கதிராமங்கலத்தில் மயங்கி விழுந்த வைகோ!

அண்மையில் புழல் சிறைவாசம் முடித்து ‘ரிலீஸ்’ ஆன வைகோவின் உடல்நிலை இன்னும் சீராகவில்லை. அதனால்தான் வெயில் தாங்காமல் விழுந்தார்.

கதிராமங்கலம் போராட்டக் களத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, திடீரென மயங்கி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் கிராமத்தில் மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் கச்சா எண்ணெய் எடுக்கப்படுவதற்கு உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறார்கள். இந்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அதனைக் கண்டித்து மறியல் நடத்திய பொதுமக்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினார்கள்.

பேராசிரியர் ஜெயராமனை விடுவிக்க வேண்டும்; தடியடி நடத்திய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்; ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கதிராமங்கலம் கிராமத்தை விட்டு வெளியேற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கதிராமங்கலத்தில் 10-வது நாளாக ஜூலை 10-ம் தேதி கடை அடைப்பு நடத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதற்கிடையே அரசியல் தலைவர்கள் யாரையும் கதிராமங்கலம் கிராமத்திற்குள் போலீஸ் அனுமதிக்காமல் இருந்தது. அந்தத் தடையை மீறி ஜூலை 10-ம் தேதி தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பலர் கும்பக்கோணத்தில் இருந்து வாகனங்கள் மூலமாக கதிராமங்கலத்திற்கு கிளம்பினர். இவர்களை போலீஸ் கைது செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவையடுத்து கைது முடிவை போலீஸார் கைவிட்டனர்.

பழ, நெடுமாறன், வைகோ உள்ளிட்டவர்கள் கதிராமங்கலம் கிராமத்திற்கு சென்று அங்குள்ள பொதுமக்களிடம், தடியடி உள்ளிட்ட சம்பவங்கள் குறித்து விசாரித்தனர். அங்கு பொதுமக்கள் மத்தியில் பேசுவதற்காக வைகோ உள்ளிட்டவர்கள் மேடையேறினர். அப்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வைகோ திடீரென மயங்கி விழுந்தார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் சிறிது தண்ணீரை முகத்தில் தெளித்ததும் வைகோ எழுந்தார். வேறு மருத்துவ உதவி எதுவும் தேவையில்லை என கூறிவிட்டார்.

வழக்கமாக நடைபயணம், போராட்டங்கள் ஆகியவை வைகோவுக்கு பழக்கமானவைதான். புழல் சிறைவாசத்திற்கு பிறகு, உடல்நிலையை சீராக்க வைகோ அக்கறை காட்டாததே இந்த தளர்வுக்கு காரணம் என ம.தி.மு.க.வினர் குறிப்பிட்டனர்.

×Close
×Close