நடக்கட்டும் பொதுவாக்கெடுப்பு; மலர்க தமிழ் ஈழம்! ஜெனிவாவில் வைகோ முழக்கம்

சுதந்திரமான இறையாண்மையுள்ள தமிழ் ஈழ தேசத்திற்கு பொதுவாக்கெடுப்பு நடத்த முன்வாருங்கள் என ஐநா மனித உரிமை கவுன்சிலில் உரையாற்றிய வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

By: September 18, 2017, 6:02:42 PM

சுதந்திரமான இறையாண்மையுள்ள தமிழ் ஈழ தேசத்திற்கு பொதுவாக்கெடுப்பு நடத்த முன்வாருங்கள் என ஜெனிவாவில் நடைபெற்ற ஐநா மனித உரிமை கவுன்சிலில் உரையாற்றிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜெனிவாவில் ஐ.நா.,மனித உரிமைக் கவுன்சிலின் 36-வது அமர்வு நடைபெற்று வருகிறது. உலக நாடுகள் அனைத்திலும் நடைபெறும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் உலகம் என்ற அமைப்பின் சார்பில் பேசினார்.

வைகோ பேசியதாவது: வரலாற்றின் வைகறைக் காலத்தில் இருந்து ஈழத்தமிழர்கள்தான். இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிமக்கள் ஆவார்கள். சிங்கள இனவாத அரசுகளின் இராணுவத்தால் ஈழத்தமிழர்கள் கொடூரமான படுகொலைக்கு – இன அழிப்புக்கு ஆளானார்கள். 2009-ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே 18 வரை நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் தமிழர்கள் மிருகத்தனமாகக் கொன்று குவிக்கப்பட்டார்கள். சிங்கள அரசு நடத்திய தமிழ் இனப்படுகொலைக்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டிய இதே மனித உரிமைக் கவுன்சில் 2009 மே கடைசி வாரத்தில் இலங்கை அரசு நடத்திய மிகக் கோரமான படுகொலைக்குப் பாராட்டுத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது என்பதை வேதனையுடன் சுட்டிக்காட்டுகிறேன்.

ஐ.நா. சபை 2010-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அமைத்த மார்சுகி தாருஸ்மென், ஸ்டீவன் ராட்னர், லாஸ்வின் சூகா ஆகிய மூவர் குழு, நடைபெற்றது ஈழத் தமிழ் இனப்படுகொலை என்பதற்கு ஆணித்தரமான ஆதாரங்களுடன் 2011 ஏப்ரல் மாதம் அறிக்கை சமர்ப்பித்தது. இலங்கையின் பூர்வீகத் தமிழர் தாயகத்தில் பல்லாயிரக்கணக்கான சிங்களவர்களை சிங்கள அரசு கொண்டுவந்து குடியமர்த்துகிறது. காணாமல் போன தமிழர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை.

சிங்கள இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்கள் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர். ஈழத்தமிழர்கள் வாழும் இடமே கொடும் சிறையாகிவிட்டது.

இருண்டு கிடக்கின்ற ஈழத்தமிழர் வானத்தில் தற்போது தோன்றியுள்ள ஒரே ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்று யாதெனில், மனித உரிமை ஆணையர் அல்ராத் உசேன் சிங்கள இராணுவம் நடத்திய யுத்தக் குற்றங்களை உலகத்தில் எந்த நாடும் விசாரிக்கலாம் என்று கூறியதுதான். நெஞ்சம் வெடிக்கின்ற வேதனையோடும், துயரத்தோடும் மதிப்புமிக்க மனிதஉரிமைக் கவுன்சிலை மன்றாடிக் கேட்கிறேன்.

ஈழத்தமிழர்களின் தாயகத்திலும், உலகெங்கும் உள்ள புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களிடத்திலும் சுதந்திரமான இறையாண்மையுள்ள தமிழ் ஈழ தேசத்திற்கு பொதுவாக்கெடுப்பு நடத்த முன்வாருங்கள். அதற்கு முன்னால் இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் இருந்து சிங்கள இராணுவம் முற்றாக வெளியேற்றப்பட வேண்டும். சிங்களக் குடியேற்றங்கள் அகற்றப்பட வேண்டும். தமிழ்க் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். இந்தப் பொது வாக்கெடுப்பை ஐ.நா.மன்றமே நடத்த வேண்டும் என்றார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Vaiko speech in united nations human rights council in geneva

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X