குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, பெரியார் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை மீண்டும் தொடர மாணவி வளர்மதி அனுமதி கோரினார்.
சேலம் மாவட்டம் தாதனூரை சேர்ந்த வளர்மதி, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறை மாணவியாக உள்ளார். கதிராமங்கலம், நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராக போராடி வந்தவர்.
கதிராமங்கல மக்களுக்கு ஆதரவாகவும், ஓஎன்ஜிசி-க்கு எதிராகவும், ஜெயந்தி என்பவருடன் இணைந்து மாணவி வளர்மதி துண்டு பிரசுரம் விநியோகித்துள்ளார். அப்போது, இருவரையும் கைது செய்த காவல்துறை, நடுவர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயந்தியை விடுவித்தனர். ஆனால், வளர்மதி மீது ஏற்கனவே சில வழக்குகள் இருந்த நிலையில், குண்டர் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு கோவை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து, பெரியார் பல்கலைக்கழகத்தில் இருந்து வளர்மதியை இடைநீக்கம் செய்து பல்கலைக்கழகம் உத்தரவிட்டது.
இதனிடையே, மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்து, அவரது தந்தை மாதையன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. தொடர்ந்து, பெரியார் பல்கலைக்கழக பதிவாளரை அணுகி தன்னை மீண்டும் கல்வி பயில அனுமதிக்கும் படி வளர்மதி கேட்டுக் கொண்டார். இதனை ஏற்றுக் கொண்ட பதிவாளர், குண்டர் சட்ட நடவடிக்கை ரத்து செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை வழங்குமாறு தெரிவித்தார். அதன்படி, அந்த நகலை பல்கலைக்கழக பதிவாளரிடம் மாணவி வளர்மதி வழங்கினார். விரைவில் அவர் மீண்டும் கல்லூரியில் சேர்ந்து தனது படிப்பை தொடருவார் என தெரிகிறது.