மோடி அரசு நவ பாசிச அரசு அல்ல; சி.பி.எம் வரைவுத் தீர்மானத்தால் சலசலப்பு: வி.சி.க எம்.பி ரவிக்குமார் எழுப்பும் கேள்வி

சி.பி.ஐ எம் வரைவுத் தீர்மானத்தில், மோடி தலைமையிலான அரசு நவ பாசிசக் கூறுகள் கொண்ட அரசு என்றும் ஆனால், அது நவ பாசிச அரசு அல்ல என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், காங்கிரஸ் கட்சி தனது பொருளாதாரக் கொள்கை திசையை மாற்றவிலை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

author-image
Balaji E
New Update
Ravikumar Prakash karat

இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் சி.பி.ஐ எம்-ன் வரைவு தீர்மானம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

சி.பி.ஐ எம் கட்சியின் 24-வது தேசிய மாநாடு இன்னும் சில மாதங்களில் மதுரையில் நடைபெறவுள்ளது. அந்த மாநாட்டில் நிறைவேற்றுவதற்கான வரைவுத் தீர்மானங்கள் கொல்கத்தாவில் நடைபெற்ற அக்கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் ஏற்கப்பட்டு விவாதத்துக்கு விடப்பட்டுள்ளன. அந்த தீர்மானங்கள் சி.பி.ஐ எம்-ன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டு விவாதத்திற்கு விடப்பட்டுள்ளது.

Advertisment

சி.பி.ஐ எம் வரைவுத் தீர்மானத்தில், மோடி தலைமையிலான அரசு நவ பாசிசக் கூறுகள் கொண்ட அரசு என்றும் ஆனால், அது நவ பாசிச அரசு அல்ல என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், காங்கிரஸ் கட்சி தனது பொருளாதாரக் கொள்கை திசையை மாற்றவிலை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சி.பி.ஐ எம் வரைவுத் தீர்மானத்தில் காங்கிரஸ் கட்சி குறித்து குறிப்பிடுகையில், “முக்கிய மதச்சார்பற்ற எதிர்க்கட்சியாக இருப்பதால், பா.ஜ.க-வுக்கு எதிரான போராட்டத்திலும், மதச்சார்பற்ற சக்திகளின் பரந்த ஒற்றுமையிலும் அதற்கு ஒரு பங்கு உண்டு. காங்கிரஸ் குறித்த சி.பி.ஐ(எம்)-ன் அணுகுமுறை மதச்சார்பற்ற சக்திகளின் பரந்த ஒற்றுமைக்கான இந்தத் தேவையால் தீர்மானிக்கப்படுகிறது. இருப்பினும், சி.பி.ஐ எம் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் ஒரு அரசியல் கூட்டணியை வைத்துக்கொள்ள முடியாது.” என்று குறிப்பிட்டுள்ளது.

சி.பி.ஐ எம்-ன் இந்த தீர்மானங்கள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றாலும், மோடி தலைமையிலான அரசு நவ பாசிச அரசு அல்ல என்று கூறியிருப்பது இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே சலசலப்பையும் விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது. 

Advertisment
Advertisements

இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் சி.பி.ஐ எம்-ன் வரைவு தீர்மானம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து வி.சி.க எம்.பி., ரவிக்குமார், “நவ பாசிசமா? அதிகாரத்துவமா?” என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “தற்போதுள்ள ஒன்றிய பா.ஜ.க ஆட்சியைப் பாசிச ஆட்சி எனக் கூற முடியுமா? என்பதைப் பற்றிய சி.பி.ஐ எம் கட்சியின் வரைவுத் தீர்மானம் ஆங்கில ஊடகங்களில் பெரிய விவாதத்தை எழுப்பியுள்ளது. 

பாசிச அரசா இல்லையா என்பது தேவையற்ற வாதம் எனச் சிலரும்; ஸ்டான் சாமி, சாய்பாபா மரணங்களைப் பார்த்த பின்பும் பாசிச அரசு இல்லை எனச் சொல்வது அதிர்ச்சி அளிக்கிறது எனச் சிலரும் கூறுகின்றனர். 

இந்த விவாதம்  ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பே  சி.பி.ஐ எம் கட்சிக்குள் நடந்த ஒன்றுதான். அந்த விவாதத்தில் தோழர் சீதாராம் யெச்சூரியின் பங்கு என்ன? அவரது நிலைபாட்டால் விளைந்த நன்மை என்ன ? என்பதைத் தெரிந்துகொள்ளவும், பாசிசத்தின் வெகுமக்கள் உளவியல் குறித்துப் புரிந்துகொள்ளவும் விரும்புவோர் இந்த நூலைப் படிக்கலாம். 

தோழர் சீதாராம் யெச்சூரி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் நான் ஆற்றிய இந்த உரை சி.பி.ஐ (எம் ) கட்சியில் பாசிசம் குறித்த நிலைப்பாடு என்ன மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தியது என்பதை மேலோட்டமாக சுட்டிக் காட்டுகிறது. 

இந்தியாவில் தற்போது அரசியல் பண்பாட்டுத் தளங்களில் மேலாதிக்கம் பெற்றுள்ள பாசிசம் எத்தகைய தன்மைகளைக் கொண்டதாக இருக்கிறது என்பதை நாம் நுட்பமாக ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டும். அதற்குப் பாசிசம் குறித்த அண்மைக்கால ஆய்வுகள் நமக்குப் பயன்படும்.

பாசிச அரசை நிறுவுவதில் கருத்தியல்சார் அரசு சாதனங்கள் ( Ideological State Apparatuses ) முதன்மையான பாத்திரத்தை வகிக்கின்றன. அவை அடக்குமுறைசார் அரசு சாதனங்களான ( Repressive State Apparatuses) போலிஸ், ராணுவம் முதலானவற்றிலிருந்து விலகி சுயேச்சையாக செயல்படுகின்றன. பாசிசத்தின் பிடியிலிருந்து அடக்குமுறைசார் அரசு சாதனங்களை விடுவித்தால் அது கருத்தியல்சார் அரசு சாதனங்களில் பதுங்கிக்கொண்டு மீண்டும் அடக்குமுறைசார் அரசு சாதனங்களைக் கைப்பற்றுவதற்கான  வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும். அங்கே தனது பணியைத் தொடர்ந்து செய்யும். 

1970-களின் பின்பகுதியில் ஜனதா ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் அரசாங்கத்தைக் கையாளும் ஆட்சி அதிகாரத்துக்குள் ஊடுருவிய பாசிஸ்டுகள், ஆட்சி அதிகாரம் போன பிறகு, சிவில் சமூகம் எனப்படும் கல்வி, குடும்பம், ஊடகம் , சமயம், அரசியல் கட்சிகள்  முதலான கருத்தியல்சார் அரசு சாதனங்களில் தமது நடவடிக்கைகளை விரிவுபடுத்தினர். சுமார் இருபது ஆண்டுகளில் அடக்குமுறைசார் அரசு சாதனங்களை சுயேச்சையாகக் கைப்பற்றும் அளவுக்கு வளர்ச்சி பெற்றனர். 

இப்போது பாசிசம் பற்றிப் பேசுகிற பலரும் தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதிலிருந்து பா.ஜ.க-வைத் தடுத்துவிட்டாலே பாசிச அபாயம் நீங்கிவிடும் எனக் கருதுவதுபோல் தெரிகிறது. இது மேம்போக்கான புரிதலேயாகும். இன்று கருத்தியல்சார் அரசு சாதனங்களில் வகுப்புவாதத்தின் மேலாதிக்கம் வலுவாக நிறுவப்பட்டுள்ளது. அதை அகற்றாமல் பாசிச ஆபத்தை முற்றாக நீக்கிவிட முடியாது.

“வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்கும் அமைப்புகளும், புரட்சிகர அமைப்புகளும்தான் கருத்தியல்சார் அரசு நிறுவனங்களாக மாறாமல் தப்பிக்க முடியும்” என நிகோஸ் பௌலண்ட்சாஸ் கூறுகிறார் (பக்கம் 308) “எப்படி இந்த அமைப்புகளை உருவாக்குவது, இலக்குகளை நோக்கிச் செலுத்துவது, கருத்தியல்சார் அரசு சாதனங்களின் பிடியை உடைப்பதோடு தான் அதற்குள் நழுவி விழுந்துவிடாமல் எப்படி பார்த்துக்கொள்வது என்பதைப்பற்றிய புரிதல் இதற்குத் தேவை” எனக் கூறுகிறார் பௌலண்ட்சாஸ். 

பாசிசம் ஒரு நாட்டில் மேலாதிக்கம் பெற்றுவிட்டதன் அடையாளம் அடக்குமுறையும் கணக்கற்ற உயிரிழப்புகளும் மட்டுமல்ல. மக்கள் எப்போது புனைவுக்கும் யதார்த்தத்துக்குமான வித்தியாசத்தைப் பார்க்கத் தவறுகிறார்களோ, எப்போது பொய்க்கும் உண்மைக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை என நம்ப ஆரம்பிக்கிறார்களோ அதுவும் பாசிசத்தின் அடையாளம்தான். அது ஒருநாளில் நிறுவப்படுவதில்லை. சமூகத்தின் நனவிலியில் கொஞ்சம் கொஞ்சமாக அந்த மாற்றம் நிகழ்கிறது. மறுக்கப்படாத பொய்கள் அந்த நிலையை நோக்கி சமூகத்தை உந்துகிறது. 

அம்பர்ட்டோ எக்கோ என்ற சிந்தனையாளர் பாசிசத்தின் அடையாளங்கள் என்று சிலவற்றைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். மரபை வழிபடுதல் என்பது பாசிசத்தின் ஒரு அடையாளம் என்கிறார். உண்மை என்பது ஏற்கனவே சொல்லப்பட்டு விட்டது நாம் அதற்கான வியாக்கியானங்களை மட்டுமே கொடுக்க முடியும் என்பது இதன் வாதம். சனாதனம் என்பது அதுதான். 

நவீனத்துவத்தை நிராகரித்தல் என்பதை இன்னொரு அடையாளமாக அவர் குறிப்பிடுகிறார். புத்தொளிக்காலம் (enlightment) என்றும் பகுத்தறிவின் யுகம் (age of reason) என்றும் சொல்லப்படுகிற நவீனத்துவக் காலத்தை நிராகரிப்பது, நவீனத்துவம் என்றாலே அது பூர்ஷ்வா வாழ்க்கை முறை என்று கொச்சைப்படுத்துவது, பகுத்தறிவுக்கு எதிரான மூடத்தனங்களைக் கொண்டாடுவது இதன் பண்பாகும்.

இன அடிப்படையில் சில சமூகக் குழுக்களை அந்நியர்களாக கட்டமைப்பது அவர்களே நம் எதிரிகள் என்று சொல்லுவது பாசிசத்தின் இன்னொரு அடையாளம் என்று அவர் சொல்கிறார். தேசியத்தைக் கட்டமைப்பதற்கு முதலில் எதிரிகளை அடையாளப்படுத்துவது இதன் ஒரு பண்பாகும். மத்திய தரவர்க்கத்தைத் தன்னுடைய கருத்தியல் மேலாதிக்கத்துக்குள் பாசிசம் கொண்டு வரும் என்கிறார் எக்கோ. பாராளுமன்ற ஜனநாயக முறையைப் பாசிசம் விரும்புவதில்லை. அதன் மீது தொடர்ந்து சந்தேகத்தை எழுப்புவது, ஜனநாயகம் அல்லாத வழிமுறைகளைப் பின்பற்றுவது பாசிசத்தின் குணாம்சமாகும். விமர்சனப் பூர்வமான பார்வையைப் பாசிசம் எதிராகப் பார்க்கிறது. பள்ளிப் பாட நூல்களைத் தன்னுடைய நோக்கத்துக்கு அது பயன்படுத்தி, இளைய சமுதாயத்தினரிடையே விமர்சனத் தன்மை அற்ற கீழ்ப்படிதலை ஊக்குவிப்பது-  இதுவும் பாசிசத்தின் குணம் தான் என்று அவர் குறிப்பிடுகிறார். 

பாசிசமானது தன்னை ஆபத்தில்லாத வெகுளியாகக் காட்டிக் கொண்டு மக்களை ஈர்க்க முயற்சிக்கிறது. அதன் உள்ளார்ந்த நோக்கங்களைத் தொடர்ந்து அம்பலப்படுத்துவது அவசியம் என்று அவர் குறிப்பிடுகிறார். அம்பர்த்தோ எக்கோ குறிப்பிட்டிருக்கிற எல்லா அம்சங்களுமே இந்தியாவில் இப்போது காணக்கூடியவையாக இருக்கின்றன. எனவே இந்தியாவில் நிலவுவது பாசிசச் சூழல்தான் என்பதில் எந்தவொரு ஐயமும் இல்லை.

இந்திய பாசிசத்தைப் புரிந்துகொள்ள  வகுப்புவாதத்தை மட்டுமே ஆராய்ந்தால் போதாது. கும்பலாட்சி ( mobocracy) ஜனரஞ்சக வாதம் ( populism) முதலானவற்றுக்கும் பாசிசத்துக்கும் இடையிலான உறவையும் பார்க்க வேண்டும். தற்போதுள்ள அரசியல் கட்சிகளில் பாசிசம் எவ்வாறு ஊடுருவி அவற்றைத் தன்வயப்படுத்தியுள்ளது என்பதையும்  நாம் நுணுகிப் பார்க்கவேண்டும். அப்போதுதான் பாசிசத்தின் பிடிக்கு ஆட்படாத,  கருத்தியல்சார் அரசு சாதனமாக மாறாத ஒரு அமைப்பு எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை உணரமுடியும். இந்த உரையைப் படிப்பவர்களில் ஒரு சிலராவது அதை நோக்கி உந்தப்படுவார்களென நம்புகிறேன். ” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், “காங்கிரஸ் கட்சியுடன் அரசியல் கூட்டணி வைத்துக்கொள்ள முடியாது”  என்று சி.பி.ஐ எம் கட்சியின் தேசிய மாநாட்டில் நிறைவேற்றப்படவுள்ள வரைவுத் தீர்மானம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் குறிப்பிடுகையில், “சிபிஐ எம் கட்சியின் 24-வது தேசிய மாநாடு இன்னும் சில மாதங்களில் மதுரையில் நடைபெறவுள்ளது. அதில் நிறைவேற்றுவதற்கான வரைவுத் தீர்மானங்கள் கொல்கத்தாவில் நடைபெற்ற மத்தியக் குழுக் கூட்டத்தில் ஏற்கப்பட்டு விவாதத்துக்கு விடப்பட்டுள்ளன. அதில் பா.ஜ.க, காங்கிரஸ், மாநிலக் கட்சிகள் குறித்த மதிப்பீடும் முன்வைக்கப்பட்டுள்ளன. 
காங்கிரஸ் கட்சியைக் குறித்துப் பின்வருமாறு அதில் கூறப்பட்டுள்ளது ( பக்கம் 52-53) : 

“காங்கிரஸ்: 
காங்கிரஸ் மக்களவையில் தனது பலத்தை 44-லிருந்து 100 ஆக உயர்த்த முடிந்தது. இந்தியா கூட்டணியில் கூட்டாளிகள் இருப்பதால் பயனடைந்தது. நாடு முழுவதும் முஸ்லிம் சிறுபான்மையினரின் ஆதரவை கணிசமான அளவில் பெற முடிந்தது. காங்கிரஸ் தளம் கணிசமாக விரிவடையவில்லை.

வடக்கில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ஹரியானாவில் அது தோற்கடிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப், ஒடிசா மற்றும் அசாம் போன்ற மாநிலங்களில், அது கணிசமாக பலவீனமடைந்துள்ளது. கர்நாடகா மற்றும் தெலுங்கானா சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்று அங்கு அரசாங்கங்களை அமைத்ததன் மூலம் தெற்கில்தான் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சி தனது பொருளாதாரக் கொள்கை திசையை மாற்றவில்லை. அது குரோனி முதலாளித்துவத்திற்கு எதிராகப் பேசுகிறது, ஆனால், அத்தகைய முதலாளிகளை உருவாக்கும் அதே புதிய தாராளமயக் கொள்கைகளையே பின்பற்றுகிறது. அதன் தேசியத் தலைமை இந்துத்துவா நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக மிகவும் வெளிப்படையான நிலைப்பாட்டை எடுத்து வரும் அதே வேளையில், பா.ஜ.க மற்றும் அதன் இந்துத்துவா கூட்டாளிகளின் ஆக்ரோஷமான தாக்குதலை எதிர்கொள்ளும்போது காங்கிரஸில் இன்னும் ஊசலாட்டங்களும் சமரசம் செய்யும் போக்கும் உள்ளன. காங்கிரஸ் கட்சி பா.ஜ.க-வைப் போலவே அதே வர்க்க நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இருப்பினும், முக்கிய மதச்சார்பற்ற எதிர்க்கட்சியாக இருப்பதால், பாஜகவுக்கு எதிரான போராட்டத்திலும், மதச்சார்பற்ற சக்திகளின் பரந்த ஒற்றுமையிலும் அதற்கு ஒரு பங்கு உண்டு. காங்கிரஸ் குறித்த சி.பி.ஐ (எம்)-ன் அணுகுமுறை மதச்சார்பற்ற சக்திகளின் பரந்த ஒற்றுமைக்கான இந்தத் தேவையால் தீர்மானிக்கப்படுகிறது. இருப்பினும், சி.பி.ஐ. எம் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் ஒரு அரசியல் கூட்டணியை வைத்துக்கொள்ள முடியாது.” என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

சி.ஐ.ஐ (எம்) கட்சி மற்ற இடதுசாரி அமைப்புகளிலிருந்து விலகி, 24-வது தேசிய மாநாட்டிற்கான வரைவு அரசியல் தீர்மானம் குறித்த சி.பி.ஐ(எம்) குறிப்பில், அதன் “நவ-பாசிச பண்புகள்” இருந்தபோதிலும், மோடி அரசு “பாசிச அல்லது நவ-பாசிச” என்று கட்சி கருதவில்லை என்று கூறுகிறது.

மலையாளத்தில் சி.பி.ஐ. (எம்)-ன் சித்தாந்த பத்திரிகையாகக் கருதப்படும் சிந்தா வார இதழின் சமீபத்திய இதழில், கட்சியின் பொலிட்பீரோ வரைவு அரசியல் தீர்மானம் குறித்த தெளிவுபடுத்தும் குறிப்பை வெளியிட்டுள்ளது.  “அரசியல் தீர்மானத்தின் தேசிய நிலைமை குறித்த பகுதியில் 'நவ-பாசிஸ்ட்' என்ற வார்த்தையை நாங்கள் பயன்படுத்துவது இதுவே முதல் முறை" என்று அந்தக் குறிப்பு கூறுகிறது. மேலும், நவ-பாசிசம் என்பது நவ-தாராளமயம் மற்றும் உலகளாவிய போக்கின் நெருக்கடியின் விளைவாகும் என்றும் கூறுகிறது.  “பாஜக-ஆர்எஸ்எஸ் கீழ் உள்ள தற்போதைய அரசியல் அமைப்பு ஒரு இந்துத்துவா-கார்ப்பரேட் ஆதிக்க ஆட்சியாகும், இது நவ-பாசிச பண்புகளை வெளிப்படுத்துகிறது. மோடி அரசாங்கம் ஒரு பாசிச அல்லது நவ-பாசிச அரசு என்று நாங்கள் கூறவில்லை. இந்திய அரசாங்கத்தை நவ-பாசிச ஆட்சியாக நாங்கள் சித்தரிக்கவில்லை” என்று அது கூறுகிறது.

இது கேரளாவில் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, சி.பி.ஐ(எம்)-ன் நிலைப்பாடு சங்க பரிவாருக்கு “விசுவாசமாக” இருக்க வேண்டும் என்ற முயற்சியின் ஒரு பகுதியாகும் என்று பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இந்தக் குறிப்பைக் குறிப்பிட்டு, சி.பி.ஐ. (எம்) மத்தியக் குழு உறுப்பினர் ஏ.கே.பாலன் திங்கள்கிழமை கூறுகையில்: “எங்கள் கட்சி பா.ஜ.க அரசாங்கத்தை ஒரு பாசிச ஆட்சியாக ஒருபோதும் மதிப்பிட்டதில்லை. பாசிசம் வந்துவிட்டதாக நாங்கள் ஒருபோதும் சொல்லவில்லை. பாசிசம் நம் நாட்டை அடைந்தால், அதன் அரசியல் அமைப்பு மாறும். அத்தகைய சூழ்நிலையை நாங்கள் அடைந்துவிட்டதாக நாங்கள் கருதவில்லை. நாட்டில் பாசிசம் வந்துவிட்டது என்பது சி.பி.ஐ மற்றும் சி.பி.ஐ (எம்.எல்)-ன் பார்வை.” என்று கூறினார்.

இந்தப் பிரச்சினையைப் புரிந்துகொண்டு, சி.பி.ஐ (எம்) மீது காங்கிரஸ் விமர்சனன்களை வைத்துள்ளது. ஏப்ரல் 2026-ல் நடைபெறவிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க ஆதரவாளர்களின் வாக்குகளைப் பெறுவதற்கான கட்சியின் "தந்திரத்தின்" ஒரு பகுதியாக சி.பி.ஐ (எம்)-ன் குறிப்பு இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறினார்.

“2021 தேர்தலில், பா.ஜ.க வாக்குகளைப் பயன்படுத்தி சி.பி.ஐ. (எம்) கேரளாவில் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டது. மோடி ஆட்சி பாசிசமோ அல்லது நவ-பாசிசமோ அல்ல என்ற இந்தக் குறிப்பு, வரவிருக்கும் தேர்தலில் பா.ஜ.க வாக்குகளைப் பெறுவதற்கான ஒரு நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகும். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆகியவை பாசிசமானவை அல்ல என்று சி.பி.ஐ. (எம்) கண்டறிந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது, மேலும் இது சி.பி.ஐ. (எம்) மற்றும் சங்க பரிவார் இடையே உள்ள உள்நோக்கங்களை வெளிப்படுத்துகிறது. கேரள முதல்வர் பினராயி விஜயன் இதுவரை பா.ஜ.க அல்லது மோடியை விமர்சிக்கவில்லை,'' என்று சென்னிதலா குற்றம் சாட்டினார்.

சி.பி.ஐ (எம்)-ன் இந்த வரைவுத் தீர்மனம் குறித்து வி.சி.க எம்.பி ரவிக்குமார் உடன் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுக்காக போனில் பேசினோம். அப்போது கூறியதாவது: “இந்த 11 ஆண்டுகளாக மோடியின் ஆட்சி வலதுசாரி - மதவாத - அதிகாரத்துவ சக்திகளை உறுதிப்பெற வைத்துள்ளது. அதில் நவீன பாசிசத்தின் கூறுகள் வெளிப்படுவது தெரிகிறது.

மோடி அரசு இந்துத்துவா சக்திகள் - பெரும் பணக்காரர்கள், பெரும் முதலாளிகளின் கூட்டணி என்கிறார்கள். அதனுடைய ஒரு பிரதிதான் மோடி அரசு. அதனால், நம்முடைய முதன்மையான நோக்கம் பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவா கார்ப்பரேட் கூட்டணியை தோற்கடிப்பதுதான் நம்முடைய முதன்மையான இலக்கு என்கிறார்கள். இதனுடன், பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இந்தியா கூட்டணி கட்சிகளுசன் சி.பி.ஐ எம் ஒத்துழைக்கும் என்கிறார்கள். 

இடது முன்னணி கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்) உள்ளிட்ட மற்ற கட்சிகள் மோடி ஆட்சியை பாசிச ஆட்சி என்று வரையறுத்து இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் (சி.பி.ஐ. எம்) மோடி அரசு பாசிச கூறுகள் கொண்ட ஒரு மதவாத பெரு முதலாளிகளுடைய பிரதி, இது ஒரு அதிகாரத்துவ அரசு (Authoritarian Government), இந்த நிலைப்பாடு பிரகாஷ் காரத் பொதுச் செயலாளராக இருந்தபோது சொன்ன நிலைப்பாடு. அதற்கு பொதுச் செயலாளரான சீதாராம் யெச்சூரி மோடி அரசை ஒரு பாசிச அரசு என்றார். இந்த வரிகளில் பிரகாஷ் காரத் - சீதாராம் யெச்சூரி இடையே வேறுபாடு இருந்தது. 

சீதாராம் யெச்சூரி மரணத்துக்குப் பிறகு, தற்போது பிரகாஷ் காரத் சி.பி.ஐ எம்-ன் தற்காலிக பொதுச் செயலாளராக உள்ளார். அடுத்ததாக கூட்டணி சேர்வது குறித்த நிலைப்பாடு இதில் இருந்துதான் வரும். 

காங்கிரஸ் பற்றி என்ன சொல்கிறார்கள் என்றால், மதவாதத்தை எதிர்த்தாலும் எந்த குரோனி முதலாளித்துவம் என்று சொல்கிறார்களோ அதை உருவாக்குகிற நவீன தாராளமய கொள்கையைத்தான் அவர்களும் ஆதரிக்கிறார்கள். அதனுடைய பொருளாதார கொள்கையில் அணுகுமுறையில் அவர்களிடம் வேறுபாடு இல்லை. இந்திய கூட்டணி கட்சிகளால் காங்கிரஸ் கட்சி 44 இடங்களில் இருந்து 100 இடங்களில் வெற்றி பெற்றுள்ளார்கள் என்றாலும், வட இந்தியா மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் தோல்வி அடைந்திருக்கிறார்கள், தெலங்கானா, கர்நாடாக  போன்ற தென் மாநிலங்களில் மட்டும்தான் அவர்களால் வெற்றி பெற முடிணந்திருக்கிறது.  ஆனாலும், எதிர்க்கட்சியாக காங்கிரஸ் எல்லா மதச்சார்பற்ற கட்சிகளையும் ஒருங்கிணைக்கக்கூடிய கடமை அவர்களுக்கு இருக்கிறது. காங்கிரஸ் உடன் அரசியல் கூட்டணி கிடையாது. அரசியல் கூட்டணி என்பது இடதுசாரி கட்சிளுடன் மட்டும்தான். கருத்தியல் அளவில் கூட்டணி. மற்றதெல்லாம் தேர்தல் கூட்டணிதான் என்று சொல்கிறார்கள்.

இதில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருக்கக்கூடிய ஒரு கட்சியினுடைய பிரதிநிதி என்கிற முறையில், எனக்கு தோன்றுகிற இரண்டு ஐயங்கள். பெரும்பாலானவர்கள், சாதாரணமானவர்கள்கூட இது ஒரு பாசிச அரசு என்று சொல்கிறார்கள். இதனுடைய அடக்குமுறைகள் மட்டுமல்ல, அனைத்து விதமான ஜனநாயக நிறுவனங்களும் வலதுசாரி போக்கு கொண்டவர்களால் கைப்பற்றப்படுகிறது.  சுயேச்சையான நிறுவனங்கள் எல்லாமே கைப்பற்றப்படுகிறது. தேர்தல் ஆணையம், நீதித்துறை எல்லாமே வலதுசாரி மனோபாவம் கொண்டவர்களால் கையகப்படுத்தப்படுவதைப் பார்க்கிறோம். பாராளுமன்ற நிறுவனங்கள் எல்லாமே தாக்குதலுக்கு உள்ளாகி நீர்த்துப் போக வைத்து, எந்த பொருளும் இல்லை என்கிற மாதிரி ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

கல்வியில் இருந்து பண்பாட்டினுடைய அனைத்துக் கூறுகளிலும் மாற்றி எழுதி வரலாற்றை திருத்துகிறார்கள். இன்னொரு பக்கம், அடக்குமுறையைப் பார்த்தால், மாற்றுக் கருத்து கொண்டவர்களை பல வருடமாக சிறையில் பூட்டி வைத்திருக்கிறார்கள்.     பீமா கொரேகான் போன்ற வழக்குகளில், யு.ஏ.பி.ஏ பிரிவுகளில் போடுவது அல்லது பி.எம்.எல்.ஏ வழக்குகளில் போடுவது, இ.டி-யை ஏவுவது. இப்படியான விசாரனை அமைப்புகளை ஏவி அவர்களை கொடூரமான முறையில் சித்ரவதைக்குள்ளாக்குவது, எந்த கருத்துரிமையும் இல்லை. நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற ஏ.பி ஷா போன்றவர்கள் சுட்டிக்காட்டுகிற நிலை இருக்கிறது. 

இந்த நிலையில், மோடி அரசு பாசிசக் கூறுகளைத்தான் கொண்டிருக்கிறது என்றால், அது இன்னும் அதிகாரத்துவ அரசுதான், அது இன்னும் பாசிச அரசாக ஆகவில்லை அப்படி என்றால், அது என்ன செய்தால் அது பாசிச அரசாக ஆகும் என்பதை அவர்கள் (சி.பி.ஐ எம்) தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும். எதை பாசிச அரசு என்று சொல்வது. 

பழைய காலத்து ஹிட்லர், முசோலினி அரசு வகை பாசிச அரசு என்றால், அது யூதர்களை பல்லாயிரக் கணக்கானோர்களை, லட்சக் கணக்கானோர்களை கொல்வது. உலக அளவில் நாடு பிடிப்பது, விரிவாக்கம் செய்வது இது எல்லாம் பாசிசத்துடைய நடவடிக்கை என்று சொல்வார்கள். ஒடுக்குமுறை, கடுமையான அடக்குமுறை, எதிர்த்து பேசுகிறவர்களை படுகொலை செய்வது என்று பாசிச அரசு இருந்தது. பாசிசம் அதை மட்டுமே சார்ந்து இல்லை. பாசிசத்தின் தன்மை அணுகுமுறை மாறி இருக்கிறது. அதைதான் நியோ பாசிசம் (நவ பாசிசம்) என்று சொல்கிறார்கள். நியோ பாசிசம் என்கிற நிலையை ஒத்துக்கொள்கிறார்கள். 

இருந்தாலும் அந்த நியோ பாசிசம் என்கிற நிலை இன்னும் முழுமையாக வந்துவிட்டது என்று சொல்வதற்கு என்ன தேவை. எது எப்படி இருந்தால் அதை நியோ பாசிசம் என்று சொல்வது அவர்கள் தெளிவுபடுத்தினால், மற்றவர்களுக்கும் அது குழப்பமில்லாமல் இருக்கும். 


இரண்டாவது, காங்கிரஸைப் பற்றிய இவர்களுடைய (சி.பி.ஐ எம்) மதிப்பீடு காங்கிரஸ் பற்றி இவர்களுடைய மதிப்பீடு, நியோ லிபரலிஸம், நவீன தாராளமயவாத பொருளாதாரக் கொள்கையை பின்பற்றுகிறது. ஆனால், காங்கிரஸ் ஒரு செக்யூலர் (மதச்சார்பற்ற) கட்சி என்று சொல்கிறார்கள். இது மார்க்சிய நோக்கில் முரண்பாடு கொண்ட ஒரு பார்வை. ஏனென்றால், நியோ லிபரலிஸமும் கம்யூனலிசமும் அதாவது பொருளாதாரத்தில் புதிய தாராளமயவாதக் கொள்கையும் பண்பாட்டில் வகுப்புவாதக் கொள்கையும் இரண்டும் ஒன்றொடொன்று இணைந்து இருக்கிறது. ஆனால், காங்கிரஸை நியோ லிபரலிஸக் கொள்கையுடனும் அரசியல் ரீதியாக செக்யூலராக இருக்கிறது, செக்யூலரிசத்தை ஆதரிக்கிறது என்று சொல்வது முரண்பாடாக இருக்கிறது. 

2011-ல் சீதாராம் யெச்சூரி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அப்போது, அவர் சி.பி.ஐ எம்-ன் பொதுச் செயலாளராக ஆகாத நேரம் அது. நியோ லிபரலிசக் கொள்கையைக் கொண்ட காங்கிரஸும் பா.ஜ.க-வைப் போலவே, அதே நிலையில் வைத்து அணுகவேண்டிய ஒரு கட்சி என்று கூறினார். 

மார்க்சிஸ்ட்டுகள், காங்கிரஸும் ஆட்சியைப் பிடிக்கக் கூடாது, பா.ஜ.க-வும் ஆட்சியைப் பிடிக்கக்கூடாது என்ற நிலைப்பாடு எடுத்தார்கள். இது யு.பி.ஏ 2011 கால கட்டத்தில் இருந்த நிலை. இப்போது அவர்கள் அதே மாதிரி நிலைப்பாட்டை எடுக்கிறார்களா என்பது தெரியவில்லை.

ஏனென்றால், காங்கிரஸ் ஒரு லிபரல் கட்சி என்றும் செக்யூலர் கட்சி என்று சொல்வது முரண்பாடாக இருக்கிறது. இதில் ஏதாவது ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும். காங்கிரஸ் நியோ லிபரலிசத்தை ஆதரிக்கிறது என்று சொன்னால் அது செய்க்யூலர் (மதச்சார்பற்ற) கட்சியாக இருக்க முடியாது. செக்யூலர் கட்சியாக தொடர்வது கடினம். 

எந்தவொரு கட்சியுமே புதிய தாராளவாத கொள்கையை ஆதரித்துக்கொண்டே, நாங்கள் மதச்சார்பற்ற கட்சியாக இருப்போம் என்பது தற்காலிகமாக சொல்லிக்கொள்ளலாமே தவிர, அது அங்கேதான் கொண்டுபோய்விடும். 

கேரள காங்கிரஸ், சி.பி.ஐ எம் வரைவுத் தீர்மானம் குறித்து சொல்வது அவர்களுடைய கட்சி தேர்தல் அரசியலுக்காக சொல்கிற கருத்து போல தெரிகிறது. தவிர, காங்கிரஸ் கட்சி, சி.பி.ஐ எம் கட்சியின் நிலைப்பாட்டை தீவிரமாக அணுகவில்லை. கேரளாவில் காங்கிரஸ்தான் எதிர்க்கட்சி. அதனால், அவர்கள் ஒரு எதிர்க்கட்சியாக மட்டும்தான் நடந்துகொள்கிறார்கள். 

சி.பி.ஐ எம் வரைவுத் தீர்மானம் தேசிய மாநாட்டில் நிறைவேற்றப்போகிற ஒரு தீர்மானம். அந்த கட்சியினுடைய ஒரு கொள்கை நிலைப்பாடு. இந்த தீர்மானம் நிறைவேறுமா என்று எனக்கு தெரியவில்லை. மோடி அரசு நியோ பாசிச அரசு அல்ல, அதிகாரத்துவ அரசு என்று அவர் நீண்ட காலமாக சொல்லி வருகிற ஒரு விஷயம். ஆனால், சி.பி.எம்-க்கு வெளியில் இருக்கிற இடதுசாரிகளும் சரி, சி.பி.எம்-க்கு வெளியில் இருக்கிறவர்களும் இதை ஏற்றுக்கொள்வார்களா என்பது எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஏனென்றால், அதைப் பற்றிய அதிர்ச்சிக் குரல்களை ஊடகங்களில் பார்க்கிறோம். கவிஞர் கே.சச்சிதானந்தம் போன்றவர்கள் விமர்சிக்கிறார்கள். இது ஒரு வரைவுத் தீர்மானம்தான். நிறைவேறாது, திருத்தம் கொடுப்பார்கள். இந்த தீர்மானம் மீது திருத்தம் மோடி அரசு ஒரு பாசிச அரசுதான் என்று வரும் என்று நான் நம்புகிறேன்” என்று ரவிக்குமார் கூறினார்.

Ravikumar Cpim

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: