வைகோ-திருமா பூசல் முற்றுகிறது: ஒரே அணியில் நீடிப்பார்களா?

வைகோவின் ஆதங்கமும், அதனையொட்டி நடைபெறும் சிறுத்தைகளின் பாய்ச்சலும், திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தலித்துகளை வைகோ சிறுமைப்படுத்தி விட்டதாக ஒருபக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைச் செயலாளர் வன்னியரசு குமுற, மறுபக்கம் ”தேர்தல் செலவிற்காக நாங்கள் வைகோவிடம் பணம் பெற்றது உண்மை தான். வன்னியரசு தனது பதிவை நீக்கிவிட்டார். அவரது கருத்துக்கு எதிர்கருத்தாக, தேர்தலுக்கு பணம் அளித்ததை ஏன் வைகோ கூறினார் என்பது புரியவில்லை. அவருக்கு வன்னியரசு மீது கோபமா? என் மீது கோபமா?.. ஒருவரை விமர்சனம் செய்ய வேண்டுமானால், நேருக்கு நேர் துணிச்சலுடன் பேசுபவன் நான். யாரையும் தூண்டிவிட்டு விமர்சனம் செய்ய வைக்கும் அற்ப புத்தி எனக்கு கிடையாது” என திருமாவளவன் பாய்ந்திருக்கிறார்.

வைகோ மீது சிறுத்தைகள் பாய இரண்டு காரணங்கள் இருக்கிறது. ஒன்று, வைகோவின் புதிய தலைமுறை பேட்டி. பேட்டியில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தன் வீட்டில் வேலைப்பார்ப்பதாகவும், அவர்களை தன் குடும்பத்தில் ஒருவராகவே தான் கருதுவதாகவும் வைகோ குறிப்பிடுகிறார். இதனை சாதீய, நிலப்பிரபுத்துவ ஆதிக்கமாகவே பார்ப்பதாக வன்னியரசு தனது நீக்கப்பட்ட முகநூல் பதிவிட, மதிமுகவினருக்கும், வி.சி.க.வினருக்கும் சமூகவலைதளங்களில் மோதல் வெடித்தது.

இரண்டாவது, சாத்தூரில் நடைபெற்ற மதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம். இதில் வன்னியரசுவின் முகநூல் பதிவை கடுமையாக சாடிய வைகோ, தேர்தல் செலவிற்காக திருமாவிற்கு தான் 50 லட்ச ரூபாய் வழங்கியதை போட்டு உடைக்கிறார். கூட்டத்தில் அப்படி என்ன பேசினார் வைகோ? இதோ உங்கள் பார்வைக்கு…

“புதிய தலைமுறை கார்த்திகை செல்வன் இருக்காரே, தொடக்கத்துல இருந்து விவகாரமான கேள்வியையே கேட்டுட்டு இருந்தாரு. கடைசி கேள்வியா, தலித்துகள் அதிகாரத்திற்கு வருவதை திராவிட இயக்கங்கள் தடுக்கிறதா?னு கேட்டார். ஒருகாலத்துல பஞ்சமர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் பஸ்ஸில் ஏறக்கூடாதுனு பஸ் டிக்கெட்ல போட்டிருந்தான். டிக்கெட்ட கிழிச்சு போட்டுட்டு, தலித்துகளை பஸ்ஸில் ஏத்தலைனா லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என சொன்னவர் செளந்தரபாண்டியன் நாடார்.

இந்தியாவிலேயே ஒரு தலித்தை உயர்நீதிமன்ற நீதிபதியாக்கியது கலைஞர். சமத்துவபுரம், தலித்துகளுக்கு கட்டிட வீடு கொண்டுவந்தவர் கலைஞர். இவ்வளவையும் சொல்லிட்டு, தலித்துகள் முதலமைச்சர் பதவிக்கு வந்தால் முதலில் சந்தோஷப்படப் போவது நான் தான் என்றேன். பேட்டி முடிஞ்சப்பறம் திரும்பவும் அதே கேள்வியை கேட்டதால, மைக்க கழட்டி வச்சுட்டு கிளம்பிட்டேன். மறுநாள் பேட்டியிலிருந்து வைகோ பாதியில் வெளியேற்றம்னு ப்ளாஷ் நியூஸ் போட்டாங்க. ஏன்னா, இது மார்க்கெட்டிங் தந்திரம்.

இந்த பின்புலம் எதுவுமே தெரியாம, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசு ஒரு பதிவை முகநூல்ல போட்டிருக்கார். தலித்தை வேலைக்காரர்களாக வைத்திருக்கிறேன் என்று வைகோ கூறுவதை சாதீய ஆதிக்கமாக, நிலபிரபுத்துவ ஆதிக்கமாக பார்க்கிறேன் என்று கூறியிருக்கிறார். நான் என்ன சொன்னேன்?.. எனக்கு சாப்பாடு எடுத்து வைக்குறதுல இருந்து, படுத்திருந்தா போர்த்திவிடுறது வரைக்கும் எங்க வீட்டு பிள்ளை மாதிரி தலித் மக்களை வச்சிருக்கோம்னு சொன்னேன். இதுக்கு அவர் எழுதியிருக்காரு, நான் சாதித் திமிரோடு இருக்கிறேனாம். நான் ரொம்ப ஆபத்தானவன், தெரிஞ்சுக்கோங்க.

உங்க தலைவர் மக்கள் நலக் கூட்டணில இருந்தப்போ, தலையில தூக்கிவச்சு கொண்டாடி, தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் செஞ்சவன் நான். வி.சி.க. மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் செல்லதுரை வீட்டுக் கல்யாணம் சிவகாசியில நடந்துச்சு. அப்ப அவரை கைது பண்ணி போலீஸ் ஸ்டேஷன்ல வச்சுட்டாங்க. நான் நேரா ஸ்டேஷனுக்கு போயி, எங்க வீட்டு பிள்ளை வெளிய விடுனு சொன்னேன்.

திராவிட இயக்கம் இடைநிலை சாதிகளை உயர்த்தியிருக்குறதுனு போட்டிருக்கார். இது நீங்களா போடல. என் மேல உங்களுக்கு எவ்வளவு மரியாதை இருக்குனு எனக்கு தெரியும். போராட்டத்துல கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில இருந்தப்போ, உடுத்த மாத்து துணி கூட இல்லாம கஷ்டப்பட்டார் வன்னியரசு. மூனு ஜோடி டிரஸ், கைலி, துண்டு, பேஸ்டு, பிரஷ், தேங்காய் எண்ணெய் வாங்கி நிஜாம் கூட அனுப்புனேன். இந்த பதிவை வன்னியரசுவா எழுதல. அவரை எழுத வைத்தவர் யார்? எழுத உத்தரவிட்டவர் யார்? இது விஸ்வரூபம் எடுக்கின்ற கேள்வி.

நான் ரவிக்குமார்கிட்ட பேசுனேன். ரொம்ப வருத்தப்பட்டார். இன்னைக்கு தினமலருக்கு நல்ல தீனி. தி.மு.க. கோட்டைக்குள் வெடிகுண்டுனு போடுவாங்க. யார் தடுத்தாலும் தி.மு.க. கோட்டைக்கு போறத யாராலயும் தடுத்துவிட முடியாது. கலைஞர் உயிர் போறதுக்கு முன்னாடி, அவர் காதோரம் போயி, உங்களுக்கு எப்படி உறுதுணையா நின்னேனோ, அதே மாதிரி தம்பிக்கும் இருப்பேன்னு வாக்குறுதி கொடுத்தேன். நான் அரசியல் பண்போடு வளர்ந்தவன்ய்யா, எனக்கு சாதியெல்லாம் தெரியாது. நாடாளுமன்றத்தில் பெரியாரின் படத்தை திறக்க வைத்தவன் கலிங்கப்பட்டியில் பிறந்த வைகோ என்பதை மறந்துவிடக் கூடாது.

மலேசியாவுல மணிவண்ணன்கிற தேவேந்திர குள வேளாளர் சகோதரர் இறந்து, அவரது உடலை இந்தியா கொண்டுவர முடியாமல் கஷ்டப்பட்டதை கேள்விப்பட்டேன். கடன்வாங்கி கொடுத்து, அவரது உடலை பரமக்குடி கொண்டு சேர்த்தேன். எல்லா சமூகத்தினர் மேலயும் அண்ணன் தம்பியா கருதுபவன். இதையெல்லாம் எதுக்காக சொல்றேன்னா, நான் எவ்வளவு ஆபத்தானவன் என்பதை வன்னியரசு கூட்டங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தூரத்தில் இருந்து பார்த்தால் இந்த நெருப்பு குளிரை போக்கும், உரசிப் பார்த்தால் இந்த நெருப்பு தீப்பிடிக்கும்.

இதையெல்லாம் நான் பேசுறேனா.. ராத்திரியெல்லாம் நான் தூங்கல. எனக்கு தூக்கம் வரலை. என்னையவா சாதீய ஆதிக்கவாதினு சொல்ற. என்கிட்ட என்ன இருக்குது? நான் அன்னக்காவடி. எங்க தாத்தா பெரிய வீட்டை கட்டி வச்சுட்டு போய்ட்டார். வெள்ளையடிக்க கூட பணமில்லாமல் இருக்குறேன் நான். கைசுத்தமா இருக்குறதால தான் இத்தனை பேர் என் பின்னாடி நிக்குறாங்க.(கைத்தட்டல்)

2006 தேர்தலின் போது, அதிமுக கூட்டணியில வி.சி.க.வோடு நாமும் இடம்பிடித்திருந்தோம். எனக்கு போன் பண்ணுன திருமாவளவன், தேர்தல் செலவுக்கு கூட காசு இல்லைனு ரொம்ப புலம்புனாரு. உடனே கலிங்கப்பட்டிக்கு வரச்சொல்லி, எங்க அப்பா ரூமுக்குள்ள கூட்டிட்டு போயி, 30 லட்ச ரூபாய் பணத்தை தேர்தல் செலவுக்கு கொடுத்தேன். அப்ப எனக்கே செலவுக்கு பணம் கிடையாது. தேர்தல் நெருக்கத்தின் போது, பூத் கமிட்டிக்கு கொடுக்க கூட காசு இல்லைண்ணேனு சொன்னார். உடனே, எனக்கு தெரிஞ்ச 10 பேர்கிட்ட ஆளுக்கு இரண்டு லட்ச ரூபாய்னு கடன் வாங்கி, 12 மணிநேரத்துல 20 லட்ச ரூபாய் புரட்டி கொடுத்தேன். இதை எங்கயாவது நான் சொல்லியிருக்கேனா? மனசு ரொம்ப வெந்து போயிருக்கு, அதனால தான் இதையெல்லாம் சொல்றேன்!” என்று மனதில் உள்ளதை கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் கொட்டித் தீர்த்துவிட்டார்.

வைகோவின் ஆதங்கமும், அதனையொட்டி நடைபெறும் சிறுத்தைகளின் பாய்ச்சலும், திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், எந்த சூழ்நிலையிலும் திமுக கூட்டணியை விட்டு வெளியேறிவிடக் கூடாது என்பதில் வைகோ தீர்மானமாக இருக்கிறார். சாத்தூர் ஆலோசனைக் கூட்டத்தில் கூட, தன் பேச்சின் இறுதியில், “திமுக கூட்டணி தான் நமக்கு. இந்த தொகுதி மட்டுமில்லை, இடைத்தேர்தலை சந்திக்கும் 20 தொகுதியிலும் ஆலோசனைக் கூட்டம் போட போறேன். துடிப்போட வேலை செய்யுங்க.” என கட்சியினருக்கு கட்டளையும் இட்டுள்ளார்.

வைகோ-திருமாவளவன் ஆகிய இருவரிடையே இந்த விவகாரத்தில் கசப்புணர்வு ஏற்பட்டிருப்பது வெளிப்படை ஆகியிருக்கிறது. இருவரும் ஒரே அணியில் இருப்பது சாத்தியமா? என்கிற விவாதங்களும் கிளம்பியிருக்கின்றன.

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close