்டனையில் இதுவரை 8 மாதங்கள் மட்டுமே முடிந்திருக்கிறது. எனவே இன்னும் மூன்றேகால் ஆண்டுகள் சிறை வாசத்தை சசிகலா தொடர வேண்டியிருக்கிறது. இந்த வழியனுப்பும் நிகழ்ச்சியில் டிடிவி தினகரன் முக்கியத்துவம் பெறாதது பலருக்கும் உறுத்தலை உருவாக்கத் தவறவில்லை.

பெங்களூருவில் இருந்து சசிகலாவை அழைத்து வந்த நிகழ்வைத் தவிர, அதன்பிறகு டிடிவி ஒதுங்கியே இருந்ததாக பேசப்படுகிறது. கட்சி நிர்வாகம் தொடர்பாக டிடிவி தினகரன் மீது சசிகலா அதிருப்தி அடைந்திருப்பதாக வரும் செய்திகளை உறுதி செய்வதாக இது அமைந்தது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close