Advertisment

பெரியார் பிறந்த நாளையொட்டி மாநில சுயாட்சி மாநாடு : திருமாவளவன் நடத்துகிறார்

சனநாயக சக்திகளை ஓரணியில் திரட்டும் அறைகூவலோடு பெரியார் பிறந்ததினத்தையொட்டி செப்டம்பர் 17-ல் மாநில சுயாட்சி மாநாட்டை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைக்கிறது.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
thirumavalavan

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைக்கும் மாநில சுயாட்சி மாநாடு செப்டம்பர் 17-ல் நடைபெற இருப்பதாக திருமாவளவன் கூறியிருக்கிறார்.

Advertisment

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கை :

மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்பது திராவிட இயக்கம் இந்திய சனநாயகத்துக்கு வழங்கிய கொடை. தற்போது மாநிலங்கள் அனுபவிக்கும் உரிமைகள் பெரும்பாலும் தமிழ்நாட்டின் போராட்டத்தால் விளைந்தவையே ஆகும். 1960 களில் தமிழ்நாட்டில் வெடித்தெழுந்த மொழி உரிமைப் பொராட்டத்தின் நீட்சியாக முன்வைக்கப்பட்டதே ‘ மாநில சுயாட்சி’ முழக்கம். 1960 களில் இருந்ததைவிட பல மடங்கு இப்போது மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன.

கூட்டாட்சித் தத்துவத்தைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு எல்லா அதிகாரங்களையும் மத்திய அரசில் குவிக்கிறார்கள். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கட்சி , ஒரே ஆட்சி என்ற நிலக்கு இந்தியாவைக் கொண்டுசெல்கிறார்கள். இப்படியே போனால் தற்போதுள்ள பாராளுமன்ற சனநாயக முறை ஒழிக்கப்பட்டு அதிபர் ஆட்சி முறை இங்கே வந்துவிடக்கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதனால்தான் ‘மாநில சுயாட்சி’ கோரிக்கையை மீண்டும் விடுதலைச் சிறுத்தைகள் முன்னெடுக்கிறது.

1960 களில் தமிழ்நாட்டில் மிகப்பெரிய கொந்தளிப்பை உருவாக்கிய இந்தித் திணிப்புக் கொள்கை இப்போதைய மத்திய அரசால் முன்னிலும் வலுவாகப் பின்பற்றப்படுகிறது. இந்தி மட்டுமின்றி மக்களால் பேசப்படாத சமஸ்கிருதத்தைத் திணிப்பதிலும் பாஜக அரசு முனைப்போடு உள்ளது. தமிழை மத்தியில் ஆட்சி மொழியாக்கவேண்டும் என்ற கோரிக்கை 50 ஆண்டுகளாக நிறைவேற்றப்படவில்லை. நீதிமன்ற மொழியாகத் தமிழை அறிவிக்கவேண்டும் என்ற சட்டபூர்வமான கோரிக்கையும் மதிக்கப்படவில்லை

மாநில பட்டியலில் இருந்த கல்வி அவசரநிலைக் காலத்தில் இந்திராகாந்தி அம்மையாரால் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இப்போது பள்ளிக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்விவரை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சென்றுவிட்டது. நீட் நுழைவுத் தேர்வால் தமிழக மாணவர்கள் படும் அவதி இதற்கொரு எடுத்துக்காட்டு. புதிய கல்விக் கொள்கையின்மூலம் இந்தி, சமஸ்கிருதத் திணிப்புக்கு மத்திய அரசு அடிகோலுகிறது. கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவருவதே இதற்கெல்லாம் தீர்வாகும்.

வருவாய்தான் மாநில அரசின் நிதி தொடர்பான தற்சார்பைத் தருவதாகும். வரி வருவாய்ப் பகிர்வில் கொஞ்சம் கொஞ்சமாக மாநிலங்களை வஞ்சித்துவந்த மத்திய அரசு இப்போது ஒரே நாடு, ஒரே வரி என்ற ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையின்மூலம் கொஞ்சம் நஞ்சமிருந்த நிதித் தற்சார்பையும் பறித்துவிட்டது. வறட்சி என்றாலும், வெள்ளம் வந்தாலும் மத்திய அர்சிடம் கையேந்தி நிற்கும் நிலை இனி சாதாரண காலங்களிலும் இயல்பான நடைமுறையாகிவிடும். ஜிஎஸ்டி மூலம் மாநிலங்களை யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு மாற்றிவிட்டது.

மாநிலங்களுக்கு இருக்கும் முக்கியமான அதிகாரங்களில் முதன்மையானது சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் அதிகாரமாகும். தேசிய புலனாய்வு அமைப்பு ( என்ஐஏ) ஏற்படுத்தப்பட்டதன்மூலம் சட்டம் ஒழுங்குப் பராமரிப்பிலும் மத்திய அரசு தலையிடுவதற்கு வழிசெய்யப்பட்டுவிட்டது. ஏற்கனவே சிபிஐ அமைப்பை மத்திய அரசு அரசியல் நோக்கத்தோடு பயன்படுத்துகிறது. மாநிலக் கட்சிகளை ஒடுக்குவதற்கு அதை ஏவுகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.

சுகாதாரம் என்பது மாநிலப் பட்டியலில் இருந்தாலும் ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைப்பதிலிருந்து மருத்துவக் கல்லூரிகளைத் துவக்குவது வரை மத்திய அரசைச் சார்ந்தே மாநிலங்கள் உள்ளன. நீட் தேர்வின் மூலம் மருத்துவக் கல்வி இப்போது முழுமையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் போய்விட்டது. அதில் மாநிலஙகளுக்கு இருந்த அதிகாரம் பறிக்கப்பட்டுவிட்டது.

இவை மட்டுமின்றி மேலும் அதிகாரக் குவிப்புக்கு மத்திய அரசு அடித்தளம் போடுகிறது. தற்போது மாநிலப் பட்டியலில் உள்ள நதிநீர் உரிமை, விளையாட்டு ஆகிய அதிகாரங்களையும் பொதுப் பட்டியலுக்கு மாற்றுவதற்கு மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. மாநில அரசுகளின் அதிகாரங்கள் பறிக்கப்படுவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும். கூட்டாட்சித் தத்துவத்தைக் குழிதோண்டிப் புதைப்பதாகும். இதை அனுமதிப்பது ஒரு சர்வாதிகார ஆட்சியை அனுமதிப்பதற்கு சமம்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உறுதியளிக்கப்பட்ட கூட்டாட்சித் தத்துவத்தை உயர்த்திப் பிடிப்பதும், மாநில உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலம் இந்தியாவின் சனநாயகத்தைக் காப்பாற்றுவதும் நமது உடனடிக் கடமைகளாகியுள்ளன. இவற்றை வலியுறுத்தி நாடு முழுவதுமுள்ள சனநாயக சக்திகளை ஓரணியில் திரட்டும் அறைகூவலோடு  செப்டம்பர் 17-ல் மாநில சுயாட்சி மாநாட்டை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைக்கிறது. மாநில உரிமைகளைக் காக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இக்களத்தில் அனைத்து சனநாயகச் சக்திகளும் அணிதிரள வேண்டுமாறு அழைக்கிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறியிருக்கிறார்.

Vck
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment