Advertisment

திருச்சி துப்பாக்கிச் தொழிற்சாலையை தனியாரிடம் தாரை வார்க்க மத்திய அரசு திட்டம்: வைகோ கண்டனம்

திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையைத் தனியாரிடம் தாரைவார்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதால், ஐந்து கிராமங்களைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vaiko

திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையை தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நரேந்திர மோடி அரசு பதவியேற்ற மூன்று ஆண்டுக் காலத்தில் இந்தியாவில் லாபம் ஈட்டும் பொதுத்துறைகள் அனைத்தும் தனியார் மயமாகி வருகின்றன. நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்த பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை மூலம், அடுத்த நிதி ஆண்டுக்குள் ரூ.72,500 கோடி திரட்டுவதற்கான தீவிர முயற்சிகளை மோடி அரசு மேற்கொண்டு இருக்கின்றது.

அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை நூறு விழுக்காடு என்று அனுமதித்ததின் மூலம் பன்னாட்டு நிறுவனங்களின் பிடிக்குள் இந்தியத் தொழில்துறை போய்க்கொண்டு இருக்கிறது. அடுத்த கட்டமாக, பாதுகாப்புத்துறையில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இயங்கி வரும் திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை, 1966 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இது இந்திய இராணுவத்திற்குத் தேவையான தளவாட உற்பத்தியில் முன்னிலை வகிக்கின்றது.

1600 தொழிலாளர்கள், அதிகாரிகள் பணியாற்றி வரும் திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில், பீரங்கிகளில் பொருத்தப்படும் துப்பாக்கி, விமானத்தில் பொருத்தப்படும் துப்பாக்கி மற்றும் கார்~பன், எஸ்.எல்.ஆர்., 7.6 இன்சஸ், 5.56 இன்சஸ், 12.7-13 எம்.எம்.கேனல் இயந்திர ரக ஆயுதங்கள் போன்ற பத்து வகையான துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் 41 படைக்கலத் தொழிற்சாலைகள் உள்ளன. இதில் நான்கு தொழிற்சாலைகளில் இலகு ரக ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையும் ஒன்று.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் இராணுவ வாகனத் தொழிற்சாலையில் அரசு கொள்முதல் நிறுத்தப்பட்டு, தனியார் நிறுவனங்களிடம் வாகனங்களை வாங்குவதற்கு பாதுகாப்புத்துறை முடிவு எடுத்ததால், ஜபல்பூர் இராணுவ வாகனத் தயாரிப்பு தொழிற்சாலை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.

அதேபோன்று திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையைத் தனியாரிடம் தாரை வார்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதால், இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் இதனை நம்பி வாழும் ஐந்து கிராமங்களைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலைமை உருவாகி உள்ளது.

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு தரும் மத்திய அரசு, பாதுகாப்புத் துறை நிறுவனங்களைத் திட்டமிட்டே செயல் இழக்கச் செய்யும் முற்சிகளையும் மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது.

‘நிதி ஆயோக்’ பரிந்துரைகளை ஏற்று, திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையை தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

Bjp Narendra Modi Central Government Vaiko Mdmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment