புத்தகக் கண்காட்சியில், தன்னுடைய நூல்களை விற்றுக் கிடைக்கும் மொத்த விற்பனைத்தொகையை ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு வழங்க உள்ளதாக கவிஞர் வைரமுத்து அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைய, அங்கிருக்கும் தமிழ் அறிஞர்கள் பாடுபட்டு வருகின்றனர். தமிழ் இருக்கை அமைய வேண்டுமானால், 39 கோடி ரூபாய் செலுத்த வேண்டும். இதில், 10 கோடி ரூபாயை தமிழக அரசு வழங்க, உலகமெங்கும் உள்ள தமிழர்கள் தங்களால் ஆன நிதியை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். “இன்று தொடங்கும் சென்னை புத்தகக் கண்காட்சியை வாழ்த்துகிறேன். வாசித்தல் என்ற ஞானப் பயிற்சிக்கு இந்த புத்தகக் கண்காட்சி ஒரு பொற்கூடமாகும். படைப்பாளர் - பதிப்பாளர் - வாசகர் என்ற முக்கூட்டுப் பாசனத்தில் தமிழும் கலையும் தழைத்தோங்கும் என்று நம்புகிறேன். ‘வளரும் தலைமுறையே... வாசிக்க வா’ என அன்போடு வரவேற்போம். ஓர் அறிவுப் பரம்பரை செழுமையுறட்டும்.
இந்தப் புத்தகக் கண்காட்சி மூலம் கிடைக்கும் என் நூல்களின் மொத்த விற்பனைத்தொகையை ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் அமைய இருக்கும் தமிழ் இருக்கைக்கு வழங்கப் போகிறேன்” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆண்டாளைப் பற்றித் தவறாக எழுதியதாக இந்து மதத்தைச் சேர்ந்தவர்களும், பாஜகவினரும் கடந்த இரண்டு நாட்களாக வைரமுத்து மீது கோபத்தில் இருக்கின்றனர். பாஜகவின் தேசிய செயலாளரான எச்.ராஜா, கடுமையான வார்த்தைகளால் வைரமுத்துவை விமர்சித்திருந்தார். இந்நிலையில், இந்த அறிவிப்பு மூலம் தன்மீதான விமர்சனங்களைப் புறம்தள்ளிவிடலாம் என நினைத்து இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் வைரமுத்து என்கிறார்கள்.