அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய ஐந்து லட்சம் நிதியுதவி அளித்துள்ளார் கவிஞர் வைரமுத்து.
அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைய, அங்கிருக்கும் தமிழ் அறிஞர்கள் பாடுபட்டு வருகின்றனர். தமிழ் இருக்கை அமைய வேண்டுமானால், 39 கோடி ரூபாய் செலுத்த வேண்டும். இதில், 10 கோடி ரூபாயை தமிழக அரசு வழங்க, உலகமெங்கும் உள்ள தமிழர்கள் தங்களால் ஆன நிதியை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து, 'சென்னை புத்தக கண்காட்சியில் மூலம் கிடைக்கும் என் நூல்களின் மொத்த விற்பனைத்தொகையை ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் அமைய இருக்கும் தமிழ் இருக்கைக்கு வழங்கப் போகிறேன்' சமீபத்தில் அறிவித்து இருந்தார்.
இதைத் தொடர்ந்து, இன்று ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை அமைக்க ரூ.5 லட்சத்தை வைரமுத்து வழங்கினார். இதற்காக சென்னையில் நடந்த விழாவில் ஐந்து லட்சத்திற்கான காசோலையை, தமிழ் இருக்கைக் குழு தலைவர் ஆறுமுகம் முருகையாவிடம் வைரமுத்து வழங்கினார்.
சென்னை புத்தக கண்காட்சியில் புத்தகங்களின் விற்பனை மூலம் கிடைத்த மொத்த தொகை 4.61 லட்சமாகும். கூடுதல் தொகை சேர்த்து 5 லட்சமாக வைரமுத்து வழங்கியுள்ளார்.
இதைத் தொடர்ந்து இவ்விழாவில் பேசிய வைரமுத்து, "ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள மற்ற மொழிகள் தொடர்ந்து வாழும் என்று கூற முடியாது. ஹார்வர்டு பல்கலை இருக்கையில் உள்ள ஏழு மொழிகளில் சீன மொழிக்கு அடுத்த படியாக இன்றும் பேச்சு வழக்கில் இருப்பது தமிழ் மொழி மட்டுமே. 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ் மொழிக்கு இருக்கை அமைவது ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு தான் பெருமை. தமிழ் செம்மொழி என்ற அறிவிப்புக்கு காரணமான கருணாநிதிக்கும், காங்கிரஸ் அரசுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.