scorecardresearch

3 ஆண்டுகளில் அதிகரித்த வரியை குறைத்தாலே, பெட்ரோல், டீசல் விலை ரூ.15 குறைந்துவிடும்: ராமதாஸ்

3 ஆண்டுகளில் மத்திய. மாநில அரசு அதிகரித்த வரியை குறைத்தாலே பெட்ரோல் விலை 15.77 ரூபாயும், டீசல் விலை 15.47 ரூபாயும் குறையும்

Ramadoss,

பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு கடந்த 3 ஆண்டுகளில் உயர்த்திய கலால் வரியையும், தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் உயர்த்திய மதிப்புக் கூட்டு வரியையும் உடனடியாக குறைக்க வேண்டும். இதன் மூலம் எரிபொருட்களின் விலை 22% வரை குறைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகிலேயே பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ள நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் உற்பத்தி விலை ரூ.25.00 ஆக உள்ள நிலையில், அவற்றின் விற்பனை விலை மூன்று மடங்குக்கும் அதிகமாக உள்ளது.

பெட்ரோல் மீது ரூ.45 வரையிலும், டீசல் மீது ரூ.35 வரையிலும் வரிகள் விதிக்கப்படுகின்றன. மத்திய, மாநில அரசுகளின் மறைமுக வரி வருவாயில் பெரும்பகுதி பெட்ரோல், டீசல் மீதான வரிகளில் இருந்து தான் கிடைக்கின்றன. ‘ஒற்றை நாடு, ஒற்றை வரி’ என்ற பெயரில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொருட்கள் மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டுள்ள போதிலும் கூட, பெட்ரோல், டீசலை அந்த வரி விதிப்பின் கீழ் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் தயாராக இல்லை. காரணம் தங்களின் வரி வருவாய் பெரிதும் குறைந்து விடும் என்ற அச்சம் தான்.

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.2 மட்டும் குறைக்கப்பட்டிருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் பெட்ரோல் மீதான கலால் வரி 11.77 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி 13.47 ரூபாயும் உயர்த்தப்பட்ட நிலையில், லிட்டருக்கு ரூ.2 மட்டும் குறைக்கப்பட்டிருப்பது போதுமானதல்ல.

எரிபொருட்கள் மீதான கலால் வரி குறைக்கப்பட்ட பிறகும் கூட அவற்றின் மூலம் கிடைக்கும் வருவாய் ரூ.2.42 லட்சம் கோடியிலிருந்து ரூ.2.73 லட்சம் கோடியாக, அதாவது ரூ.31,000 கோடி அதிகரிக்கும். இது பெரு நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரியை விட மிகவும் அதிகம் என்பதிலிருந்தே, பணக்காரர்களை விட, ஏழை, நடுத்தர மக்களிடமிருந்து தான் மத்திய அரசு அதிக வரியை பறிக்கிறது என்பதை உணர முடியும்.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததைப் பயன்படுத்தி மத்திய அரசு கலால் வரியை உயர்த்தியதைப் போலவே தமிழக அரசும் பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரியை 27 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாகவும், டீசல் மீதான வரியை 21.40 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காடாகவும் உயர்த்தியது.

கடந்த 3 ஆண்டுகளில் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து அதிகரித்த வரியை குறைத்தாலே பெட்ரோல் விலை லிட்டருக்கு 15.77 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 15.47 ரூபாயும் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த வரிக்குறைப்பை செய்ய அரசுகள் மறுக்கின்றன.

மத்திய, மாநில அரசுகள் உயர்த்தப்பட்ட வரியை குறைப்பதால் அவற்றுக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்படப்போவதில்லை. எரிபொருட்கள் மீதான மதிப்புக் கூட்டு வரி, கலால் வரியில் மாநில அரசின் பங்கு ஆகியவற்றின் மூலம் தமிழக அரசுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.26.48, டீசல் விற்பனை மூலம் ரூ.18.26 வருவாய் கிடைக்கிறது. பெட்ரோலின் உற்பத்திச் செலவை விட அதிகமாக மதிப்புக்கூட்டு வரியை மாநில அரசு வசூலிப்பது எவ்வகையிலும் முறையானதோ, நியாயமானதோ அல்ல.

எனவே, பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு கடந்த 3 ஆண்டுகளில் உயர்த்திய கலால் வரியையும், தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் உயர்த்திய மதிப்புக் கூட்டு வரியையும் உடனடியாக குறைக்க வேண்டும். இதன் மூலம் எரிபொருட்களின் விலை 22% வரை குறைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Vat on petrol diesel should be decreased ramadoss urges to tamilnadu government

Best of Express