Advertisment

துணைவேந்தர் நியமன மோசடி: ஆளுநர், உயர்கல்வி அமைச்சர் விலக வேண்டும்! ராமதாஸ்

ஆட்சியாளர்களிடம் அதிகமாக பணம் கொடுத்தால் எளிதாக துணைவேந்தராகி விடலாம் என்பது தான் செல்லத்துரையின் நியமனம் சொல்லும் செய்தியாகும்.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
ramadoss. PMK, Ramadoss,Karnadaka, Tamilnadu Government, Private sector job,

மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் நியமனத்தில் நடந்த மோசடிக்கு பொறுப்பேற்று பல்கலைக்கழக வேந்தர், இணைவேந்தர் ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Advertisment

இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக முனைவர் பி.பி. செல்லத்துரை நியமிக்கப் பட்டதில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பது அம்பலமாகியிருக்கிறது. உயர்கல்வி நிறுவனத் தலைவர்கள் நியமனத்தில் இதுபோன்ற முறைகேடுகள் தொடர்ச்சியாக நடப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக செல்லத்துரை நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் விசாரிக்கப்பட்டு வருகிறது. அவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, துணைவேந்தர் தேர்வுக்குழுவின் உறுப்பினர்களான ஹரிஷ் மேத்தா, ராமகிருஷ்ணன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில் இடம் பெற்றுள்ள உண்மைகள் தான் துணைவேந்தர் நியமனத்தில் நடந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தியுள்ளன.

தேர்வுக்குழு உறுப்பினர்களில் ஒருவரான ஹரிஷ் மேத்தா தாக்கல் செய்துள்ள மனுவில்,‘‘ துணைவேந்தராக நியமிக்கத் தகுதியான மூவரை ஆளுநருக்கு பரிந்துரைப்பதற்கான கடைசிக் கூட்டம் 19.05.2017 அன்று சென்னை ஆளுனநர் மாளிகை அருகிலுள்ள லெமென் ட்ரீ விடுதியில் நடைபெற்றது. பெயர்களை பரிசீலிக்கத் தொடங்கியதுமே தேர்வுக்குழுவின் அமைப்பாளரான முனைவர் முருகதாஸ் குறுக்கிட்டு முனைவர் செல்லத்துரையின் பெயரைப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதை ஏற்க மறுத்த நான், செல்லத்துரை மீது கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது. அதுமட்டுமின்றி துணைவேந்தர் பதவிக்கு செல்லத்துரை தகுதியற்றவர்.

இளைஞர் நலத்துறை இயக்குனராக அவர் 30 ஆண்டுகள் பணியாற்றியிருந்தாலும், அது பேராசிரியர் நிலை பதவியில்லை. மேலும் குற்றப்பின்னணி கொண்ட ஒருவர் காமராசர் பல்கலைக்கழகத் தலைமைப் பொறுப்புக்கு வரக்கூடாது என்று கூறி அவரது விண்ணப்பத்தில் இருந்த பல குறைகளை சுட்டிக்காட்டினேன். ஆனால், அவர் அரசாங்கத்தின் தேர்வு என்று அமைப்பாளர் கூறியதால் அவரது பெயருக்கு ஒப்புதல் அளிப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டது’’ என்று கூறப்பட்டுள்ளது.

ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவிலும் இதே கருத்து தான் இடம்பெற்றுள்ளது. துணைவேந்தர் பதவிக்கு செல்லத்துரை பெயரை பரிந்துரைக்கும்படி அவரும் நிர்பந்தப்பட்டிருக்கிறார். இவையெல்லாம் உண்மையாக இருக்குமா? என்ற ஐயமே தேவையில்லை. இவை அனைத்தும் உண்மை. தமிழகத்திலுள்ள அனைத்து பல்கலைக் கழக துணைவேந்தர்களும் இதே முறையில் தான் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என்பதில் ஐயமில்லை.

காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லத்துரை நியமிக்கப்பட்டதைக் கண்டித்து மே 22-ம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மை என்பது தேர்வுக்குழு உறுப்பினர்கள் தாக்கல் செய்த மனு மூலம் உறுதியாகி உள்ளது.

காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கான முதல் தேர்வுக்குழு 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமைக்கப்பட்டது. இரண்டாவது தேர்வுக்குழு கடந்த ஆண்டு நவம்பரில் அமைக்கப்பட்டது. கடந்த இரு ஆண்டுகளாக தேர்வுக்குழு பலமுறை கூடியும் அப்போதெல்லாம் பரிசீலிக்கப்படாத பெயர் கடைசி நாளில் திணிக்கப்படுக்கிறது என்றால், தேர்வுக்குழு என்பதெல்லாம் பெயரளவுக்குத் தான் என்பதையும், தகுதியே இல்லாவிட்டாலும் ஆட்சியாளர்களிடம் அதிகமாக பணம் கொடுத்தால் எளிதாக துணைவேந்தராகி விடலாம் என்பது தான் செல்லத்துரையின் நியமனம் சொல்லும் செய்தியாகும்.

தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரும், மு.வரதராசனாரும், சிட்டிபாபுவும் அலங்கரித்த காமராசர் பல்கலைகக்கழக துணைவேந்தர் இருக்கையில் செல்லத்துரை போன்றவர்கள் அமர்வது தலைகுனிய வேண்டிய ஒன்று.

துணைவேந்தர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட மூவரையும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேர்காணல் செய்ததாகவும், அவர்களில் செல்லத்துரையின் கல்விப்பணியை பாராட்டி அவரை தேர்வு செய்ததாகவும் அவரே கூறியிருக்கிறார்.

துணைவேந்தரை நேர்காணல் செய்து தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டிய ஆளுநர், தாம் தேர்வு செய்தவரின் குற்றப்பின்னணி குறித்து அறிந்து கொள்ளாதது அதிர்ச்சி அளிக்கிறது. காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக தகுதியற்ற, குற்றப்பின்னணி உள்ளவர் நியமிக்கப்பட்டதற்கு பல்கலை.வேந்தரான ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும்.

துணைவேந்தராக செல்லத்துரையை நியமிக்க ஆட்சியாளர்கள் ரூ.15 கோடி கையூட்டு வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்தும், கடந்த 6 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட துணைவேந்தர்கள் நியமனம் மத்தியப் புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.

துணைவேந்தராக நியமிக்கப்பட்டது முதல் இன்று வரை செல்லத்துரை பிறப்பித்த ஆணைகள் அனைத்தும் கல்வியாளர் குழுவால் மறுஆய்வு செய்யப்பட வேண்டும். துணைவேந்தர் நீக்கப்பட வேண்டும். இந்த நியமனத்தில் நடந்த மோசடிக்கு பொறுப்பேற்று பல்கலைக்கழக வேந்தர், இணைவேந்தர் ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Pmk Ramadoss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment