நீண்ட இடைவெளிக்கு பிறகு, திமுக தலைவர் கருணாநிதியை விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் சந்தித்தார். ‘கருணாநிதி நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக’ திருமா கூறினார்.
திமுக தலைவர் கருணாநிதி, உணவுக் குழாயில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை செய்து, செயற்கை குழாய் பொருத்தப்பட்டது. இடையிடையே மருத்துவமனையில் பரிசோதனைகளை செய்துகொண்டு, கோபாலபுரம் வீட்டில் ஓய்வில் இருக்கிறார் கருணாநிதி.
அவரது குடும்பத்தினர் தவிர, வெளி நபர்கள் கருணாநிதியை சந்திக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது. பார்வையாளர்கள் மூலமாக அவருக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்கவே இந்த ஏற்பாடு! நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து என வெகு சிலரே தொடக்கத்தில் கருணாநிதியை சந்தித்த வெளி நபர்கள்! அதன்பிறகு கருணாநிதியின் கடந்த பிறந்த தினத்தையொட்டி, அவரது சட்டமன்ற வைரவிழாவுக்கு வருகை தந்த அகில இந்தியத் தலைவர்களான ராகுல் காந்தி, நிதிஷ்குமார், சீத்தாராம் யெச்சூரி, சுதாகர் ரெட்டி, டி.ராஜா, இவர்களுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தமிழக இடதுசாரி தலைவர்களும் கருணாநிதியை சந்தித்தனர்.
விடுதலை சிறுத்தைகள் தலைவரான திருமாவளவன், கடந்த நான்கைந்து மாதங்களாக திமுக.வுடன் இணக்கமான உறவில் இருந்தாலும், கருணாநிதியை சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு அமையவில்லை. குறிப்பாக கடந்த ஜூன் 3-ம் தேதி கருணாநிதியின் பிறந்த நாளன்று சந்திக்க விரும்பிய திருமாவுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இயல்பாகவே கருணாநிதி மீது மிகுந்த அன்பு கொண்ட திருமாவுக்கு இது அதிருப்தியை உருவாக்கியது.
இந்தச் சூழலில் ஆகஸ்ட் 19-ம் தேதி தனது பிறந்த நாளையொட்டி கருணாநிதியை சந்திக்க விருப்பம் தெரிவித்தார். லண்டனில் இருந்த ஸ்டாலினுக்கு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது ஒப்புதலுடன் நேற்று (19-ம் தேதி) கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் திருமா சந்தித்தார். அப்போது திருமாவுடன், கருணாநிதியின் மகன்களில் ஒருவரான மு.க.தமிழரசு உடன் இருந்தார்.
இந்த சந்திப்பின்போது கருணாநிதி, திருமா ஆகிய இருவருமே நெகிழ்ச்சியுடன் இருந்ததை உணர முடிந்ததாக சிறுத்தைகள் கூறினர். தொண்டையில் குழாய் பொருத்தியிருப்பதால், கருணாநிதி பேசும் சூழலில் இல்லை. திருமாவே கருணாநிதியின் கையை தனது ஒரு கையில் பிடித்துக்கொண்டு, மற்றொரு கையை தனது நெஞ்சில் அழுத்தமாக வைத்து, ‘ஐயா, உங்க திருமா வந்திருக்கேன்’ என சற்றே வலுவான குரலில் தன்னை அறிமுக செய்திருக்கிறார். கருணாநிதியும் அவரை அடையாளம் தெரிவதாக முகபாவம் காட்டினார்.
இந்த சந்திப்புக்கு பிறகு நிருபர்களிடம் பேசிய திருமா, ‘கருணாநிதி நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக’ தெரிவித்தார். மேலும், ‘செப்டம்பர் 21-ம் தேதி சிறுத்தைகள் சார்பில் மாநில சுயாட்சி மாநாட்டை சென்னையில் நடத்துகிறோம். இதில் மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், இடதுசாரி தலைவர்களான ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், புதுவை முதல்வர் நாராயணசாமி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடகா முதல்வர் சித்தராமையா ஆகியோரையும் அழைக்க இருக்கிறோம். அந்த மாநாடு, தமிழக அரசியலில் முக்கிய திருப்பத்தை உருவாக்கும்.’ என தெரிவித்தார் திருமா.