மைத்ரேயன் அதிமுக.வில் கிளப்பிய பூகம்பம் சுலபத்தில் ஓயாது போல! ‘ஓபிஎஸ் அணி எனக் கூறி தொண்டர்களை ஒதுக்குறாங்க’ என்கிறார் அவர்.
மைத்ரேயன், அதிமுக.வில் வலுவான டெல்லி தொடர்புகளைக் கொண்டவர்களில் ஒருவர்! ஓபிஎஸ் அணி டெல்லியில் வலுவாக லாபி செய்ய இவரே முக்கிய காரணம்! அணிகள் இணைப்புக்கு பிறகு, ஒருங்கிணைந்த அணியில் மைத்ரேயனுக்கு பெரிய பங்களிப்பு இல்லை.
ஓ.பன்னீர்செல்வமே முக்கியத்துவம் இல்லாமல் ஒதுக்கப்படுவதாக அவரது ஆதரவாளர்கள் மத்தியில் குமுறல் இருக்கிறது. இந்தச் சூழலில்தான் நேற்று (21-ம் தேதி) முகநூல் மற்றும் ட்விட்டரில் பதிவிட்ட மைத்ரேயன், ‘இரு அணிகளும் இணைந்து நான்காவது ஆண்டு தொடங்குகிறது. ஆனால் மனங்கள்?’ என கேள்வி எழுப்பினார்.
இன்று இது தொடர்பாக இபிஎஸ் அணியை சேர்ந்தவரான மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, ‘அது மைத்ரேயனின் தனிப்பட்ட கருத்து’ என்றார். உடனே அடுத்த சிறிது நேரத்தில் முகநூலில், ‘அது என் தனிப்பட்ட கருத்து அல்ல. மெஜாரிட்டி தொண்டர்களின் கருத்து’ என கொந்தளித்தார் மைத்ரேயன்.
ஆனால் அதே ஓபிஎஸ் அணியை சேர்ந்தவரான பொன்னையன், ‘மனபூர்வமாக இரு அணிகளும் இணைந்து செயல்படுகிறோம்’ என்றார். இதைத் தொடர்ந்து மைத்ரேயனின் முகநூல் பக்கத்தில் கட்சிப் பிரமுகர்கள் இடையே வாதப் பிரதிவாதங்கள் சூடு பிடித்துள்ளன்.
சென்னை பெரம்பூர் கட்சிப் பிரமுகர் ஒருவர், ‘தொண்டர்களின் உணர்வுகளை பிரதிபலிப்பது தலைவர்களின் கடமை அல்லவே! தொண்டர்களை ஆசுவாசப்படுத்தி ஒற்றுமையை உருவாக்குவதுதானே உங்களின் கடமை?’ என கேள்வி எழுப்பினார். இதேபோல சிலர் மைத்ரேயனின் உணர்வுகளை ஆதரித்தும் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.
இதற்கு அதில் பதில் தெரிவித்த மைத்ரேயன், ‘கட்சியின் மாவட்ட, ஒன்றிய செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் தொண்டர்களை ஓபிஎஸ் அணி என்று ஒதுக்காமல் அரவணைத்து சென்றால் நன்றாக இருக்கும்.’ என குறிப்பிட்டிருக்கிறார்.
மைத்ரேயன் சார்ந்த காஞ்சிபுரம் மாவட்டம் முதல் பெரும்பாலான மாவட்டங்களில் ஓபிஎஸ் அணி நிர்வாகிகளை அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் கண்டு கொள்வதில்லை. பல மாவட்டங்களில் இன்னமும் ஓபிஎஸ் அணியினர் தனியாக நிகழ்ச்சிகளை நடத்தும் சூழல் இருக்கிறது. அதை உணர்த்தும் விதமாகவே இந்தப் பதிவை மைத்ரேயன் வெளியிட்டிருக்கிறார்.
மைத்ரேயன் உருவாக்கிய விவாதம், இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.