scorecardresearch

திமுக கூட்டணியில் முற்றும் பூசல்! வெளியேறுகிறதா விசிக? ஸ்டாலின் முடிவு என்ன?

எதிர்வரும் மக்களவைத் தேர்தல், தமிழகத்தில் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் இரு முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக கூட்டணித் தொடர்பான நகர்வுகளை மிக சாமர்த்தியமாக நகர்த்தினாலும், குழப்பங்களும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமே இல்லை. அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டு வந்தாலும், நடப்பு நிகழ்வுகள் அதனை எந்த அளவிற்கு உறுதி செய்யும் என்பதில் குழப்பம் நீடிக்கிறது. ஒருபக்கம், தம்பிதுரை மக்களவையில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு போன்ற பல திட்டங்களை மிகக் கடுமையாக விமர்சிக்க, இங்கு […]

Vanni arasu controversial tweet dmk alliance VCK - திமுக கூட்டணியில் முற்றும் பூசல்! வெளியேறுகிறதா விசிக? ஸ்டாலின் முடிவு என்ன?
Vanni arasu controversial tweet dmk alliance VCK – திமுக கூட்டணியில் முற்றும் பூசல்! வெளியேறுகிறதா விசிக? ஸ்டாலின் முடிவு என்ன?
எதிர்வரும் மக்களவைத் தேர்தல், தமிழகத்தில் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் இரு முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக கூட்டணித் தொடர்பான நகர்வுகளை மிக சாமர்த்தியமாக நகர்த்தினாலும், குழப்பங்களும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமே இல்லை.

அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டு வந்தாலும், நடப்பு நிகழ்வுகள் அதனை எந்த அளவிற்கு உறுதி செய்யும் என்பதில் குழப்பம் நீடிக்கிறது. ஒருபக்கம், தம்பிதுரை மக்களவையில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு போன்ற பல திட்டங்களை மிகக் கடுமையாக விமர்சிக்க, இங்கு தமிழகத்தில் துணை முதல்வர் ஓ.பி.எஸ், ‘மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை முறையாக வழங்குவதில்லை. எவ்வளவோ கடிதம் எழுதியும் பலனில்லை’ என்று விமர்சிக்க, இன்று சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ பொன்முடியின் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘நாடாளுமன்றத்தில் பாஜக அரசை விமர்சித்து பேசிய தம்பிதுரையின் கருத்து தவறல்ல’ என்று தெரிவித்து இருக்கிறார்.

இப்படி அதிமுகவின் முக்கிய தலைகள், பாஜகவை விமர்சித்துக் கொண்டும், விமர்சிப்பவர்களின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தும் வரும் சூழலில், இவ்விரு கட்சிகள் இடையேயான கூட்டணி எந்தளவிற்கு உறுதியாகும் என்று தெரியவில்லை.

மறுப்பக்கம், ஹவுல்ஃபுல் போர்டு மாட்டாத குறையாக கூட்டணி கட்சிகளை உடன் வைத்திருக்கும் திமுகவில், உள் கூட்டணி பூசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

திமுக கூட்டணியில் விசிக தொடர்வதை, திமுகவின் சில முக்கிய புள்ளிகள் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. 2016 சட்டசபைத் தேர்தலில், விசிக கூட்டணி இல்லாமலேயே திமுக 98 இடங்களை வென்றது. அப்போது மக்கள் நலக் கூட்டணியில் இணைந்த வி.சி.க எங்குமே வெற்றிப் பெறவில்லை. அதே நேரத்தில் 2011 சட்டசபைத் தேர்தலில் பா.ம.க. – வி.சி.க கட்சிகள் தி.மு.க. கூட்டணியில் இருந்தன. ஆனாலும் விசிக வெற்றி வாய்ப்பை இழந்தது. எனவே வரும் மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.கவுடன், பா.ம.க. கூட்டணி அமைத்தால் வி.சி.கவுக்கு சீட் கொடுக்கலாம் என்று அந்த சில முக்கிய புள்ளிகள் சொன்னதோடு மட்டுமில்லாமல் பாமகவை கூட்டணிக்குள் இழுக்க பேசியதாகவும் தெரிகிறது.

இதனால், விசிக தலைவர் திருமாவளவன் கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளாராம்.

அதேசமயம், பாமகவை கூட்டணியில் கொண்டு வருவதில் திமுகவின் வேறு சில முக்கிய நிர்வாகிகள் விரும்பவில்லை. கடந்த காலங்களில் திமுக தலைவர் ஸ்டாலினை, அன்புமணி ராமதாஸ் பல முறை சீண்டியது தான் காரணம் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, ‘மாற்றம்.. முன்னேற்றம்’ என்ற முழக்கத்துடன் 2016ல் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து களமிறங்கிய பாமக படுதோல்வி அடைந்ததையும் அவர்கள் திமுக தலைமை கவனத்திற்கு கொண்டுச் சென்றிருக்கிறார்கள்.

இருப்பினும், விசிகவை கழட்டிவிடுவதில் ‘அந்த சிலர்’ தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் மாநில துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு தனது ட்விட்டர் பக்கத்தில், திருக்குறள் ஒன்றை குறிப்பிட்டு, பரபரப்பான கருத்தையும் பதிவிட்டுள்ளார். அதில்,

அமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.
– திருவள்ளுவர்
( பொருள்- வலி அறிதல்)

மற்றவர்களை மதிக்காமலும்
தன் வலிமையை
உணர்ந்து கொள்ளாமலும்,
தன்னைத்தானே
பெரிதாக விளம்பரப்படுத்திக்
கொண்டிருப்பவர்கள்
விரைவில்
கெட்டுத்தொலைவார்கள்
– சமத்துவப்பெரியார் கலைஞர்

அதாவது, தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்று கூட்டு சேர்ந்து களமாடும் போது, உடன் இருப்பவர்களையும் மதிக்காமல், தங்களுடைய வலிமை என்னவென்றும் தெரியாமல், தாங்கள் எதிரணியை எளிதாக வீழ்த்தி விடுவோம் என்று ஆணவத்தோடு செயல்படுபவர்கள் தாங்களாவே வீழ்ந்து விடுவார்கள்.
– வன்னி அரசு

என்று குறிப்பிட்டுள்ளார்.

கூட்டணியில் இருப்பவர்களை மதிக்காமல் ஆணவத்தோடு செயல்படுபவர்கள் தாங்களாகவே வீழ்வார்கள் என்று வன்னி அரசு வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். அவர் திமுகவைத் தான் அப்படி குறிப்பிடுகிறாரா என்பது தெரியவில்லை. ஆனால், அது திமுகவைத் தான் என்றும், திமுக கூட்டணியில் வரப்போகும் காலங்களில் மேலும் பல மாற்றங்கள் நிகழும் என்பதே அரசியல் வல்லுனர்களின் கணிப்பாக உள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Vanni arasu controversial tweet dmk alliance vck