நியூட்ரினோ விழிப்புணர்வு குறித்து வைகோ நடைபயணம்: இளைஞரணி இணை அமைப்பாளர் தீக்குளிப்பு!

தொண்டரின் தீக்குளிப்பு சம்பவத்தையடுத்து, கண்ணீர் மல்க மேடையில் வைகோ வேதனை தெரிவித்துள்ளார்.

நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ 10 நாள் நடைபயணமாக மதுரையில் இருந்து இன்று புறப்பட்ட போது, மதிமுக தொண்டர் ரவி என்பவர் தீக்குளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பொட்டிபுரம் மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு மதுரை, தேனி மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த திட்டத்தை கைவிடக்கோரி போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நியூட்ரினோ திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், மக்களிடம் நியூட்ரினோ எதிர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் 10 நாள் நடைபயணத்தை மதுரை பழங்காநத்தத்தில் இருந்து இன்று காலை தொடங்கினார். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வைகோவின் நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்டு மாநில தலைவர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், மற்றும் பழ.நெடுமாறன், சுப.உதயகுமார், வேல்முருகன் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து இன்று மாலை செக்கானூரணியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் வைகோ பேசுகிறார். நாளை உசிலம்பட்டி, அதை தொடர்ந்து ஆண்டிப்பட்டி, போடி, கூடலூர் செல்லும் வைகோ வருகிற 9-ந்தேதி தனது 10-வது நடைபயணத்தை கம்பத்தில் நிறைவு செய்கிறார்.

இந்த நிலையில், வைகோ நடைபயணத்தின் போது, பழங்காநத்தத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையின் அருகே ஒருவர் தீக்குளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசியைச் சேர்ந்த மதிமுக தொண்டர் ரவி என்பவர் தீக்குளித்துள்ளார். இதையடுத்து, அவர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளார்.

தொண்டரின் தீக்குளிப்பு சம்பவத்தையடுத்து, கண்ணீர் மல்க மேடையில் வைகோ வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கண்ணீருடன் பேசுகையில், ‘இயற்கை அன்னை ரவியை மீட்டுத் தர வேண்டும். என் கண் முன்னேயே அவர் தீக்குளித்து விட்டார். ஆண்டுதோறும் சொந்த செலவில் காலண்டர் அடித்துக் கொடுப்பவர் ரவி. அவரை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்’ என உருக்கமாக பேசினார்.

தீக்குளித்த ரவி விருதுநகர் மாவட்ட மதிமுக இளைஞரணி இணை அமைப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close