விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஞாயிற்றுக்கிழமை தமிழக முதல் அமைச்சரை சந்தித்த பிறகு, சென்னை மாநகராட்சி மேயர் பதவியை பட்டியல் இனத்தவருக்கு இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக ஊடகங்களிடம் கூறினார்.
தமிகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிற இந்த நிலையில், திருமாவளவனின் இந்த கோரிக்கை தமிழக அரசியலில் பெரும் கவனத்தை பெற்றிருக்கிறது.
சென்னை மாநகராட்சி மேயர் பதவியை பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்க வேண்டும் என்ற திருமாவளவனின் கோரிக்கையை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், “ஆதித்தமிழர்கள் அதிகம் வசிக்கக்கூடிய சென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவித்து ஆதித்தொல்குடி மக்களுக்குரிய பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டும் என்கிற கருத்தாக்கம் வலுப்பெற்று வருகிறது. அது மிக நியாயமானது; தார்மீகமானது. நாம் தமிழர் கட்சி அதனை முழுமையாக ஏற்று, வழிமொழிகிறது.
சென்னையின் பூர்வக்குடிகளே ஆதித்தமிழர்கள்தான்; சென்னை எனும் மாநகரமே ஆதித்தமிழ் மக்களுக்குச் சொந்தமானதுதான். அவர்கள் இன்றைக்கு மெல்ல மெல்ல நகரத்தின் தலைப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு அடிப்படை வசதிகளும், எவ்வித வாழ்வாதாரமுமற்ற கண்ணகி நகருக்கும், கல்லுக்குட்டைக்கும், செம்மஞ்சேரிக்கும் துரத்தியடிக்கப்பட்டு வலுகட்டாயமாகக் குடியமர்த்தப்படுகிறார்கள். வந்தாரை வாழ வைக்கும் இந்நிலத்தில் வந்தவர், போனவரெல்லாம் வசதியாக செம்மார்ந்த வாழ்க்கை வாழ்கிறபோது ஆதிக்குடிகள் சென்னையைவிட்டே அதிகாரத்தின் மூலம் விரட்டியடிக்கப்படுவது எதன்பொருட்டும் சகிக்க முடியாதப் பெருங்கொடுமையாகும்.
ஆகவே, அத்தகையப் பூர்வக்குடிகளுக்கானப் பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டும் பொருட்டு சென்னையைத் தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். மேலும், உள்ளாட்சித் தேர்தலில் நேரடியாகத் தேர்வுசெய்யப்படாது மறைமுகத்தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் ஏறக்குறைய 14,000 துணைத்தலைவர் பதவிகளுக்கும் இட ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசிற்குக் கோரிக்கை விடுக்கிறேன்” என்று கூறினார்.
சீமானின் இந்த கருத்தை பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆதித்தமிழர்கள் வாழும் சென்னையைத் தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும் - சீமான். சேட்டா சூப்பராய் பறஞ்சு. நீதன்னே எங்கள்டே தமாசு மனுசன். இது இ திவச காமெடியாணு.
— S.VE.SHEKHER???????? (@SVESHEKHER) November 18, 2019
திருமாவளவன் சென்னை மாநகராட்சி மேயர் பதவியை எந்த பின்னணியில் எந்த அடிப்படையில் பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் என்பது பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளரும் எழுத்தாளருமான கௌதம சன்னாவிடம் பேசினோம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழுக்கு கௌதம சன்னா பேசியதாவது: “இங்கே உள்ளாட்சித் தேர்தல் என்பது 1887 ஆம் ஆண்டிலேயே தொடங்விடுகிறது. உள்ளாட்சி தேர்தலில் சர் பி.டி.தியாகராயர் தோல்வியடைந்தபோதுதான் நீதிக்கட்சி தோன்றுகிறது. அந்த வகையில், ஒரு உள்ளாட்சித் தேர்தல்தான் நீதிக்கட்சி தொடங்குவதற்கு காரணம் என்று கூறலாம். அப்போது எல்லாம் அனைவருக்கும் வாக்குரிமை இல்லை. வரி செலுத்துபவர்கள் மட்டும் வாக்களிக்கலாம. அது படிப்படியாக அனைவரும் வாக்களிக்கலாம் என்று மாறியது. பிரிட்டிஷ் இந்தியாவில் நீதிக் கட்சியின் ஆட்சியில்தான் மெட்ராஸ் கார்ப்பரேஷன் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, மேயர் பதவி ஒரு ஆண்டு காலம்தான். அதன்படி, ஒவ்வொரு 7வது மேயரும் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அதன்படி மெட்ராஸ் மாநகராட்சியில் என்.சிவராஜ், ஜே.சிவசண்முகம் பிள்ளை, குசேலர் உள்ளிட்ட பட்டியல் இனத்தைச் சேர்ந்த தலைவர்கள் மெட்ராஸ் மாநகராட்சியின் மேயராக இருந்துள்ளனர். அவர்கள் காலத்தில் பல சாதனைகள் செய்யப்பட்டுள்ளன. இந்த சட்டத்தின் வரிசைப்படி மெட்ராஸ் மாநகராட்சியின் அடுத்த மேயர் ஒரு பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்தான் வரவேண்டியது.
அதோடு, அப்போது மேயரைத் தேர்ந்தெடுக்கும் முறை என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநாகராட்சி உறுப்பினர்கள் கூடி மேயரை தேர்ந்தெடுப்பார்கள்.
ஆனால், உள்ளாட்சித் தேர்தல் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் தொடர்ந்து 22 ஆண்டுகள் நடத்தப்படாமல் போனது. ஆனாலும், அந்த ரோஸ்டர் அப்படியேதான் இருந்தது. இதனைத் தொடர்ந்து 1996-இல் அன்றைக்கு முதல்வராக இருந்த திமுக தலைவர் கருணாநிதி உள்ளாட்சித்தேர்தல் சட்டத்தில் ஒருதிருத்தத்தை கொண்டுவந்து ரோஸ்டர்முறையை நீக்கிவிட்டு மேயருக்கான நேரடி தேர்தல் முறையை அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் அப்போது மு.க.ஸ்டாலின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து அப்போது தலித் செயல்பாட்டு கூட்டமைப்பு மூலம் கருப்பணன் ஐ.ஏ.எஸ். அதிகாரி மேயருக்கு போட்டியிட்டார். அப்போது நான்கூட அதில் செயல்பட்டுள்ளேன்.
அதுமட்டுமில்லாமல், சென்னயில் 50 சதவீதத்துக்கு மேல் தலித்துகள் மக்கள்தொகை இருந்தனர். அரசு படிப்படியாக தலித்துகளை சென்னையில் இருந்து வெளியேற்றி தலித்துகளின் மக்கள்தொகையை குறைத்துவிட்டது. இருப்பினும் இன்றைக்கும் சென்னை மாநகராட்சியில்தான் தலித்துகள் அதிக அளவில் உள்ளனர்.
இப்படியான சமூகநீதி வரலாற்றுத் தொடர்ச்சியின் அடிப்படையிலும் மக்கள் தொகையின் அடிப்படையிலும்தான் திருமாவளவன் சென்னை மாநகராட்சி மேயர் பதவியை தலித்துகளுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல், நேரடியாக மேயரைத் தேர்ந்ந்தெடுக்கும் முறையில் தனிப்பட்ட முறையிலும் கட்சி சார்பிலும் மாற்றுக்கருத்து உள்ளது. பிரதமரையோ, முதலமைச்சரையோ நேரடியாக தேர்ந்தெடுக்கப்படாதபோது மேயரை மட்டும் மக்கள் நேரடியாக தேர்ந்தெடுப்பது சட்டத்திற்கு எதிரானது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் கூடி மேயரை தேர்ந்தெடுக்க வேண்டும். இதன்படி மேயர் தவறு செய்தால் அவரை நீக்கும் அதிகாரம் உறுப்பினர்களுக்கு இருக்கும். ஆனால், மேயர் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதால் ஒற்றைத்தன்மையான ஏதேச்சதிகாரம் நிலவுகிறது. அதனால், மேயரை கவுன்சிலர்களால் தேர்ந்தெடுக்கப்படும் முறையையே கொண்டு வர வேண்டும்.
திருமாவளவனின் கோரிக்கையை சமூக நீதி பற்றியோ, அரசியல் பற்றியோ ஒன்றும் தெரியாத நகைசுவை நடிகர்கள் விமர்சிப்பதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. எங்கள் கோரிக்கையை ஆதரிக்கும் கட்சிகள் தலைவர்களுடன் இதனை முன்னெடுப்போம்” என்று கூறினார்.
திருமாவளவன் கோரிக்கை குறித்து, திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், “எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் தொடர்ந்து 22 ஆண்டுகள் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்த சூழலில் திமுக தலைவர் கருணாநிதிதான் உள்ளாட்சித் தேர்தலை நடத்தினார். அந்த தேர்தலில்தான் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட பஞ்சாயத்து ராஜ் சட்டம் திருத்தப்பட்டு ஒராண்டாக இருந்த மேயர் பதவியின் காலத்தை நீட்டித்து மேயரை மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கும் வகையில் வழி செய்யப்பட்டது.
அதோடு, உள்ளாட்சித் தேர்தலில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி வார்டுகள் வரையறை செய்யப்பட்டு அதன்படி சென்னை மாநகராட்சி தலித்துகளுக்கு ஒதுக்க வேண்டியிருந்தால் திருமாவளவனின் கோரிக்கையை நாங்கள் வரவேற்போம். அதற்கு சென்னை மாநகராட்சி வரையறையில் மக்கள் தொகை விகிதப்படி பட்டியல் இனத்துக்கு ஒதுக்கிடு செய்யப்பட்டால் நாங்கள் வரவேற்போம்” என்று கூறினார்.
சென்னை மாநகராட்சி மேயர் பதவியை எஸ்.சி பிரிவுக்கு ஒதுக்க வேண்டும் என்று திருமாவளவன் கோரிக்கை குறித்து கருத்து தெரிவித்த, பாஜக மாநில செயலாளர் கே.டி.ராகவன், “சென்னை மாநகராட்சி மட்டுமல்ல, எல்லா மாநகராட்சிலும் சட்டப்படி இடஒதுக்கீடு செய்ய வேண்டும். மாநகராட்சியானாலும், சட்டமன்ற தொகுதியானாலும், மக்களவைத் தொகுதியானாலும் சட்டப்படி இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால், அப்படி செய்யப்படவில்லை. அதனால், சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படி இடஒதுக்கீடு செய்ய வேண்டும். சட்டப்படி சென்னை மாநகராட்சி தலித்துகளுக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டால் அதை வரவேற்கிறோம். அது மட்டுமில்லாமல், மேயரைத் தேர்ந்தெடுக்கும் முறை அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளின் ஆட்சிக் காலத்திலும் மாற்றப்பட்டுள்ளதால் அதிலும் இப்போது எந்த முறையில் நடைபெறும் என்பது மக்கள் மத்தியல் குழப்பம் நிலவுகிறது. அதனால், எல்லாமே சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படி செய்ய வேண்டும்” என்று கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சி.மகேந்திரன் கூறுகையில், திருமாவளவன் கோரிக்கையில் உள்ள நியாயங்களை கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. பழைய ரோஸ்டர் முறைப்படி தலித் ஒருவர் சென்னை மாநகராட்சியின் மேயராக வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்றால் அதை வரவேற்கிறோம்.” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.