உடனடியாக முதலமைச்சராக வேண்டும் என நினைக்கும் மு.க ஸ்டாலின் கனவு காண்கிறார். கனவு காண்பதிலேயே அவரது காலம் கடந்துவிடும் என பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று(14.09.17) பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இரட்டை இலை சின்னத்தின் மூலம் வெற்றிபெற்ற அதிமுக 134 எம்.எல்.ஏ-க்கள் என்ற பெரும்பான்மை பலத்துடன் தமிழகத்தில் ஆட்சி செய்து வருகிறது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் இந்த ஆட்சியை வழிநடத்தி வருகின்றனர்.
ஆனால், திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலின் ஏதாவது போராட்டத்தை தூண்டிவிட்டு இந்த ஆட்சியில் அமரமுடியுமா என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் வேக வேகமாக கேள்வி கேட்டிருக்கிறார். அவருக்கு மூளையில் வெப்பச்சலனம் ஏற்ப்பட்டதாக நினைக்கிறேன். அவர் உடனடியாக முதலமைச்சராகிவிடலாம் என்று கனவு காண்கிறார். கனவு காண்பதிலேயே ஸ்டாலினின் காலம் கடந்துவிடும். அவரது செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.
2021-ம் ஆண்டு வரை அதிமுக தான் ஆட்சியில் இருக்கும். அதற்கு பின்னரும் அதிமுகவே ஆட்சியில் இருக்கும். எனவே, முதலமைச்சராகும் ஸ்டாலின் எண்ணம் கனவாகவே போய்விடும் என்று தெரிவித்தார்.
முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மு.க ஸ்டாலின் குறித்து விமர்சனம் செய்கையில், ஒரு கட்சிக்கே ஸ்டாலினால் தலைவராக முடியவில்லை. அவர் முதலமைச்சராக வேண்டும் என நினைக்கலாமா என்று விமர்சித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியை ஆவேசத்துடன் விமர்சித்தார். முதலில் எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இருந்தால், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கட்டும். பெரும்பான்மையை நிரூபித்துவிட்டு அவர் இந்த கேள்வியை கேட்கட்டும், அதன்பின்னர் பதிலளிக்கிறேன் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தான், பொள்ளாச்சி ஜெயராமன் மு.க ஸ்டாலின் குறித்து விமர்சித்துள்ளார்.