மைத்ரேயன் இன்று தனது முகநூல் பக்கத்தில் மீண்டும் திரியை பற்ற வைத்திருக்கிறார். தம்பிதுரைக்கு சுடச்சுட பதில் கொடுத்திருக்கிறார் மைத்ரேயன்.
ஓ.பன்னீர்செல்வம் அணியில் முக்கிய பிரமுகராக இருந்து வருபவர், மைத்ரேயன் எம்.பி.! ஓ.பன்னீர்செல்வம் தனி அணி நடத்திய காலகட்டத்தில் ஓபிஎஸ்.ஸுக்கும் டெல்லிக்கும் பாலமாக இருந்தவர் இவர்!
இப்போதும் இரட்டை இலைக்காக உரிமை மீட்புப் போராட்டத்தில் டெல்லி செல்லும் ஓபிஎஸ் அணியை வழிநடத்துவது இவர்தான். கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் டெல்லியில் மைத்ரேயன் வீட்டில் கூடுவதும், அங்கிருந்து இவர்கள் தனியாக தேர்தல் ஆணையம் செல்வதும் வாடிக்கை!
சில தினங்களுக்கு முன்பு அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயகுமார் ஆகியோர் டெல்லியில் இருந்தபோதே மைத்ரேயன், கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன் ஆகியோர் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை தனியாக சந்தித்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பாஜக.வில் இருந்தவரான மைத்ரேயன் அந்தத் தொடர்புகளை பயன்படுத்தி டெல்லியில் இபிஎஸ் அணிக்கு ‘தண்ணி’ இபிஎஸ் தரப்பில் புலம்புகிறார்கள்.
இந்தச் சூழலில் நேற்று(21-ம் தேதி) தனது முகநூல் மற்றும் ட்விட்டரில் கருத்து பதிவு செய்த மைத்ரேயன், ‘ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணி இணைந்து இன்றோடு மூன்று மாதங்கள் நிறைவுற்று நான்காவது மாதம் தொடங்குகிறது. மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?’ என குறிப்பிட்டார்.
அதாவது, இரு அணிகள் இடையே இன்னும் பூசல்கள் இருப்பதை மைத்ரேயன் வெளிப்படையாக பதிவு செய்தார். ஓபிஎஸ் அணியினருக்கு கட்சியிலும் ஆட்சியிலும் முக்கியத்துவம் இல்லாததை மைத்ரேயன் வெளிப்படுத்தினார். அவர் சார்ந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மைத்ரேயனை கண்டுகொள்ளாததும் அவரது கோபத்திற்கு காரணம் என தெரிகிறது.
மைத்ரேயனின் கருத்து குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, ‘மனங்கள் இணையவில்லை என்பது மைத்ரேயனின் சொந்தக் கருத்து’ என்றார். அதாவது, இரு அணியினரும் மனதளவில் இணைந்து இயங்குவதாக கூறினார், இபிஎஸ் அணியைச் சேர்ந்தவரான தம்பிதுரை.
தம்பிதுரையின் கருத்துக்கு இன்று(22-ம் தேதி) தனது முகநூல் பக்கத்தில் சுடச்சுட பதில் கொடுத்திருக்கிறார். ‘நேற்று நான் எனது முக நூல் பக்கத்தில் செய்த பதிவு குறித்து திரு. தம்பிதுரை அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். மைத்ரேயனின் பதிவு அவரது தனிப்பட்ட கருத்து என்று தம்பிதுரை கூறியுள்ளார். இது எனது தனிப்பட்ட கருத்து அல்ல. பெரும்பாலான கழக அடிமட்டத் தொண்டர்களின் உணர்வைத் தான் நான் எதிரொலித்துள்ளேன்.’ என இன்று தனது பதிவில் மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.
ஒருபக்கம் டிடிவி தினகரன் அணி முறுக்கிக் கொண்டிருக்க, இன்னொருபுறம் இபிஎஸ்-ஓபிஎஸ் அணிகளுக்கு உள்ளேயே மோதல் ஆரம்பித்திருப்பது புதிய பரபரப்பை கிளப்பியிருக்கிறது.